Total Pageviews

Tuesday, October 25, 2011

யோகத் தீபாவளி




யோகயுவகேந்திரா உறவினர்களுக்குத் தீபாவளி  நல்வாழ்த்துக்கள்!

முத்தீ, என மூன்று வகையான நெருப்பைப் பற்றி யோக பாடத்தில் குறிப்பிடப்படுகிறது. சூரியன்,சந்திரன், அக்னி இவை மூன்றுமே முத்தீ எனப்பெயர் பெறுகிறது. இருட்டை விரட்டுவதையே இந்த மூன்று நெருப்புகளும் செய்தாலும், அக்னி, மனித முயற்சியால் உண்டாக்கப் படக்கூடியது. எனவே அக்னிக்குப் பெருமை அதிகம். மனித உடலிலும் இந்த மூன்று நெருப்புகளும் முக்கியமானவை. 

சூரிய கலையாகிய வலது சுவாசமும், சந்திர கலையாகிய இடது சுவாசமும், மனித முயற்சியின்றியேத் தானாகச் செயல்படக்கூடியது. ஆனால் அக்னியாகிய சுழுமுனையை மனித முயற்சியாலேயே செயல்படுத்தமுடியும். அக்னி மேல் நோக்கியே செல்வதுபோல் சுழுமுனையும் மேல்நோக்கியே செயல்படும். இந்த அக்னியாகிய சுழுமுனை சுவாசத்தை "வளி" யாகிய வாசிக்காற்றைக்கொண்டு ஊதி ஊதி, நெருப்பாக்கி, அந்த அறிவு "தீபத்தால்" அஞ்ஞான இருட்டை விரட்டி, வெற்றி கண்டவர்கள் கொண்டாடும் வைபவமே "ராஜயோகத் தீபாவளி".

கிருஷ்ண பரமாத்மா, நரகாசூரனை வதம் செய்த நாளையே தீபாவளி என்று கொண்டாடுகிறோம். நரகாசூரன், பூமாதேவியின் புதல்வன். பூமாதேவி என்பவள் மண்ணின் அம்சம்,அதனால் பூமாதேவியின் மகனான நரகாசூரனுக்கும் "பெளமண்" என ஒரு சிறப்பு பெயருண்டு. பெளமண் என்றால் மண்ணால் செய்யப்பட்டவன் எனப்பொருள். பெளமண் மண்ணால் ஆனவன், மகான்களை மதிக்கத்தெரியாதவன், அஹங்காரம் கொண்டவன். ஆகையால் ஆத்மபலத்தை விட உடல் வலிமையே பெரிதென நினைத்து ஆத்ம உணர்வில்லாமலிருந்தவன். தான் பெற்ற உடல் பலத்தால் எல்லோரையும் ஆட்டி வைத்தவன்.

பஞ்ச பூதங்களால் ஆன மனித சரீரத்தில், சதை, எலும்பு, நரம்பு முதலியவைகள் மண்ணால் செய்யப்பட்டவை. எனவேதான் வாழ்க்கையின் இறுதியில் இவை, மறுபடியும் மண்ணுக்கே அர்ப்பணமாகிறது. 

நரகாசூரன் பரிபாலனம் செய்து வந்த நாட்டின் பெயர் "பிராகஜோதிஷபுரம்"

"பிராக" என்றால் மூலத்தில் "தான்" எப்படி இருந்தோம் என்பதைப் பற்றிய உணர்வு. "ஜோதி" என்றால் மேம்பட்ட அறிவு . "ஷ" என்பது மறந்து போதல். தான் மூலத்தில் என்னவாக இருந்தோம் என்பதான மேம்பட்ட அறிவை மறந்துபோன நாட்டை ஆட்சி செய்தவனே "நரகாசூரன்"

ஆத்ம தத்துவத்தை உணர்ந்துகொண்ட ஜீவனுக்கே "நரன்" எனப்பெயர். இந்த மண்ணாலான "உடல்" நானல்ல, மூல வஸ்துவான ஆத்மனே "தான்" என்பதை உணர்ந்து கொண்டவனே நரன். இந்த ஆத்ம தத்துவத்தை உணராமல் தேக அபிமானத்தோடு வாழ்பவனே "நரகாசூரன்" 

இந்த மண்ணாலாகிய தேகத்தையே "நான்" என நம்பச்செய்து உண்மையான "தானை" மறக்கச் செய்யும் "மனமாகிய" நரகாசூரனை அழிப்பதே "ஞானயோகத் தீபாவளி".

