Total Pageviews

Saturday, September 24, 2011

லங்கா-தகனம்--------ஓர் யோக ஆய்வு






மாஸ்டர், நமது புராணங்கள் உண்மையா? , ராமன், கிருஷ்ணன் போன்ற கடவுளர்கள் பொய்யா? ...எத்தனையோ கேள்வி கேட்டுட்டேன். இதுக்காவது பதில் எழுதுங்க மாஸ்டர்!.............தனலட்சுமி











ஞானபூமி என உலக ஞானிகளால் போற்றப்படும் நம் பாரதத்தின்பழம்பெரும் இதிகாசங்களும் புராணங்களும் கதைகளா? அல்ல உண்மையில் நடந்தேறியவையா? என ஆராய்வதை விட அந்த இதிகாசப் புராணங்களுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் யதார்த்த, நடைமுறை வாழ்வுக்குத் தேவைப்படும் தத்துவங்களை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதே யோக யுவ கேந்திராவின் நோக்கம்.

நமது யோகிகளும், ஞானிகளும், ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித வாழ்வுக்குத் தேவையானத் தத்துவங்களையே இதிகாசப், புராணமாக்கினார்கள். 

மனிதர்கள் மனிதர்களாக வாழ்ந்த காலத்தில் புராணங்களுக்கும், இதிகாசங்களுக்கும் தேவை ஏற்படவில்லை. மனித மனம் விகாரமாகி காமவயப்பட்டபோது அதில் துன்பமும் குடியேறியது. தாம்பத்யம் மட்டுமே காமம் என நினைக்க வேண்டாம் நண்பர்களே! மனம் தன் நிலையிலிருந்து வெளிமுகமாகிப் பிறிதொருப் பொருளின் மீது, உலகப்பொருள்களின் மீது மையல் கொள்வதையும் காமம் என்றே நமது யோகிகள் கருதினார்கள். 

வெளிமுகமாகிய மனத்தினாலேயேத் துன்பம் ஏற்படுகிறது என்பதைத் தனது தவப்பயனால் உணர்ந்து கொண்ட ஞானிகள், தாம் கண்ட உண்மைகளையும் இந்த மாயா மனத்தை மீண்டும் உள் முகமாகத் திருப்பும் யுக்திகளையும் நமக்காகச் சூத்திரங்களாக்கி யோக சூத்திரங்கள் எனும் பெயரில் கொடுத்தார்கள். 

ஆனால் இந்த சூத்திரங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய மேம்பட்ட அறிவு எல்லோருக்கும் வாய்த்திருக்கவில்லை. எனவே இந்த சூத்திரங்களைத் தொகுத்துக் கொடுத்தவர்கள் மறைபொருளாளர்கள் என்று கருதியதொடு மட்டுமில்லாமல் புரட்சிக்காரர்கள், என்ற பட்டம் சூட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள். சிலர் தூக்கிலிடப்பட்டர்கள். எனவே மனதை வசப்படுத்தும் இந்த சூட்சும அறிவியலைப் பக்குவப்பட்டவர்களின்றி மற்றவர்களுக்கு மறைமுகமாக புராணங்களாகவும், இதிகாசங்களாகவுமாக வெளிப்படுத்தினர் யோகிகள். 

புராணங்களிலுள்ளக் கதாபாத்திரங்களைக் கடவுளர்களாகவேப் பார்க்கும் பக்தியும், புராணங்களை வெறும் கதைகளாகப் பார்க்கும் பரிகாசப் பக்குவமும், யோகத் தத்துவங்களாகப் பார்க்கும் விசாரமும், பகுத்தறிவு எனக் கூறிக்கொண்டு புராணங்களைப் புரட்டுகளாக நோக்கும் அனாயசமும் அவரவர் மன நிலைக்கு உட்பட்டது. 

அறிவு நிலையில் உயர்ந்த மனிதன் இன்னும் கண்டுபிடிக்க முடியாத ஒரே ரகசியம் மரணம் பற்றியதே. அவன் தன்னுடைய அறிவைக்கொண்டு உணர நினைப்பதும் ..மரணம் தாண்டிய உணர்வைத்தான்.......... 

ஆதி மனிதர்களும் இதையே எண்ணியிருக்கக் கூடும். 

மரணம் பற்றிய உண்மைகளை உணர்ந்தவர்களே அக்காலக் கதாநாயகர்களாகப் போற்றப்பட்டனர். நாளடைவில் அக்கதாநாயகர்களுக்கு தனி மனிதத்துதி நடந்தேறி, ஆலயங்களும் நிறுவப்பட்டது. 

எந்த இதிகாசமும்,புராணமும்,தத்துவமும் மனிதனின் உடல்,உள்ளம,உயிர், கடந்து ஆன்மாவை உணர்வதற்காகத்தான் சொல்லப்பட்டவையே என்பது என் கருத்து. 


