Total Pageviews

Tuesday, April 12, 2011

மரணபயம்





மரணபயத்தை வெல்வது எப்படி?








'மரணம் குறித்த 

பயம் போய்விடும் 

ஒரே ஒரு முறை 

செத்துப் பார் "


என்று ஜென்னில் ஒரு கவிதை உண்டு. இதைத் தாண்டி மரணம் குறித்து வேறென்ன யோசிக்க வேண்டியதிருக்கிறது? உயரத்தில் உட்கார்ந்து யோசித்திருக்கிறார்கள். சரி, எவ்வளவுதான் உயரத்தில் உட்கார்ந்து யோசித்தாலும் இப்படியெல்லாம் கூடயோசிக்க வருமா? ஒருவேளை ஓரிரு முறை செத்து மீண்டும் எழுந்து வந்து மரண பயமற்ற தனது அனுபவத்தை எழுதியிருப்பார்களா? 



அண்ணாமலையில், நேப்பாள அவதூது ஒருவர் தொடர்ந்து கஞ்சா குடிப்பவர்.அவர் அருகில் சென்றாலே கஞ்சா வாசம் கமகமக்கும்.


"கஞ்சா ஒரு மாதிரி மயக்கத்தைத் தருமே ,தொடர்ந்து கஞ்சா குடித்தாலும் தெளிவா இருக்கீங்களே . உண்மைய சொல்லுங்க, கஞ்சா குடிப்பதினால் ஆன்ம விடுதலை கிடைக்குமா? "


கொஞ்சம் கஞ்சாவை உருட்டி என்னிடம் நீட்டினார். மிரண்டு போய் ஒதுங்கினேன். 

"எதையும் அனுபவிச்சுப் பார்த்து உணரனும்டா" 


மூன்று நான்கு வரிகள் கொண்ட எனது கேள்விக்கு நான்கே வார்த்தைகளில் பதில் சொன்னார். 


அனுபவித்துப் பார்த்தால்அது குறித்த தெளிவு உண்டாகும் என்கிறார் இவர். ஜென் குருவோ ஒருமுறை செத்துப் பார். மரணம் குறித்த பயம் நீங்கி ஆனந்தம் உண்டாகும் என்கிறார். 


கஞ்சா குடிப்பது மாதிரி ஒரு சராசரி அனுபவம்தான் மரணமா?

வலியற்றதா? 


" உறங்குவது போலும் சாக்காடு " என்கிறார்களே. மரணத்தை உறக்கம் மாதிரி ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ள முடியுமா?.


மரணம்,............ அனுபவமா?


ஜென் குறித்த சிந்தனையின்முடிவில்தான் நமக்கு நமது உயிரின் மேன்மையே தட்டுப் படுகிறது. மரணம் அனுபவிக்க வேண்டிய நிகழ்வா?


அப்படித்தான் போலும்.


ஆனால் மனிதர்களுக்கு மரணம் கசக்கிறது. மரண பயம் என்பது கசப்பினும் கொடூர கசப்பாகவேத் தோன்றுகிறது.


மனிதர்கள் மட்டுமல்ல, பாவிகளை இரட்சிக்க வந்த பரமநாதன் ஏசுவுக்கும் மரணம் கலக்கத்தைத் தந்திருக்கிறது. அதனால்தானோ தனது மரணத்திற்கு சற்று முன்னால் " என் தேவனே , என் தேவனே , ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கலங்கியிருக்கிறார். 


விவேகானந்தரும்கூட தனது மரணத்தின் நெருக்கத்தில் கொஞ்சம் கலங்கி இருந்ததாகத்தான் வரலாறு கூறுகிறது.


வாழ்வின் கடைசியில் மரணபயம் வந்து பயனில்லை நண்பர்களே! 


வாழும்போதே மரணத்தை அனுபவிக்க வேண்டும். "செத்தாரைப் போலத்திரி"எனப் பட்டினத்தார் சொல்வதும் இதைத்தான். 


.....................மரணபயம் தேவையா?

 ஆத்ம விசாரத்தில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவருக்கும் மரணபயம் அவசியமானதே

மரணபயம் வேங்கடராமனைப் பார்புகழும் ரமண மஹரிஷி ஆக்கியது.

மரணபயம் சித்தார்தனைப் புத்த பகவானாக்கியது.

மரணபயம் பரீட்சத்து மகாராஜனை சுகரிடம் அழைத்துச் சென்று பழுத்த ஆன்ம ஞாநியாக்கியது..




.............................சரி, மரணம் என்றால் என்ன?



வி.ஸ.காண்டேகரின் "கிரௌஞ்சவதம்" எனும் நாவலில் அப்பண்ணா என்றொரு கதாபாத்திரம், தனது மனைவி இறந்து போன துயரிலிருந்து மீள்வதற்காக ஒரு பாடலைப் பாடுவார்.

