Total Pageviews

Tuesday, April 19, 2011

அண்ணாமலை பாட்டுசாமி



யோக யுவ கேந்திரா உறவினர்களுக்கு வணக்கம்!




அண்ணாமலைக் கிரிவலப் பாதையில் கடந்த நாற்பது ஆண்டு காலமாகப் பாட்டு சாமி என எல்லோராலும் புகழப்பட்ட மணி சாது கடந்துபோன பிரதோசத்தன்று ஜீவ ஒடுக்கமாகி இருக்கிறார். வாழ்க்கையின் பரிமாணங்களை உணர்ந்து கொண்ட ஒரு நல்ல சாது. 




இந்த மாய வாழ்க்கையின் நிதர்சனங்களை இந்த சாது பாடல்களாகப் படிக்கும்போது உள்ளம் நெகிழ்ந்திருக்கிறேன். அவர் பாடும்போது வாழ்கையின் நிலையாமையை உணர்ந்திருக்கிறேன். எத்தனையோ சினிமா இசையமைப்பாளர்கள் அழைத்தபோதும் அண்ணாமலையாரையும் ,அடியார்களையும் மட்டுமே இந்த வாய் பாடும். இந்த கட்டை இந்த மலையில் ஒடுங்கவே விரும்புகிறது என்று கூறி கிரிவலப் பாதையிலேயே வைராக்கியமாக ஒடுங்கியிருக்கிறார் இந்த சாது. 




பக்கவாதத்தில் அவதிப்பட்ட போது கூட என்னைப்பார்த்தால் கண்டிப்பாக ஒரு பாடலாவது பாடிய பின்பு தான் அனுப்பிவைப்பார். இவர் பாடும்போது நமது  சாமி தன்னை மறந்து ஆடுவதை நேரிடையாகப் பார்த்திருக்கிறேன். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பெல்லாம் கிரிவலம் செல்வோர் இவர் பாடலை கேட்காமல் கிரிவலம் சென்றிருக்க முடியாது. 




பௌர்ணமியில் மட்டுமல்லாது எல்லா இரவுகளிலும் பாடல் பாடுவது இவரின் தனிச்சிறப்பு. ஆள் இல்லாத இரவுகளில் கிரிவலம் செல்லும்போது இவருடைய பாடல்கள் எனக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. நான் மண்ணானால் அண்ணாமலையின் மண்ணாவேன், மலரானால் நிருதிக் குளக்கரை மலராவேன்....... என இந்த சாதுவின் பாடல் என் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. அவர் விரும்பியது போலவே இவருக்கு நிருதிக் குளக்கரையிலேயே சமாதி வாய்த்திருக்கிறது.


நித்தியமென்னு மலையில் நின்றுகொண்டோம் யாம்
நினைத்தபடியே முடித்து நின்மல மானோம்
சத்தியமாய் எங்கள் கடந்தான்அழியாதே 
சந்ததமும் வாழ்வோம் என்று ஆடுபாம்பே.   பாம்பாட்டிச்சித்தர் 

Thursday, April 14, 2011

சிவமாகு!


சிவம் ஆகு!!

கடலின் ஆழம் !
ஊமையின் கனவு !! 
ஆகாய விரிவு!! 
மகளிர் மனம்!!
அறுதி இட்டு கண்டவர் உண்டோ? 
தீயினுள் சென்றது சாம்பல்!!
நல்வினையும் தீவினையும் வேறு வேறு எதுவும் வேண்டாதவருக்கு !!
நரை..திரை ..மூப்பு எல்லாம் நாறும் நம் உடல் அதற்கே!!
நான்கும் ஐந்தும் நவமும் ஆட்டுவிக்க ...
தன்னை உணர்ந்தவர் யாரும் இன்று உண்டோ? 
உடல்..பொறி..மனம் கடந்து "தன்னை உணரும்" ...
உண்மைஉணரும் காலமும் வருமோ??
இவ்வுலகில் ஜனித்தன யாவும் சிவமென்றால் 
ஆண் பெண் பேதம் ஏது? 
பக்குவமே பரமன் !!
மன பக்குவமே பரமன்!! 
தேர்ந்து தெளிந்து விடு!!
சிவம் ஆகு!!

