Total Pageviews

Friday, April 29, 2011

ஆவுடையக்காள்

சித்ரா பெளர்ணமிக்கு ரமணாஸ்ரமம் போயிருந்தபோது சந்திரமௌலி சாரை பார்க்க நேர்ந்தது.

"வாங்க சிவா, உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். உங்க ஊரு ஆவுடையக்காப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க"

”................................................................"

"என்ன சிவா ஆவுடையக்காப் பேரு கேட்டிருக்கேளா?”


"ஆவுடையக்கா, செங்கோட்டையைச் சேர்ந்த்தவர்கள்-னு தெரியும். அவங்களோட முழுவிபரம் தெரியல சார்."


“ செங்கோட்டை ஆவுடையக்காளைக் கேட்டதில்லையா? பாரதியாருக்கு முன்னோடி.ரமணபகவான் ஆவுடையக்காளின் பாடல்களை விரும்பி படித்திருக்கிறார், எனக்கும் இப்பத்தான் தெரிய வந்தது பாத்துகிடுங்கோ.”

செங்கோட்டைப் பகுதியில் நிறைய பேர் ஆவுடையம்மாள், ஆவுடையப்பன் எனும் பெயரில் இருக்கும் காரணம் என்ன என்பது எனக்குப் புரிய வந்தது. பிள்ளைமார் இனத்தைச் சேர்ந்தவர்களும், பிராமணக் குடும்பங்களிலும் இந்தப் பெயர் அதிகமாகக் காணப்படுகிறது.

ஊருக்கு வந்தவுடன் தம்பி ராஜேஜையும், திரவியத்தையும் தொடர்பு கொண்டு விசாரித்ததில் சில செய்திகள் கிடைத்தது. தென்காசி கோவிலில் மேலகரத்தில் வசிக்கும் ஒரு பெரியவரிடமிருந்து சிறு பிரசுரங்கள் கிடைத்தன. அந்தப் பெரியவர் ஆவுடையக்காளின் பாடல்கள், மணிப்பிரவாளத் தமிழ் நடையில் அமைந்துள்ள மொழி அமைப்பு என்றும் அக்காள் அத்வைதி என்றும், இளம் விதவை என்றும் துண்டு துண்டான தகவல்கள் சொன்னார்.


செங்கோட்டையில் நமது யோகயுவகேந்திரா இருந்த தெருவின் அருகில்தான் ஆவுடையக்காளின் பூர்வீக வீடு இருந்தது எனக் கேட்கும் போது எனக்கு சற்று வெட்கமாகவும், கஷ்டமாகவும் இருந்தது. 


இன்று காலை தற்செயலாகப் புத்தக அலமாரியைப் புரட்டும்போது "ஆவுடையக்காளின் பாடல்கள்" என் கண்ணில் பட்டதும் ஆனந்தம் கரை புரண்டோடியது. எனது உடற்கல்வி ஆசிரியர் திரு பாலசுப்ரமணியம் அவர்களிடம் இருந்து ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகப் பெறப்பட்டப் புத்தகம். சித்தர் பாடல்களில் எனக்கிருந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டு பால் சாரால் எனக்கு வழங்கப்பட்டப் புத்தகம்

(இந்த இடத்தில் ஆசிரியர் பாலசுப்ரமணித்தை நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை. முரட்டுத்தனமான உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்த என்னை யோகத்தின் முக்கியத்தை எடுத்துக்கூறி யோகப்பாதையில் மடைமாற்றி விட்டவர் இவர்தான். இன்று இவர் நம்மோடு இல்லை. காலம் புற்றுநோய் கொடுத்து இவரைக் கூட்டிச்சென்று விட்டது. என்னால் மறக்க முடியாதாத மனிதர்களுள் இவரும் ஒருவர். )

செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரஸ) பாடல் திரட்டு. 325 பக்கங்கள், டெமி அளவு, 2002 ஆம் ஆண்டுப் பதிப்பு, விலை ரூ 100.00, வெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிகேதன், ஸ்ரீ ஞானானந்த தபோவனம். தபோவனம் அஞ்சல் – 605 756. விழுப்புரம் மாவட்டம்.