கண் இல்லாதவர்,காது கேட்காதவர், வாய் பேச முடியாதவர்,சிந்திக்க முடியாதவர் இவர்களுக்கானக் கடவுளைப் பற்றி எனக்கு சொல்லுங்கள்" எனப் பக்த மார்க்கண்டேயன் நந்தியம்பெருமானிடம் ஒரு வரம் யாசித்தானாம் 


விஷயம் இதுதான். 



பார்வை உள்ளவர்கள் தம் கடவுள் என்று ஒரு உருவத்தை காட்டி விட முடியும். பேசக்கூடியவர்கள் குறைந்தது ஒரு திருப்பெயரையாவது சொல்லிவிடக்கூடும்.பார்க்கவும்முடியாமல்,பேசவும்முடியாமல்,
கேட்கவும் முடியாமல் வாழும் மனிதர்களுக்கும் கடவுள் இருக்கிறான் எனில் அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற மார்க்கண்டேயனின் ஆர்வமும் அக்கறையும் பாராட்டத்தக்கது. 

இராமாயணக் கதையை "மேம்பட்ட அறிவுடைய" ஒரு மாணவருக்கு நான் சொல்ல நேரிட்டால் இப்படித்தான் சொல்லுவேன். 

ஒரு ஊரில் மூன்று பேர் இருந்தாங்க! இரண்டு பேர் ஆண், ஒருவர் பெண். ஒரு ஆணோட பேரு அறிவு, இன்னொருத்தனோட பேரு உடம்பு, அந்தப் பெண்ணோட பேரு மனசு. 

இந்த மூன்று பேரும் சேர்ந்து ஒரு தூரதேசத்துக்குப் பயணப்பட்டாங்க. நடந்தே போனாங்க, நாடு நகரம் கிராமம் எல்லாம் கடந்து நடந்து போயிட்டே இருந்தாங்க திடீர்னு பார்த்தாப் பாதையேத் தெரியாத மாதிரி ஒருபக்கம் கல்லும் முள்ளும் மண்டிக்கிடக்குது, இன்னொரு பக்கம் பெருக்கெடுத்து வெள்ளமா ஓடுது, எல்லோரும் எந்த பக்கம் போறதுன்னு தெரியாம விழிக்கிறாங்க. 

அறிவு யாருக்கும் தொந்தரவு தராம போகணும்னு யோசிக்குது. 

உடம்பு தனக்குக் காயம் எதும் ஆயிடாம இருக்கணும்னு யோசிக்குது. மனசு தனக்கு எவ்வித துன்பமும் வந்திடாம இருக்கணும்கிறதுல குறியா இருக்கு. 

அறிவு யோசிச்சி ஒரு முடிவு பண்னி இந்த பக்கமா போகலாம்னு சொல்லுது, அதைக்கேட்ட உடம்போ, நான் மாட்டேம்பா. அந்த வழி போனா எனக்கு கீறல் காயம் உண்டாகும்னு சொல்லுச்சி, . மனசு கேக்கவே வேணாம் அந்த வழியில "நான்" வரவே மாட்டேன்னு, ஒரே அடம். 

கடைசியில் மனசு பிடிவாதமா ஒரு பாதயைக் காட்டி இந்த வழிதான் எனக்கு சரின்னு தோணுது அதுலதான் எல்லோரும் போகனும்னு சொல்ல,அறிவும்,உடம்பும் வேற வழி இல்லாம பயணப்பட்டாங்க." 

அந்தப் பயணத்துல சோதனைக்கு மேல சோதனை. மனசு ஒரு பக்கம் போயிடுச்சி. உடம்பு ஒரு பக்கம் போயிடுச்சி.அறிவு படாத பாடு பட்டுடிச்சி. 



அந்த அறிவுதான் ராமன். உடம்புதான் லட்சுமணன்- மனசுதான் சீதை" 



மனசு சொல்வதை அறிவு கேட்டு நடந்த கதைதான் ராமாயணம். ஆனால் நாம துக்கப்படாம சந்தோசமா இருக்கணும்னா, அறிவு சொல்வதை மனசு கேக்கணும். அதுக்கு என்ன செய்யணும்னு கேக்கிறீங்களா?........ அந்த அறிவை 'மேம்பட்ட அறிவா" மாத்திக்கணும். அதற்கான பயிற்சி முறைகளை உள்ளடக்கிய அறிவியல்தான் "யோகம்" 



ராமன் பேரறிவுக்கடவுள். தம்பி லட்சுமணன், ராமனை உடல் மாதிரிப் பிரியாதவன். .சீதை ஆசை எனும் மாயையில் சிக்கி அறிவைத் திண்டாட வைத்த மனம். 



