Total Pageviews

Friday, April 22, 2011

சித்த பிரமை





இரவினில் உலகம் உறங்கி இருக்கையில்
இமைகள் மூடியும் உறக்கம் இல்லாமல்
தலையணை பாரம் தவிக்க வைக்க
தாங்கொணாத் துயரில் கண்கள் பனிக்க
இருட்டினில் எவரும் அறியாத வகையில்
இமைகளைத் தாண்டி துளிகள் வழிகையில்…


எங்கே இருக்கிறேன் நான்?
எப்படி அறிவேன் நான்…?


தேடல் என்பது சுகமானால் – தேடிப்
பெறுவது உண்மை என்றானால்
எத்தனை காலம் தேடுவது – அதை
எங்கே எப்படி நாடுவது…?


தாபம் என்பது தவறெனில்
விரகம் என்பது விபரீதமெனில்
அன்பு என்பது கனவெனில்
ஆசை என்பது துன்பமெனில்
பாசம் என்பது ஏமாற்றமெனில்
உறவுகள் என்பது வேசமெனில்
தனிமை என்பது சிறையெனில்
இளமையில் தனிமை கொடிதெனில்
இவ்வுலகம் என்பது மாயையெனில்
சிற்றின்பம் என்பது தவறெனில்
பேரின்பம் என்பது இறையெனில்
வாய்மை என்பது வெல்லுமெனில்
பொய்மை என்பது பொய்க்குமெனில்
உலகம் என்பது மேடையெனில் – அது
உயிர்கள் நடிக்கும் நாடகமெனில்


எதற்காக இந்த நாடகம்
யாருக்காக இந்த நடிப்பு…?
எதைக் கொண்டு வந்தோம்
எதைக் கொண்டு போகின்றோம்…?


கேள்விகள் ஆயிரம் தேனீக்களாய்
தேகம் முழுவதும் கொட்ட
அங்கம் எல்லாம் புண்ணாகி
ஒவ்வொரு செல்லும் வலித்தாலும்…
பதில்கள் என்றும் கிடைத்ததில்லை!


இறைவன் ஒருவன் இருக்கின்றானாம்
மதங்கள் அனைத்தும் போதிக்கின்றனவாம்
அவனைக் கண்டவரில்லையாம்…
கண்டு விண்டவரில்லையாம்…


சொர்க்கம் அது நல்லவருக்காம்
நரகம் அது பொல்லாதவருக்காம்


இரண்டையும் நேரில் கண்டவரில்லை
இறந்தபின் மீண்டு வந்தவரில்லை


எவரைத் தேடி நான் போவேன்…
எப்படி என் துயரம் தீர்ப்பேன்?

பிறந்தது தவறெனில்

தவறுக்குத் தண்டனை முறை…
ஆனால் தண்டனை எத்தனை முறை?


ஒரே தவறுக்குத் தண்டனை
உயிர் வாழும் வரையென்றால்…
எத்தனை உயிர் நான் எடுக்கவேண்டும்?
எத்தனை முறை நான் சாகவேண்டும்?

எல்லாம் சேர்ந்து அழுந்த
கனத்த மனதோடு தனிமையில்
வாடும் பல நாட்களில்…
ஒரே ஒரு நாள்…
ஒரே ஒரு கேள்வி…


உயிரின் தேடுதல் உணர்ச்சி
தவறிய மனதின் குற்றவுணர்ச்சி
தவறா ?


எதற்கோ ஏங்கி ஏங்கி
எப்போதும் அடையாத விரக்தி
எதிலும் இல்லாத நாட்டம்
எவரும் இல்லாத வாட்டம்
தேடல் இல்லாத மாற்றம்
தேடிக் கிட்டாத ஏமாற்றம்


இத்தனையும் சிறு சிறு ஊசிகளாகி…
இதயத்தை துளைத்துச் சிதைத்துவிட்டதால்,
இல்லாத இறைவனிடம் நான்கேட்ட கேள்வி… 
உனக்காவது தெரியுமா உன்னை ?

2 comments:

gayathri said...

ஒவ்வொரு வரிகளும் அற்புதம் மாஸ்டர்.வாழ்வின் போராட்டம் ஓய்வது எப்போது ?

சித்த வைத்தியம் said...


அற்புதம்

Post a Comment