சமர்ப்பணம் பகுதியில் ஸ்ரீ ஞானானந்த நிகேதனம், நித்தியானந்த கிரி சுவாமிகள், ஆவுடையக்காளை தமிழ் நாட்டின் பெருமை மிக்க பெண்டிர் ஞானிகளில் ஒருவர் என்றும், சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டத்து செங்கோட்டை தாலுகாவில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும் சொல்கிறார்.

மிகவும் சிறிய வயதிலேயே, வயதுக்கு வரும் முன்பே விதவையானவர். திருவிசை நல்லூர், ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் எனும் புகழ்பெற்ற மகானின் அனுக்கிரகமும் மந்திர தீட்சையும், வேதாந்த ஞான உபதேசமும் பெற்றவர், ஆத்ம அனுபூதியில் லயித்து, மௌனியாக, பித்த நிலையில் இருந்தவர், படித்தவர், படிக்காதவர் என எல்லோராலும் கொண்டாடப் பெற்றுப் பிரபலமடைந்தார், என்பது நித்யானந்தகிரி சாமிகளால் கூறப்படும் தகவல்கள்.

ரிஷிகேசம் ஸ்ரீ சிவானந்த சரஸ்வதி சுவாமிகள், ‘மகாத்மாக்கள் சரித்திரம்,’என்ற நூலில், “ஆவுடையக்காள் அருளிய அருட்பாக்களில் உபநிஷத்துகளின் ஆன்மீக உண்மையே தொடர்ந்து இழையோடுகின்றது,” என்கிறார்.

சிறுசிறு புத்தகங்களாக அவ்வப்போது பதிப்பித்து வெளியிடப்பட்ட ஆவுடையக்காள் பாடல்கள் பலவற்றையும் தொகுத்து வெளியிட்டவர் ஆய்குடி திரு.வெங்கட ராம சாஸ்திரிகள்.


பகவான் ரமண மகரிஷியின் முன்னிலையில் ஆவுடையக்காள் எழுதிய பாடல்கள் சிலவற்றைப் பாடுவது வழக்கமாக இருந்திருக்கிறது.


‘பிரம்ம மேகம்’ எனும் ஆவுடையக்காளின் சிறு பாட்டுப் புத்தகம், 1910-ம் ஆண்டுப் பதிப்பு, ஆவுடையக்காள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்தார் என்ற குறிப்புத் தருவதால், ஆவுடையக்காள் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம். ஆனால், நாம் விவாதிக்கும் மேற்சொன்ன நூலின் சமர்ப்பணப் பகுதியில், நித்யானந்தகிரி சுவாமிகள் ஆவுடையக்காள் 250 ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவர் என்கிறார். ஆய்குடி வெங்கடராம சாஸ்திரிகள் கூற்றுப்படி ஆவுடையக்காள் இன்றைக்கு 460 ஆண்டுகளுக்கு முந்தியவராக இருக்க வேண்டும். அதை ஆய்வாளர்கள்களின் பணிக்கு விட்டுவிடலாம்.


ஔவையார், காரைக்காலம்மையார் வரிசையில் வைத்து எண்ணத்தக்க ஆவுடையக்காள் பாடல்களைச் செங்கோட்டைப் பிராமணப் பெண்கள், பாராயணமாகவும், கல்யாண காலங்களிலும் பாடுவார்கள். ஆனால் அது ஆவுடையக்காள் பாடல்கள் என்பது எனக்குத் தெரியாமல் போயிற்று. 


ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஆன்மீக எழுத்தாளர், காசியில் சிருங்கேரி மடத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்தவர் திருமதி.கோமதி ராஜாங்கம். ஆவுடையக்காளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து பாடல்களையும் தகவல்களையும் சேகரித்துள்ளார்.