Wednesday, April 13, 2011

சாயா புருஷ தரிசனம்





சாயா புருஷ தரிசனம் என்றால் என்ன?




நிழலுடன் பேசும் கலையைச் சித்தர்கள் அறிந்திருந்தனர். இதற்கு "சாயா புருஷ தரிசனம்" எனப்பெயர்.

தொலைகாட்சிப் பெட்டிக் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் அதைப் பற்றி நம்மிடம் பேசினால் கொஞ்சம் ஆச்சரியமும், சந்தேகமும் கலந்துதானேப் பார்த்திருப்போம். அதுபோல இப்போது இந்த சாயா புருஷ தரிசனம் பற்றிப் பேசினால் ஆச்சரியமும், கொஞ்சம் சந்தேகமும்தான் உண்டாகும்.

அனுமன், கடலைத் தாண்டும்போது அரக்கி ஒருத்தி அவரது நிழலைப் பிடித்து இழுத்தாளாம். ஆம், மனிதனுக்கும் நிழலுக்கும் தொடர்பு உண்டு. இதைத்தான் சாயா புருஷ தரிசனம் என்கிறோம். எதிர்காலத்தில் விஞ்ஞானமும் இதை நிருபிக்கக்கூடும்.

ராணிப்பேட்டையை அடுத்த திருவல்லத்தில் வாழ்ந்து சமாதியடைந்தவர் திருவல்லம் சாமிகள். அழுக்குத்துணிகளை வெளுக்கும் குடும்ப்பத்தில் பிறந்து மக்களின் மன அழுக்கை நீக்குவதற்காகப் பிறப்பெடுத்தவர் சாமிகள். சாக்கையே(கோணி) கோவணமாக அணிந்து கொண்டவர் . கொஞ்ச நாட்கள் மௌனியாகவும் இருந்திருக்கிறார்.    திருநீறும் வில்வமும் கொடுத்தே பல தீராத வியாதிகளையும் தீர்த்திருக்கிறார் .


ஒருமுறை சாமிகளைத் தரிசிக்க வந்த பக்தர் ஒருவர், விமானத்தில் வெளியூர் செல்ல இருப்பதைத் தெரிவித்தார். சாமிகளோ "அந்த விமானத்தில் செல்ல வேண்டாம்" என்று தடுத்தார். மறுநாள் அந்த விமானம் விபத்துக்குள்ளான செய்தி வெளியானது. அதிர்ந்து போன பக்தர், "எப்படி தெரியும் சாமி?" எனக் கேட்டார்.


சூரிய நிழலைக் காட்டிய சாமிகள், "இந்த சாயா புருஷன் எப்போதும் என்னுடன் பேசுவார். நடக்கப் போவதை அவரே தெரிவித்தார்" என்றார்.


பிரபஞ்ச ரகசியம் அவதூதர்களுக்கேத் தெரியும். நாம் இந்த அவதூதர்களின் மூலமாகவே பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளும் யுக்தியை உணரமுடியும்.

பலகோடி ஜென்மங்களில் செய்த புண்ணிய பலன் காரணமாக ஒருவருக்கு ஒரு அவதூதரின் தொடர்பு கிடைக்கும். அந்த அவதூதரின் தொடர்பால் மட்டுமே வாழ்க்கையின் பூரணத்துவத்தை உணர்ந்து கொள்ளமுடியும்.







கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும்

விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்?

                                                                                                                           ---பத்திரகிரியார்





முகமூடி





நேற்று வரை 
நான் பார்த்த
உன் முகம்
இன்று ஏன்
மாறிவிட்டது?

இது தான் 
உன் முகமா
அல்லது முகமூடியா?

நான் காண்பது
உன் முகமா முகமூடியா
என்ற தேடலில்
என் முகத்தைத்
தொலைத்துவிட்டேன்

தொலைந்தது 
என் முகமா முகமூடியா?

Tuesday, April 12, 2011

மரணபயம்





மரணபயத்தை வெல்வது எப்படி?