இந்த ராம காவியத்தை உடலோடு தொடர்பு படுத்தி என்னால் அக்குவேரு ஆணிவேராகப் யோகப் படையிலிட முடியும். 



உதாரணத்துக்கு ராமாயணத்துல இருந்து ஒரு காட்சி. 

ராவணன் சீதையைத் தூக்கிட்டுப் போயிட்டான். ராமன் பொண்டாட்டியைக் காணாத சோகத்துல?!.... நொந்து போயிருக்காரு. ஜடாயு ஒரு திசையைக் காட்டிட்டுச் செத்துடுறாரு. அந்தத் திசையில ராமன் அனுமனை அனுப்பி வைக்கிறாரு. அனுமன் இலங்கைக்குப் போனான் சீதையைப் பார்த்தான். கணையாழியைக் குடுத்தான். தன் நெஞ்சைத் திறந்து காட்டினான். திரும்பி வரும்போது அந்த இலங்கைக்கேத் தீ வச்சிட்டான்.. 



இதிலிருந்து ஒரு உண்மையை நாம் உணர வேண்டியதிருக்கு. 



ராவணன் வில்லன். சீதை கதானாயகி. ராமன் கதானாயகன்.அனுமன் வெறும் குணசித்திரம்தான். 



இலங்கா தீவுக்கு நெருப்பு வைக்கும் உரிமை பாதிக்கப்பட்ட பெண் அப்படிங்கற முறையில சீதைக்குத்தான் உண்டு. சரி, பரவாயில்லை சீதை பெண் என்பதால் முடியவில்லை என வைத்துக் கொண்டாலும்கூட பாதிக்கப்பட்டப் பெண்ணின் கணவர் அப்படிங்கற முறையில் சீதையின் கணவன் ராமன் கொளுத்தி இருக்கலாம். சீதையும் இல்லாம ராமனும் இல்லாம போனா லட்சுமணனாவது எரிக்கலாம். ஏன்னா இரண்டு பேருக்குமே அவன் ரத்த சம்மந்தம் உள்ளவன். ஆனா ஆஞ்சனேயன் ஏன் இலங்கையை தகனம் செய்யணும். இது என் கேள்வி..? 



என் முடிவுப்படி ராமாயணத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும் நம் உடலில் உள்ளார்கள் என்பதே உண்மை. 



அறிவு நிலையில் நாம் ராமனாகவும், கடமை நிலையில் லட்சுமணனாகவும், காமவசப்படுகையில் ராவணனாகவும்,மாயை வசப்படுகையில் சீதையாகவும், பிரம்மசர்யம் அனுஷ்ட்டிக்கையில் அனுமனாகவும் ஆகிறோம். 



இந்த இடத்தில் ஒரு முக்கியமான விசயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். நண்பர்களே! காமம், என்பதையும், பிரம்மசர்யம் என்பதையும் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. மறுபடியும் கூறுகிறேன் காமம் என்பது தாம்பத்யம் மட்டுமல்ல, மனம் தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வெளிக்கிளம்பி பிற உலகப்பொருள்களின் மீது மையல் கொள்வதும் காமம் எனவேக் கருதப்படுகிறது. மனம் தன்னுடய மூலமாகிய பிரம்மனைச் சார்ந்து இருப்பதே பிரம்மச்சர்யம். ரமண வழியில் சொல்வதாக இருந்தால் "உதித்த இடத்தில ஒடுங்கியிருப்பதே" பிரம்மசர்யம். 



ஆக நம் உடம்பின் காமத்தை அழிக்க வல்லது பிரம்மச்சர்யம் மட்டுமே. அதனால்தான் லங்கா தகனம் அனுமனால் நடந்தது. லங்கா தகனம் என்பது சிவன் மன்மதனை எரித்ததற்கு ஒப்பானது... 



சென்னையில் உள்ளவர்கள் யாராய் இருந்தாலும் நங்கனல்லூர் ஆஞ்சனேயரைக் கண்டிப்பாகத் தரிசித்து இருப்பார்கள். 

ஆஞ்சனேயரின் பெயர் என்ன தெரியுமா? 

"ஆதி வியாதி ஹர ஆஞ்சனேயர்" 

ஆதி வியாதி எது? மனிதனுக்கு ஏற்பட்ட ஆதி வியாதி-'காமம்' 

ஆதி வியாதியை அறுப்பவன் அனுமன். . 

காமத்தைத் தீயிட்டு எரிப்பவன் அனுமன். 

அனுமன் நாம் பின்பற்றவேண்டிய பிரம்மச்சரியத்தின் ஒப்பில்லாத குறியீடு. 