“அக்காலத்து இளம் விதவைகளுக்கு அக்காளின் பாடல்களே தாரகம். மத்தியான உணவுக்குப் பின் பத்துப்பெண்கள் கூடிக் கொண்டு, அக்காளின் பாட்டைச் சொல்லிக் கொண்டு, தங்களுக்கே ஆறுதல் அடைந்து கொள்வது வழக்கம்”, என்கிறார்.


இந்த கோமதி ராஜாங்கம், மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் தங்கை மகள். அவர் ஒரு நூலில் தரும் தகவல் சுவாரசியமானது.


”ஸ்ரீ சுப்ரமணிய பாரதியார் அவர்களுக்கு ஸ்ரீஅக்காள் அவர்களின் பாடல்கள் என்றால் உயிர். அவரும் ஸ்ரீ அக்காளின் வரலாற்றை அறிய முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அவருடைய அநேகப் பாடல்களின் கருத்துக்களை ஒட்டியே அவரும் அநேக வேதாந்தப் பாடல்களை எழுதியிருக்கிறார். அவர் எனது தாயார் அவர்களின் சகோதரியின் கணவராகையால் சிறுவயதில் அவர் மூலமாகவும் சில தகவல்கள் அறியும் பாக்கியம் கிட்டியது,” என்கிறார் கோமதி ராஜாங்கம்.


ஆவுடையக்காள் வசதியான குடும்பத்தில், செங்கோட்டை ஆற்றங்கரைத் தெருவில் பிறந்தவர். பாவாடை கட்டத் தெரியாத வயதில் திருமணமாகி மஞ்சள் கயிற்றின் மணம் மாறுமுன் விதவையாகவும் ஆகிறார். சமுதாயத்தை எதிர்த்து நின்று கல்வி கற்றார். பருவம் அடைந்ததும் தலை மொட்டையடிக்கப்பட்டு , வெள்ளாடை அணிந்து, கைம்மை நோன்பு. ஸ்ரீ வெங்கடேச சாமியின் ஆசியால் ஞானம் பெறுகிறார்.


கதை அத்துடன் தீர்ந்து போகவில்லை. பிராமண இளம்பெண், கைம்மை நோற்பவள், ஞானம் பெற்றாள், பாடல்கள் எழுதுகிறாள் எனில் இருநூறோ, நானூறோ ஆண்டுகள் முந்தைய சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? கடும் தண்டனையாக ஜாதியாய் விட்டேத் தள்ளி வைக்கிறார்கள். சற்று யோசித்துப் பாருங்கள், ஜாதியை விட்டு ஒதுக்கப்பட்டுக் கன்னி கழிந்திராத இளம் விதவை எங்கு போவாள், எதை உண்பாள், , எங்ஙனம் உயிர் தரித்திருப்பாள்?


இறைப்பித்து பிடித்தவள் போல இருந்திருக்கிறாள், தீர்த்த யாத்திரை போயிருக்கிறாள், அத்வைதப் பாடல்கள் எழுதியிருக்கிறாள், உலக வாழ்க்கையில் போராடி இருக்கவும் வேண்டும்.


பின்பு அக்காளுடைய மகிமை ஊரெல்லாம் பரவி, செங்கோட்டை திரும்பி, ஊர்க்காரர்களிடம் மரியாதை பெற்று, வெகுகாலம் வசித்தும் இருக்கிறார். ஒரு ஆடி மாத அமாவாசை அன்று திருக்குற்றாலம் சென்று அருவியில் நீராடுகிறாள் ஆவுடை அக்காள். 


பின்பு பொதிகை மலைமேல் ஏறிச் சென்றாள் எனவும் என்ன ஆனாள் என யாருக்கும் தெரியவில்லை என்பதும் வரலாறு.


ஆவுடையக்காள் பாடல்களின் தாக்கத்தை சித்தர் பாடல்களில் காணமுடிகிறது.ஆவுடையக்காளின் ‘அத்வைத மெய்ஞ்ஞான ஆண்டி’ என்றொரு பாடல்.