"ஏற்றப் பழந்துணியை நீக்கி

எறிந்தொருவன்

மாற்றும் புதிய உடை

வாய்ப்பது போல்

தோற்றுமுயிர்

பண்டை உடம்பை விட்டு

பாரில் புதிய உடல்

கொண்டு பிறக்குமென்று

கொள்"


உயிரானது தான் போட்டிருந்த உடல் என்ற சட்டையை , அது பழையது ஆனதாலோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தாலோ மாற்றிக் கொள்வது மரணம் என்றாகிறது. மரணம் என்பது உயிர், உடலை மாற்றிக் கொள்ளும் ஒரு நிகழ்ச்சி. உயிர் அழியாதது. ஒருவன் செத்துப் போனான் எனில் அவனது உடலிலிருந்து உயிர் ஒரு புதிய உடலாகப் பிறந்து வேறு ஏதா ஒரு பெயர் கொண்ட ஒரு மனிதனாகிறது..


யோக வகுப்புகளில் ஆசனப்பயிற்சிகளின் முடிவில் "சாந்தி ஆசனம்" என்றதும் எவ்வளவு மகிழ்ச்சியுடன் அதனை எதிர் கொள்கிறோம். அதுபோல வாழ்வு முழுவதும் உழைத்துக் களைத்த சரீரத்திற்கு முழுமையான ஓய்வு கொடுக்கும் "சவாசனமே" மரணம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிவராத்திரியன்று தென்காசி யோகமையத்தில் நடந்த தத்தாத்ரேயர் நாடகத்தில் வந்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் குரல் கொடுத்தது கல்யாணி. அதுபோல இந்த வாழ்க்கை என்பது ஒரு நாடகமேடை இதில் நாம் எத்தனையோ கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கலாம். ஆனால் எல்லா கதா பாத்திரங்களுக்குள்ளும் ஏகமாய் மறைந்திருப்பது "தான்" எனும் உயிர் ஒன்றே. நாடகம் மாறலாம். கதாபாத்திரங்கள் மாறலாம் ஆனால் "தான்" மாறாது.


மரணம் என்பது பிறப்பது மாதிரி , பட்டங்கள் பெற்றுக் கொள்வது மாதிரி , பூப்பெய்துவது மாதிரி , திருமணம் செய்து கொள்வது மாதிரி, இன்னொரு ஜீவனைப் பெற்றுக்கொள்வது மாதிரி, வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. அவ்வளவுதான்.  


வாழ்வில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் , எதிர்பார்த்து, தவமாய் தவம் கிடக்கும் நாம் மரணத்தைப் பொருத்தவரை அதைத் தவிர்க்கவோ அல்லது குறைந்த பட்சம் தள்ளிப் போடவோ முயற்சிக்கிறோம் .


.......................இதற்கு என்ன காரணம் தெரியுமா?!


......................மற்றெல்லா நிகழ்வுகளிலும்அந்த நிகழ்வைக்குறித்த புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுத்துக்கொள்வது எதற்காக தெரியுமா?!


அது குறித்துப் பேச அதற்கடுத்த நாள் நாம் இருப்போம் . ஆனால் நேற்று நடந்த தனது மரணத்தைப் பற்றி அடுத்த நாள் அசை போட மரணித்தவனுக்கு வாய்ப்பிருக்காது என நாம் தவறாக புரிந்திருக்கிறோம். 


"தான்" எனும் உயிர் என்றும் அழிவதில்லை அது இந்த சரீரத்தின் அழிவையும் நேரிடையாகப் பார்க்கப் போகிறது என்னும் உண்மையை வாழும்போதே உணர்ந்து கொண்டால் மரணமும் நமக்கு கொண்டாட்டமே! மரணத்தைக் கொண்டாட நாம் கற்றுக் கொண்டால் வாழ்க்கையின் எந்த ஒரு இடர் கண்டும் நம்மால் புன்னகைக்க இயலும். 


மரணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் வகுப்புகளில் கூறுவதின் அவசியம் இந்தக்கணத்திலேயே ஒரு புன்னகையோடு மரணித்து விட வேண்டும் என்பதல்ல. மரணம் வருவதற்குள்ளாக "நான்" எனும் சரீரம் வேறு, "தான்" எனும் உயிர் வேறு என்பதை வாழும் போதே உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. இதனை உணர்வதே "ஞானம்". ஞானத்திற்கு நம்மை அழைத்து செல்லும் பாதையே யோகம்.