'மரணம் குறித்த 

பயம் போய்விடும் 

ஒரே ஒரு முறை 

செத்துப் பார் "


என்று ஜென்னில் ஒரு கவிதை உண்டு. இதைத் தாண்டி மரணம் குறித்து வேறென்ன யோசிக்க வேண்டியதிருக்கிறது? உயரத்தில் உட்கார்ந்து யோசித்திருக்கிறார்கள். சரி, எவ்வளவுதான் உயரத்தில் உட்கார்ந்து யோசித்தாலும் இப்படியெல்லாம் கூடயோசிக்க வருமா? ஒருவேளை ஓரிரு முறை செத்து மீண்டும் எழுந்து வந்து மரண பயமற்ற தனது அனுபவத்தை எழுதியிருப்பார்களா? 



அண்ணாமலையில், நேப்பாள அவதூது ஒருவர் தொடர்ந்து கஞ்சா குடிப்பவர்.அவர் அருகில் சென்றாலே கஞ்சா வாசம் கமகமக்கும்.


"கஞ்சா ஒரு மாதிரி மயக்கத்தைத் தருமே ,தொடர்ந்து கஞ்சா குடித்தாலும் தெளிவா இருக்கீங்களே . உண்மைய சொல்லுங்க, கஞ்சா குடிப்பதினால் ஆன்ம விடுதலை கிடைக்குமா? "


கொஞ்சம் கஞ்சாவை உருட்டி என்னிடம் நீட்டினார். மிரண்டு போய் ஒதுங்கினேன். 

"எதையும் அனுபவிச்சுப் பார்த்து உணரனும்டா" 


மூன்று நான்கு வரிகள் கொண்ட எனது கேள்விக்கு நான்கே வார்த்தைகளில் பதில் சொன்னார். 


அனுபவித்துப் பார்த்தால்அது குறித்த தெளிவு உண்டாகும் என்கிறார் இவர். ஜென் குருவோ ஒருமுறை செத்துப் பார். மரணம் குறித்த பயம் நீங்கி ஆனந்தம் உண்டாகும் என்கிறார். 


கஞ்சா குடிப்பது மாதிரி ஒரு சராசரி அனுபவம்தான் மரணமா?

வலியற்றதா? 


" உறங்குவது போலும் சாக்காடு " என்கிறார்களே. மரணத்தை உறக்கம் மாதிரி ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ள முடியுமா?.


மரணம்,............ அனுபவமா?


ஜென் குறித்த சிந்தனையின்முடிவில்தான் நமக்கு நமது உயிரின் மேன்மையே தட்டுப் படுகிறது. மரணம் அனுபவிக்க வேண்டிய நிகழ்வா?


அப்படித்தான் போலும்.


ஆனால் மனிதர்களுக்கு மரணம் கசக்கிறது. மரண பயம் என்பது கசப்பினும் கொடூர கசப்பாகவேத் தோன்றுகிறது.


மனிதர்கள் மட்டுமல்ல, பாவிகளை இரட்சிக்க வந்த பரமநாதன் ஏசுவுக்கும் மரணம் கலக்கத்தைத் தந்திருக்கிறது. அதனால்தானோ தனது மரணத்திற்கு சற்று முன்னால் " என் தேவனே , என் தேவனே , ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கலங்கியிருக்கிறார். 


விவேகானந்தரும்கூட தனது மரணத்தின் நெருக்கத்தில் கொஞ்சம் கலங்கி இருந்ததாகத்தான் வரலாறு கூறுகிறது.


வாழ்வின் கடைசியில் மரணபயம் வந்து பயனில்லை நண்பர்களே! 


வாழும்போதே மரணத்தை அனுபவிக்க வேண்டும். "செத்தாரைப் போலத்திரி"எனப் பட்டினத்தார் சொல்வதும் இதைத்தான். 


.....................மரணபயம் தேவையா?

 ஆத்ம விசாரத்தில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவருக்கும் மரணபயம் அவசியமானதே

மரணபயம் வேங்கடராமனைப் பார்புகழும் ரமண மஹரிஷி ஆக்கியது.

மரணபயம் சித்தார்தனைப் புத்த பகவானாக்கியது.

மரணபயம் பரீட்சத்து மகாராஜனை சுகரிடம் அழைத்துச் சென்று பழுத்த ஆன்ம ஞாநியாக்கியது..