’கடத்தை இடித்தால் தாண்டி
கடம் ஆகாசம் ஆகும் என்றாண்டி
புரத்தை இடித்தால் தாண்டி
பரிபூரணம் ஆகும் என்றாண்டி’ என்பது அக்காளின் வரிகள் . இதை படிக்கும்போது


’நந்தவனத்திலோர் ஆண்டி- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’ எனும் கடுவெளிச்சித்தரின் வரிகள் ஞாபகம் வருகிறது.


‘சப்த கோடி மந்திரம் சாஸ்திரங்கள் உள்ளதும் போச்சே
சத்துமயமான சாட்சியே நானென்ப தாச்சே’ என ஆவுடையக்காள் பாடிய பாடலோடு 
‘மண்வெட்டி கூலிதினல் ஆச்சே- எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே’ எனும்பாரதியின் பாடல் பாணியை ஒப்பிடலாம்.

‘ஜாதி வர்ணாசிரமம் போச்சே
வேத சாஸ்திரம் வெறும் பேச்சே’என்று அக்காள் பாடினால்,
‘ஜாதிச் சண்டை போச்சோ- உங்கள்
சமயச் சண்டை போச்சோ’ என்று பாரதி பாடுகிறார்.

‘காம குரோதமும் போச்சே
மோக இருளும் போச்சே’ என்று அக்காள் பாடுகிறாள், பாரதியோ,
‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே- வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே’ என்று பாடுகிறார்.

‘வேதாந்தக் கும்மி’ என்றொரு பாடலை ஆவுடையக்காள் பாடியிருக்கிறார்,
‘கும்மியடி பெண்கள் கும்மியடி
அகோர சம்சார சாகரத்தில்
ஜென்மக் கடலைக் கடத்தினவர் பாதம்
சிந்தித்துக் கும்மியடியுங்கடி- தினம்
வந்தித்துக் கும்மியடியுங்கடி’ என.
இத்துடன் பாரதியின் ‘பெண்கள் விடுதலைக் கும்மியை’ ஒப்பிடலாம்.

‘மனமும் பொய்யடியோ, குயிலே
மனக் கூடும் பொய்யடியோ
இனமும் பொய்யடியோ, குயிலே
தனமும் பொய்யடியோ!’ என்று’குயில் கண்ணி’யில் அக்காள் பாட்டு:

‘கோலமும் பொய்களோ- அங்கு
குணங்களும் பொய்களோ’. இது பாரதி

‘பாருக்குள் நபும்சகன் ஸ்த்ரீபோகம் புஜித்ததும்
பட்டணத்து அலங்காரம் பொட்டையன் கண்டதும்’
என்று அக்காள் பாடுகிறாள்
’நடிப்புச் சுதேசிகள்’ பாடலில் கிளிக்கண்ணிகளில், பாரதி,
சொந்த அரசும் புவிச்சுகங்களும் மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ- கிளியே
அலிகளுக்கு இன்பமுண்டோ?’
என்கிறார்.
அத்வைதத் தத்துவத்தில் அக்காளின் ஆளுமை மிகவும் வியக்க வைக்கிறது. ‘வேதாந்த அம்மானை’ பாடல்களில்,
‘அக்கினியை தூமம் மறைத்தாப்போல அம்மானை
அதிஸ்டானம் தன்னை மறைத்தாய் அம்மானை
பானுவை மேகம் மறைக்கும் அதுபோல
பரமார்த்தம் தன்னை மறைத்தாயே அம்மானை’
என்பதுவும்,
‘அன்னே பின்னே கும்மி’ பாடலில்,
‘என்னிடத்திலே யுதித்து என்னைப் பயமுறுத்தி
எனக்குப் பயந்தொளித்தது எங்கடி யன்னே’
என்பதுவும்,
‘சூடாலைக் கும்மி’யில்,
‘தேகத்தை விடும்போது தரிசனம் எனக்குத் தந்து
மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதே’
என்பதுவும் எடுத்துக் காட்டாய்ச் சில வரிகள். ‘மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு’ எனப் பாரதி பாடுவதும் நினைவில் வராமற் போகாது.

தூமைதூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்
ஆமைபோல முழுகிவந்து அநேகவேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.
என்று தீட்டு பற்றி சித்தர்களின் பாடல்களில் உள்ள வரிகள் உங்களில் பலருக்கும் நினைவில் இருக்கலாம்.இந்தப் பாடலுக்கு சமபாவத்தோடு

‘தீட்டு திரண்டு உருண்டு சிலைபோலே பெண்ணாகி வீட்டிலிருக்க
தீட்டு ஓடிப் போச்சோ- பராபரமே’ என்றும்
‘உக்கத்துப் பிள்ளையும் உன் கக்கத்துத் தீட்டன்றோ
உன்னுடைய வெட்கத்தை யாரோடு சொல்வேன் பராபரமே’

என்றும் வேகமாய்ப் பாடுகிறார் ஆவுடையக்கா.

அக்காள் சாதிப்பிரஷ்டம் செய்யப் பட்ட போது சாதி பேதமற்று வாங்கிப் புசித்திருப்பாள் போலும், எச்சில் உண்டிருப்பாள் போலும், எச்சிலுண்டதை யாரும் கேலி பேசி இருப்பார் போலும், அல்லது அவரது தத்துவ தரிசனம் போலும்! இதோ பாடல் வரிகள் ’பராபரக் கண்ணி’யில்.
‘எச்சிலெச்சில் என்று புலம்புகிறாய் மானுடர்கள்
எச்சில் இல்லாத இடமில்லை- பராபரமே
சில்லெச்சில் மூர்த்தி கையில் ஈ எச்சில் தேனல்லவோ
என்றைக்கும் உண்ணும் தாய் முலை எச்சிலன்றோ- பராபரமே
மச்சமெச்சில் நீரில் வந்து மூழ்கும் மறையோர்கள் எச்சில்
பச்சைக் கிளி கோதும் பழம் எச்சில் அன்றோ- பராபரமே
தேரை எச்சில் தேங்காய் சிறு பூனை எச்சில்
தேசமெல்லாமே எச்சிலென்றறிவேன் – பராபரமே
நாதமெச்சில் பிந்து எச்சில் நால்மறையோர் வேதம் எச்சில்
மந்திரங்கள் சொல்லும் வாய் எச்சிலன்றோ- பராபரமே
அண்ட பிண்ட லோகமெல்லாம் அடங்கலும் எச்சிலாச்சே
வண்ட மத வாதிகட்கு வாயுண்டோ- பராபரமே
……….. ………………. ……………………
எச்சிலுன் வாயும் உடலும் ஏகமாயிருக்கையிலே
பாதம் எச்சிலென்று அலம்ப சுத்தமாச்சோ- பராபரமே’
என்று வெகு உக்கிரமாய்ப் பாடுகிறார்.

இந்தப் பாடல்,
வாயிலே குடித்த நீரை எச்சில்என்று சொல்கிறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ?
வாயில் எச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே.
எனும் சிவவாக்கியார் பாடலை நினைவு படுத்துகிறது.

‘வேதாந்த நொண்டிச் சிந்து’ என்றொரு பாடல். அக்காள் பாடிய சில வரிகளை மட்டும் துண்டு துண்டாய்க் குறிக்கிறேன்.

‘சுவர்க்க நரகமென்னும் அல்ப பிசாசு வந்து அச்சுறுத்துகிறதே’
‘வனத்தில் துர்க்கந்தம் கடந்து வரவே வந்தாளே மதவாதியர்கள்
‘ஜாதி வர்ணங்களும் ஆசிரம தர்மமும் சாஸ்திர கோத்திர
சூத்ராதிகளும் க்ஷணிகத்தில் தகனமாய்ப் போச்சுதய்யா’
‘அனிருத்த மால’யில் அக்காளின் தத்துவ வீச்சு அபாரமாய் இருக்கிறது.
‘அம்புலியில் தெய்வமென்று சாதிப்பார் சீமையிலே
தாருவிலே தெய்வமென்று சாதிப்பார் வையகத்தே
தாமிரத்தை தெய்வமென்று சாதிப்பார் தரணியிலே
மிருத்யுவே தெய்வமென்று விடுவார் உலகினிலே
அப்புவே தெய்வமென்று ஆடுவார் தீர்த்தாதி
அக்கினியே தெய்வமென்று ஆகுதிகள் பண்ணிடுவார்’
என்று மொழியும் ஆவுடையக்காள் இறுதியாய்க் கேட்பது,
‘தத்துவமாம் மெய்ப்பொருளைத் தப்பவிட்டு நின்றோமோ?’ என்று.