இத்தனை மருத்துவமனைகள் , இத்தனை மருத்துவ வசதிகள், ஹடயோக சாதனைகள் அனைத்துமே மரணத்தை முற்றாய் முழுசாய் தவிர்ப்பதற்கு உதவாது. மரணத்தை முடிந்த அளவு தள்ளிப் போடுவதற்காக நமக்கு வாய்த்த வாய்ப்புகள் அவை. 


மரணத்தை ஏன் தள்ளிப்போடவேண்டும்?. 


மரணம் பற்றிய உண்மையை உணராமல் இந்த சரீரம் மரணிக்குமேயானால் ஒரு மிகப் பெரிய மரண வலியை நாம் சந்திக்க வேண்டியதிருக்கும். மாற்றாக மரணத்தை தள்ளிப் போட்டு அதற்குள்ளாக "மரண உண்மையை" உணர்ந்து கொண்டால் மரணம் கொண்டாடப்படக்கூடியதாக மாறிவிடும்.


"மரணமில்லாப் பெருவாழ்வு" என்பதும் "நித்திய ஜீவன்" என்பதும் இந்த சரீரம் அழிந்து விடாமல் இருப்பதைப் பற்றிக் கூறியதில்லை. அழிந்து போகாத "தான்" பற்றிக் கூறியவையே.


சரீர மரணமே இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். இளைஞர்களை விடவும் , குழந்தைகளை விடவும் கிழவர்கள் அதிகம் வாழும் ஒரு உலகத்தை கற்பனையிலும் சகித்துக் கொள்ள முடியுமா?


மரணம் தவிர்க்க இயலாதது. தவிர்க்க முடியாதது. மனிதம் குறித்த புரிதலோடும் , அக்கறையோடும் , கவலையோடும் மனிதர்களுக்காக நம் வாழ்க்கை செலவிடப் பட்டிருக்குமானால் நமது மரணத்தையும் தாண்டி நீளும் நமது வாழ்க்கை.


சாகாமல் செத்திருந்து சத்குருவின் பொன் அடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்?



மரணபய மிக்குளவம் மக்களர ணாக
மரணபவ மில்லா மகேசன்- சரணமே
சார்வர் தஞ் சார்வோடுதாஞ் சாவுற்றார் சாவெண்ணஞ்
சார்வரோ சாவா தவர்.

6 comments:

gayathri said...

மாஸ்டர் ,இந்த உடல்" நான் இல்லை" என்ற உணர்வு வந்துவிட்டால் மரண பயம் இல்லாமல் போய்விடுமா?

Yoga Yuva Kendra said...

தேக அபிமானம் குறைந்தால் சந்தேகமில்லாமல் மரணபயம் குறையும்.

abarnavijay said...

வணக்கம் மாஸ்டர்,உங்கள் ஆசியால் மட்டுமே எழுதுகிறேன்,இந்த உடல் ,எண்ணம் ,மனம் ,எதுவும் நான் அல்ல ,உள்ளிருக்கும் ஆன்மா தான் என்பதை உங்கள் "உபதேச உந்தியார்" ஒரு பாடல் விளக்கமே புரிய வைத்துவிட்டது .ப்ளீஸ் மாஸ்டர் ,அனைத்து பாடலுக்கும் உங்கள் விளக்கம் பெற்றால், மரணம் வரும் போதும் ,அழியப்போவது இந்த உடல் மட்டும் தான் ,மீண்டும் இப்படி ஒரு உடல் பெற்று,உறவுகளில் சிக்கித் தவிக்க வேண்டியதில்லை ,என்பது மட்டும் புரிந்து விட்டால்,எங்களுக்கு மீண்டும் பிறவாமை பற்றிய எண்ணமே எழும் மரண பயம் உறுதியாக வராது. please help us master

Yoga Yuva Kendra said...

அபர்ணா, அந்தப் பாடல் உந்தியாரில் உள்ளதல்ல. ரமண பகவானின் உள்ளது நாற்பது.

rajesh said...

உள்ளது நற்பதில் சித்சடகந்தி பந்தம் ஜுவ நுட்பமெய் அகந்தை என ரமணர் விளக்கியுள்ளார். ஒருவன் மனம் வேறு என தெரிந்த போது அவனுக்கு வரும் மரணபயத்தை ரமணர் இவ்வாறு குறிப்பிடுகிறார். அவ்வாறு வரும் மரண பயமும் யாருக்கு என அவர் பயன்படுத்திய பிரம்மா அஸ்திரத்தை யாம் ஏன் உங்கள் மேல் செலுத்தக்கூடாது...................

Yoga Yuva Kendra said...

உண்மைதான் ராஜேஷ். முயற்சி செய்கிறேன், குருவருள் துணைபுரியும் என நம்புகிறேன்.

Post a Comment