.............................சரி, மரணம் என்றால் என்ன?



வி.ஸ.காண்டேகரின் "கிரௌஞ்சவதம்" எனும் நாவலில் அப்பண்ணா என்றொரு கதாபாத்திரம், தனது மனைவி இறந்து போன துயரிலிருந்து மீள்வதற்காக ஒரு பாடலைப் பாடுவார்.

"ஏற்றப் பழந்துணியை நீக்கி

எறிந்தொருவன்

மாற்றும் புதிய உடை

வாய்ப்பது போல்

தோற்றுமுயிர்

பண்டை உடம்பை விட்டு

பாரில் புதிய உடல்

கொண்டு பிறக்குமென்று

கொள்"


உயிரானது தான் போட்டிருந்த உடல் என்ற சட்டையை , அது பழையது ஆனதாலோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தாலோ மாற்றிக் கொள்வது மரணம் என்றாகிறது. மரணம் என்பது உயிர், உடலை மாற்றிக் கொள்ளும் ஒரு நிகழ்ச்சி. உயிர் அழியாதது. ஒருவன் செத்துப் போனான் எனில் அவனது உடலிலிருந்து உயிர் ஒரு புதிய உடலாகப் பிறந்து வேறு ஏதா ஒரு பெயர் கொண்ட ஒரு மனிதனாகிறது..


யோக வகுப்புகளில் ஆசனப்பயிற்சிகளின் முடிவில் "சாந்தி ஆசனம்" என்றதும் எவ்வளவு மகிழ்ச்சியுடன் அதனை எதிர் கொள்கிறோம். அதுபோல வாழ்வு முழுவதும் உழைத்துக் களைத்த சரீரத்திற்கு முழுமையான ஓய்வு கொடுக்கும் "சவாசனமே" மரணம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிவராத்திரியன்று தென்காசி யோகமையத்தில் நடந்த தத்தாத்ரேயர் நாடகத்தில் வந்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் குரல் கொடுத்தது கல்யாணி. அதுபோல இந்த வாழ்க்கை என்பது ஒரு நாடகமேடை இதில் நாம் எத்தனையோ கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கலாம். ஆனால் எல்லா கதா பாத்திரங்களுக்குள்ளும் ஏகமாய் மறைந்திருப்பது "தான்" எனும் உயிர் ஒன்றே. நாடகம் மாறலாம். கதாபாத்திரங்கள் மாறலாம் ஆனால் "தான்" மாறாது.


மரணம் என்பது பிறப்பது மாதிரி , பட்டங்கள் பெற்றுக் கொள்வது மாதிரி , பூப்பெய்துவது மாதிரி , திருமணம் செய்து கொள்வது மாதிரி, இன்னொரு ஜீவனைப் பெற்றுக்கொள்வது மாதிரி, வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. அவ்வளவுதான்.  


வாழ்வில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் , எதிர்பார்த்து, தவமாய் தவம் கிடக்கும் நாம் மரணத்தைப் பொருத்தவரை அதைத் தவிர்க்கவோ அல்லது குறைந்த பட்சம் தள்ளிப் போடவோ முயற்சிக்கிறோம் .


.......................இதற்கு என்ன காரணம் தெரியுமா?!


......................மற்றெல்லா நிகழ்வுகளிலும்அந்த நிகழ்வைக்குறித்த புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுத்துக்கொள்வது எதற்காக தெரியுமா?!


அது குறித்துப் பேச அதற்கடுத்த நாள் நாம் இருப்போம் . ஆனால் நேற்று நடந்த தனது மரணத்தைப் பற்றி அடுத்த நாள் அசை போட மரணித்தவனுக்கு வாய்ப்பிருக்காது என நாம் தவறாக புரிந்திருக்கிறோம். 


"தான்" எனும் உயிர் என்றும் அழிவதில்லை அது இந்த சரீரத்தின் அழிவையும் நேரிடையாகப் பார்க்கப் போகிறது என்னும் உண்மையை வாழும்போதே உணர்ந்து கொண்டால் மரணமும் நமக்கு கொண்டாட்டமே! மரணத்தைக் கொண்டாட நாம் கற்றுக் கொண்டால் வாழ்க்கையின் எந்த ஒரு இடர் கண்டும் நம்மால் புன்னகைக்க இயலும். 


மரணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் வகுப்புகளில் கூறுவதின் அவசியம் இந்தக்கணத்திலேயே ஒரு புன்னகையோடு மரணித்து விட வேண்டும் என்பதல்ல. மரணம் வருவதற்குள்ளாக "நான்" எனும் சரீரம் வேறு, "தான்" எனும் உயிர் வேறு என்பதை வாழும் போதே உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. இதனை உணர்வதே "ஞானம்". ஞானத்திற்கு நம்மை அழைத்து செல்லும் பாதையே யோகம்.


இத்தனை மருத்துவமனைகள் , இத்தனை மருத்துவ வசதிகள், ஹடயோக சாதனைகள் அனைத்துமே மரணத்தை முற்றாய் முழுசாய் தவிர்ப்பதற்கு உதவாது. மரணத்தை முடிந்த அளவு தள்ளிப் போடுவதற்காக நமக்கு வாய்த்த வாய்ப்புகள் அவை. 


மரணத்தை ஏன் தள்ளிப்போடவேண்டும்?. 


மரணம் பற்றிய உண்மையை உணராமல் இந்த சரீரம் மரணிக்குமேயானால் ஒரு மிகப் பெரிய மரண வலியை நாம் சந்திக்க வேண்டியதிருக்கும். மாற்றாக மரணத்தை தள்ளிப் போட்டு அதற்குள்ளாக "மரண உண்மையை" உணர்ந்து கொண்டால் மரணம் கொண்டாடப்படக்கூடியதாக மாறிவிடும்.


"மரணமில்லாப் பெருவாழ்வு" என்பதும் "நித்திய ஜீவன்" என்பதும் இந்த சரீரம் அழிந்து விடாமல் இருப்பதைப் பற்றிக் கூறியதில்லை. அழிந்து போகாத "தான்" பற்றிக் கூறியவையே.


சரீர மரணமே இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். இளைஞர்களை விடவும் , குழந்தைகளை விடவும் கிழவர்கள் அதிகம் வாழும் ஒரு உலகத்தை கற்பனையிலும் சகித்துக் கொள்ள முடியுமா?


மரணம் தவிர்க்க இயலாதது. தவிர்க்க முடியாதது. மனிதம் குறித்த புரிதலோடும் , அக்கறையோடும் , கவலையோடும் மனிதர்களுக்காக நம் வாழ்க்கை செலவிடப் பட்டிருக்குமானால் நமது மரணத்தையும் தாண்டி நீளும் நமது வாழ்க்கை.


சாகாமல் செத்திருந்து சத்குருவின் பொன் அடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்?



மரணபய மிக்குளவம் மக்களர ணாக
மரணபவ மில்லா மகேசன்- சரணமே
சார்வர் தஞ் சார்வோடுதாஞ் சாவுற்றார் சாவெண்ணஞ்
சார்வரோ சாவா தவர்.