தொடர்ந்து வரும் பாரதியின் கூற்று,

‘உண்மையின் பேர் தெய்வம்- அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்.’

அக்காள் சொல்வது,

‘தன்னைத் தானறிய வேணும் தத்துவத்தால்
தன்னைத் தான்றிய வேணும்’ என்று.


’ஞான ரஸக் கீர்த்தனைகள்’ என்று சாவேரி, நாதநாமக் கிரியா, பூபாளம், ஆன்ந்த பைரவி, ஆரபி, தோடி, கல்யாணி, மத்யமாவதி, மோகனம், சௌராஷ்ட்ரம், காம்போதி, தன்யாசி, சங்கராபரணம், யதுகுல காம்போதி, முகாரி, புன்னாக வராளி, பைரவி, சுருட்டி, கேதார கௌளம், சகானா என ஏகப்பட்ட ராகங்களில் இசை உலகுக்கும் ஆன்மீக உலகுக்கும் அக்காளின் கொடைகள்.


மக்கள் மொழியில் ஏராளமான பழமொழிகளைத் தடையின்றி எடுத்தாள்கிறார்.


"உறியில் தயிர் நிரம்பி இருக்க, ஊரில் வெண்ணெய் தேடுவார் போல".
"ஒக்கலில் பிள்ளையிருக்க ஊரிலெங்கும் தேடுவார் போல."
"மண்குதிரையை நம்பி மடுவில் இறங்குவார் போல."
"வெள்ளரிப்பழம் வெகுகாலம் இருக்குமென்று வெடிக்காமல் பூண் கட்டி வைப்பார் போல".
"எழுகடல் ஜலத்தையும் எறும்பொன்று குடித்ததும்".


எனப் பற்பல.


மோகன ராகத்தின் அனுபல்லவியில் ஆச்சரியமான மொழிப் பிரயோகங்கள்,

‘அம்மை இல்லாதொரு செல்வி பிறந்ததும்’
‘அப்பன் முலை குடித்து அபிவிருத்தி ஆனதும்’
‘கல்பசு கன்றுக்கு இரங்கிப் பால் கொடுத்ததும்’
‘காற்றைப் பிடித்துக் கண் கலசத்தில் அடைத்ததும்’

‘வேதாந்த வண்டு’, ‘அத்வைதத் தாலாட்டு’ என ஆன்மீகப் பாடல்கள் பல ஆவுடையக்கள் பாடியிருக்கிறார்

உண்மையில் அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என எதுவும் எனக்கு விரித்துரைக்கத் தெரியாது. ‘தத்வமஸி’யும் அறியேன், ‘அகம் பிரம்மாஸ்மி’யும் தெரியேன். ஆர்வமும் இல்லை தெரிந்து கொள்ள. ஆனால் ஆவுடையக்காள் நம் மாதிரிப் பாமரர்களுக்கு எனப் பாடி வைத்துப் போன பாடல்கள் என்னை யோசிக்க வைக்கிறது.

                                                      எந்தரு மகானு பாவலு
                                                      அந்தரிகின் வந்தனமுலு

1 comment:

abarnavijay said...

’கடத்தை இடித்தால் தாண்டி
கடம் ஆகாசம் ஆகும் என்றாண்டி
புரத்தை இடித்தால் தாண்டி
பரிபூரணம் ஆகும் என்றாண்டி -please explain master.

Post a Comment