மனமாகிய சீதை, பேரறிவான, ராமன் மீதே மையல் கொள்ள வேண்டும். அதை விட்டு மாயமான் மீது மையல் கொண்டதால் ஏற்படும் துக்கத்தை துடைக்கத் தூதுவனான அனுமன் தேவைப்படுகிறான். காமமாகிய 'உலகப்பற்றை" நீக்கி மனத்தை உள்முகப்படுத்தி பிரம்மத்தில் சார்ந்து நிற்க வாயுவின் மகனான அனுமன் தேவைப் படுகிறான். 

காமமும், ஆசையும் வாசத்தின் மூலம் வரக்கூடியது. அதனால்தான் அனுமன் வாயுவின் மகனாக்கப்பட்டு- காமத்தை உருவாக்கும் வாசத்தை ---சுவாஸத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அகற்றுகிறான். 

லங்கா தகனம்னா என்னன்னு கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால்!

யோக உடற்கூறுத் தத்துவப்படி, ஒரு மனிதனின் உடல், மற்றும் உள்ள ஆரோக்கியத்திற்குப் பொறுப்பாவது யோகச்சக்கரங்களே, சப்தச் சக்கரங்களில் கீழ் நிலையிலுள்ள மூன்று சக்கரங்களே உலகப் பற்றிற்குக் காரணமாகிறது. எனவேதான் இந்த மூன்று சக்கரங்களையும் "போகச் சக்கரங்கள்" என்கிறோம். இந்த மூன்று சக்கரங்களையும் சுத்தப்படுத்துவதால் மட்டுமே காமமாகிய உலகப்பற்றுகளிலிருந்து விடுபடமுடியும். இந்தச் சக்கரங்களைச் சுத்தப் படுத்த சுவாசமாகிய அனுமனாலேயே முடியும். 

நமது உடலில் தலைப்பகுதியே வடதிசை, நாபிக்குக் கீழுள்ளப் பகுதியே தென்திசை. இந்தப்பகுதியிலுள்ள மணிபூரகம், சுவாச அதிஸ்டானமாகிய சுவாதிஷ்டானம், மூலாதாரம் போன்ற பகுதிகளே தென்னிலங்கை. இந்தக் கீழ்நிலைச் சக்கரங்களைச் சுவாசப்பயிற்சியினால் சுத்தப்படுத்துவதே லங்காதகனம். 


இதனையேப் பட்டினத்தாரும்,

"முன்னை இட்டதீ முப்புரத்திலே
பின்னை இட்டதீ தென் இலங்கையில் 
அன்னை இட்டதீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே" என்கிறார்.


ஒளவையாரும் இதனையே,

"மூலாதார மூண்டெழு கனலைக் 
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே" என்கிறார்.

ராமனையும், கண்ணனையும் நமது உள்ளத்தில் உணர, "விசுவாசம்" வேண்டும். ஆம் நண்பர்களே "விஷேசமான-சுவாசம்" வேண்டும். அந்த விசேஷ சுவாசப்பயிற்சியே "மேம்பட்ட அறிவை" உண்டாக்கி ராமனையும், கண்ணனையும் நமக்குள் அடையாளம் காட்டும்.

உண்மையை உள்ளத்தில் உணர்ந்து, உண்மையான ராம ஜென்ம பூமியில், நமக்குள்ளேயே, ராமனுக்கும், அனுமனுக்கும் கோவில் கட்டுவோம். 


உங்கள் சிந்தனைக்கு

  • சூர்ப்பனகையின் உடம்பில் எத்தனையோ அவயங்கள் இருக்க, ராமன் ஏன் சூர்ப்பனகையின் மூக்கை மட்டும் அறுத்தான்?
  • ஐந்தறிவு உடைய வானரம் "பேரறிவுக்கடவுளான ராமனுக்குத் தூது போவது சாத்தியமா?
  • "ஜடாயு" என்பவர் யார்?
  • வசிஷ்டர் ராமனுக்கு உபதேசம் செய்த "பலா, அதிபலா" மந்திரத்தின் பொருள் என்ன?
  • அகத்தியரால் ராமனுக்கு உபதேசம் செய்யப்பட்ட "ஆதித்ய ஹிருதயத்தின் " பொருள் என்ன?



5 comments:

gayathri said...

யோக யுவ கேந்திரா ராமாயணம் மிக அற்புதம் .இதை விட அற்புதமாக ராமாயணத்தின் சுக்ஷும பொருளை யாராலும் சொல்லவிடமுடியாது.மிக்க நன்றி மாஸ்டர்.

abarnavijay said...

Precious and valuable are your words about Ramayanam .I'm really wondered to know , what is meant actually by the character "Ramar" .
Master , Please explain all questions under "உங்கள் சிந்தனைக்கு"

Ram kumar said...

very intresting sir. also pls post ur answer for that questions...

Viji Raja said...

really amazing to read this article.my doubts were clarified & new doubts arouse on seeing your questions.as usual we could not find the answer.pls clear it off by posting the answers.

vairam said...

Master please give details about mahabaratham also.

Post a Comment