நரகாசூரனைக் கொன்றது கிருஷ்ணபரமாத்மா எனக் கொண்டாலும், கிருஷ்ணருக்கும், நரகாசூரனுக்கும் நடந்த போரில், நரகாசூரன் விட்ட மகாசக்தி சூலம் கிருஷ்ணனை மயங்கி விழச்செயகிறது. கிருஷ்ணரால் தனித்துப் போராட முடியவில்லை, சத்யபாமாவையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறார். அதன்பின்பே அவரால் வெற்றி பெற முடிகிறது.

ஆத்மஉணர்வான சிவநிலையை அடைவதற்கு மாயையான நரகாசூரனை வதம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஆனால் "சுழுமுனைச்" சக்தியான கிருஷ்ணனால் தனித்துப் போராடி மனமாகிய நரகாசூரனை வெற்றிகொள்ள முடியவில்லை. அவருக்கு "இடைகலை" சுவாசமாகிய சத்யபாமாவும் துணைக்கு வரவேண்டியது அவசியமாகிறது. "எங்கே இருக்கினும் பூரி இடத்திலே" எனும் சித்தர்களின் யோகமும், ஞானமும் கலந்த இந்த சூட்சும ஆன்மீக ரகசியத்தை உணர்ந்து கொண்டவர்களின் தீபாவளி "சிவராஜயோகத் தீபாவளி"

மண்ணால் செய்யப்பட்ட மட்பாண்டமே அகல்விளக்கு. அதில் சுடர் குடியேறிவிட்டால் அது வணங்கத்தக்கதாக மாறுகிறது. வழிபடு பொருளாக மலர்கிறது. மங்கலப்பொருள் என மதிக்கப் பெறுகிறது. 

நமது உடலும் மட்பாண்டமே! அதில் சுடர்விடும் மங்கள நெருப்பே ஆத்மன். இந்த ஆத்ம நெருப்பு இறைவனின் அம்சம் என்ற தெளிவு பிறந்தால் _ "நாமும்" இறைவனே என்கிற அத்வைத ஞானம் மலர்ந்தால் உடலாகிய மண்விளக்கும் மங்கலப்பொருளாக மதிக்கப்படும்! ஆத்ம நெருப்பின் சூடு இன்று எல்லோரிடத்திலும் இருக்கிறது! ஆனால் ஆத்மநெருப்பின் ஒளி இன்று நம்மிடம் இருக்கிறதா? ஒளியேற்றும் சூட்சுமம் தெரிந்து கொண்டால் தினம் தினம் தீபாவளிதான்!

நீ பார்க்கும் வெய்யோன், நிலவு, அக்கினியுடுவாந்

தீபாவளிகள் செடமாகும்- நீ பார்ப்போன்,

தீபாவளிச் சுடருன் திருட்டியாற் றானீயே

தீபாவளி மூலந்தேர்.....................................................................ரமண பகவான்.





4 comments:

gayathri said...

THANKS A LOT MASTER...

abarnavijay said...

happy diwali master.please explain the link of diwali and ganga snaanam and its [yoga] link to our body

Dr D Venkateswaran said...

history of deepavali is interesting and informative thank u very much master

Velvijayan said...

மாஸ்டர்! மனமாகிய நரகாசுரனை வெல்ல சுழுமனையாகிய கிருஷ்ணனுக்கு இடகலை ஆன சத்யபாமா எனும் துணையின் அவசியம் என்ன?
விளக்கம் தேவை.

Post a Comment