Wednesday, April 6, 2011

நமது பலம்


நம்மைப் பற்றி நமது கருத்து?
யோக வகுப்புகளில் மாணவர்களிடம் உங்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? எனும் கேள்வியைக் கேட்பது வழக்கம். மாணவர்கள்
பெரும்பாலும் திணறவே செய்வார்கள். அதிசயமாக, அவர்கள் இதற்கான பதிலைத் சொன்னால் பெரும்பாலும் கூட்டியோ குறைத்தோதான் சொல்வார்கள்.
இது அவர்களுக்கு உள்ள தாழ்வு மனப்பான்மையையுயம் (Inferiority Complex) உயர்வு மனப்பான்மையையும் (superiority complex)தான் வெளிக்கொண்டுவரும்.
உண்மையைச் சொல்லப்போனால் நம்மில் பலர் சுயமதிப்பீடுகளில் தெளிவாக இல்லை என்பதே உண்மை.
நாம் மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்களோ அந்தக் கருத்தையே நம்மைப் பற்றிய மதிப்பீடுகளாகவும் எடுத்துக் கொள்கிறோம்.
 இந்த உலகம் பொய்மை நிறைந்தது என்பதை நாம் உணரவேண்டும். முகத்திற்கு முன்னால் ஒன்றையும், முதுகிற்குப் பின்னால் ஒன்றையும் பேசும் உலகம் இது. அதுமட்டுமா? காரியம் ஆனபிறகு ஒன்றும் காரியம் மறுக்கப்பட்டால் வேறு கருத்தும் சொல்லும் இந்தச் சுயநல உலகை நம்பியா நம்மைப் பற்றிய முடிவுக்கு வரப்போகிறோம்? செய்யவேண்டாமே.
அதற்காக நம்மைப் பற்றிய மதிப்பீடுகளில் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. சீர்தூக்கிப் பார்த்து மனசாட்சியையே மையமுள்ளாகக் கொண்டு கருத்து எடுத்துக்கொண்டால் நல்லது.
நம்மைப் பற்றிய சுயமதிப்பீடுகளைச் சரிவரத் தெரிந்து வைத்துக்கொண்டு என்ன சாதிக்கப் போகிறோம் என்கிறீர்களா?
சுயபலம், பலவீனம் தெரியாததாலேயே பலவிஷயங்களைக் கோட்டைவிட்டு, நல்வாய்ப்புகளை இழக்கிறோம். இதுமட்டுமா? சுயபலவீனம் தெரியாததால் பல நேரங்களில் மூக்கு உடைபடுவதும், அவமானப் படுவதும்.பெரும் பொருளாதாரச் சேதங்களையும் ஏற்படுத்திக்கொள்கிறோம்.

Tuesday, April 5, 2011

யோகமும் ஞானமும்





How can people who has no knowledge about yoga, can realise ஞானம் ??? 

Hari nithya



முதலில் யோகம் என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும் நித்யா!

இன்றைய கால கட்டத்தில் "ஞானம்" என்பதை அறிவுப் பெருக்கத்தால் உண்டாகும் ஒரு நிலை என்றே பலர் நினைத்துக் கொள்கிறார்கள். நிரம்பப் படித்தவர்களே "ஞானிகள்" என்ற தவறான மனோபாவமும் இருந்து வருகிறது.

 யோகம் செய்தால் உடல் நலம் பெறலாம் என்பது "செய்தி"(information). எந்த நோய்க்கு எந்த ஆசனம் செய்தால் நோய் குணமாகும் என்பதைக் குரு வாயிலாகக் கேட்டு பயன்படுத்துவது "அறிவு"(knowledge). இந்த உடலில் "நான்" எங்கிருக்கிறேன்! இந்த உடல் நானல்ல! சுவாசம் நானல்ல! மனம் நானல்ல! இதையெல்லாம் தாண்டிய பூரணமான உணர்வே நான் என்பதை "உணர்ந்து" கொள்வதே "ஞானம்"(wisdom). இந்த உணர்வை உணர்வதற்கான பயிற்சிப் பாதையே யோகம்.

ஆத்மனை உணர, ஞானம் பெற வழிகள் பலவானாலும், கர்மயோகம், பக்தியோகம், ராஜயோகம், மற்றும் ஞானயோகம் ஆகிய நான்கு வழிகளே முக்கியமானவை. இதை உணர்த்தவே கோவில்களில் நான்கு கோபுர வழிகள்.

பலன் கருதாமல் கடமையைச் செய்வது கர்ம யோகம். கடவுளின் புகழ் பாடுதல் அல்லது அவனுடைய கல்யாண குணங்களைக் கேட்டல் பக்தி யோகம். 

அடுத்து ராஜ யோகம். நம் மூலாதாரத்தில் மூன்றரைச் சுற்றுகளாகக் குண்டலினிச் சக்தி படுத்து உறங்குகிறது. பிரணாயாமத்தால் இதை விழிக்கச் செய்து, சஹஸ்ராரத்தில் கொண்டு சேர்ப்பது ராஜயோகம்.

காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலின் மூன்றரைச்சுற்றுப் பிரகாரம். ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டுள்ள மூன்றரைச் சுற்று பாம்பணை, ஸ்ரீரங்கத்தின் ஏழு பிரகாரங்கள், திருப்பதியின் ஏழு மலைகள் மற்றும் பகவான் கிருஷ்ணனின் புல்லாங்குழலில் உள்ள ஏழு ஓட்டைகள் ஆகியவை இந்த குண்டலினி சக்தி மற்றும் ஏழு ஆதாரங்களைத்தான் குறிக்கின்றன.

ஔவையார் தனது விநாயகர் அகவலில்,


குண்டலினி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே. என்று பாடுகிறார்

ராஜ யோகத்தால் லயப்பட்ட மனதை நாசம் செய்வதே ஞான யோகம்.........

தன்னுடய கவனத்தை உள்ளுக்குள் திருப்பி, மனம் உருவாகிய இடத்திலேயே அதனை ஒடுங்கச் செய்வதற்கு ஞான யோகம் எனப்பெயர். இதில் குண்டலினி சக்திக்கோ வேறு சாதனைகளுக்கோ இடமில்லை. யோகத்தின் பயன் ஞானம் எனக்கூறலாம்.

இதனையே பகவான் ரமணரும் தனது அருணாச்சல பஞ்ச ரத்தினத்தில்,

வெளிவிடயம் விட்டு விளங்கும் அருணேசா
வளியடக்க நிற்கும் மனத்தால் - உளமதனில்
உன்னைத் தியானித்து யோகி ஒளி காணும்
முன்னிலும் உயர்வுறு மீதுன். 

என்கிறார். 

பால் பிரண்டன் எனும் பக்தர் ரமணரிடம், "பகவான் உங்களது "ஆத்ம விசாரம்" எனும் ஞான மார்க்கம் உங்களுக்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். என்போன்ற ஆரம்ப சாதனையாளர்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதே" எனக் கூறியபோது.

ரமண பகவான் கூறிய பதில் " முதலில் பூஜை செய்யுங்கள், பின்பு ஜெபம், பின்பு தியானம் இறுதியாக ஆத்ம விசாரம் எளிதாக இருக்கும் என்பதே. இதில் பூஜை என்பது கர்ம யோகம், ஜெபம் என்பது பக்தி யோகம், தியானம் என்பது ராஜயோகம், ஆத்ம விசாரம் என்பது ஞானயோகம்.

யோகம் என்பது வெறும் உடற்பயிற்சி, அல்லது ஹட யோகம் மட்டுமே யோகம் என நினைத்திருந்தால் உங்களதுக் கருத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள் நித்யா! யோகம் என்பது ஞானத்திற்கான அடித்தளம். அஸ்திவாரம் இல்லாமல் வீடு கட்ட முடியுமா? அதுபோல யோகம் இல்லாமல் ஞானம் பெற முடியாது என்பது என்னுடைய கருத்து.

நண்பர்களே இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். எவ்வளவு ஹடயோகப்பயிற்சிகள் செய்தாலும் இந்த சரீரம் ஒரு நாள் இறந்து விடும்.வெறும் ஹடயோகப் பயிற்சிகள் மட்டுமல்ல யோகம். இந்த சரீரத்திற்கு மரணம் வருவதற்குள் "நான் இந்த உடலில்லை, அழியாத நித்தியமான ஆத்மா" என்பதை உணர்ந்து கொண்டு மரணத்தை ஜெயிக்கும் உபாயமே யோகம்.. 

மரணம் இல்லாத பெருவாழ்வு என வள்ளலார் கூறுவதும், நித்திய ஜீவன் என இயேசு கூறுவதும் இதைத்தான். ஆத்மனாகிய "தான்" என்றும் அழியாத வஸ்து என்பதை உணர்ந்து கொள்வதற்கே யோகப் பயிற்சிகள் துணை செய்யவேண்டும். பயிற்சி முறைகளால் "நான் இந்த உடலல்ல, "நான் ஒரு அழியாத ஆன்மா" எனும் உணர்வு நிலை உண்டாகும். இதனையே ஞானம் என்கிறோம்.
                                                     
                                           மனம் ஒடுங்கினால் "யோகம்"
                                              மனம் அழிந்தால் "ஞானம்"



                                    நான் மறைகள் கற்பதல்ல "ஞானம்"
                                     "நான்" மறையக் கற்பதே ஞானம்.