How can people who has no knowledge about yoga, can realise ஞானம் ???
Hari nithya
முதலில் யோகம் என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும் நித்யா!
இன்றைய கால கட்டத்தில் "ஞானம்" என்பதை அறிவுப் பெருக்கத்தால் உண்டாகும் ஒரு நிலை என்றே பலர் நினைத்துக் கொள்கிறார்கள். நிரம்பப் படித்தவர்களே "ஞானிகள்" என்ற தவறான மனோபாவமும் இருந்து வருகிறது.
யோகம் செய்தால் உடல் நலம் பெறலாம் என்பது "செய்தி"(information). எந்த நோய்க்கு எந்த ஆசனம் செய்தால் நோய் குணமாகும் என்பதைக் குரு வாயிலாகக் கேட்டு பயன்படுத்துவது "அறிவு"(knowledge). இந்த உடலில் "நான்" எங்கிருக்கிறேன்! இந்த உடல் நானல்ல! சுவாசம் நானல்ல! மனம் நானல்ல! இதையெல்லாம் தாண்டிய பூரணமான உணர்வே நான் என்பதை "உணர்ந்து" கொள்வதே "ஞானம்"(wisdom). இந்த உணர்வை உணர்வதற்கான பயிற்சிப் பாதையே யோகம்.
ஆத்மனை உணர, ஞானம் பெற வழிகள் பலவானாலும், கர்மயோகம், பக்தியோகம், ராஜயோகம், மற்றும் ஞானயோகம் ஆகிய நான்கு வழிகளே முக்கியமானவை. இதை உணர்த்தவே கோவில்களில் நான்கு கோபுர வழிகள்.
பலன் கருதாமல் கடமையைச் செய்வது கர்ம யோகம். கடவுளின் புகழ் பாடுதல் அல்லது அவனுடைய கல்யாண குணங்களைக் கேட்டல் பக்தி யோகம்.
அடுத்து ராஜ யோகம். நம் மூலாதாரத்தில் மூன்றரைச் சுற்றுகளாகக் குண்டலினிச் சக்தி படுத்து உறங்குகிறது. பிரணாயாமத்தால் இதை விழிக்கச் செய்து, சஹஸ்ராரத்தில் கொண்டு சேர்ப்பது ராஜயோகம்.
காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலின் மூன்றரைச்சுற்றுப் பிரகாரம். ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டுள்ள மூன்றரைச் சுற்று பாம்பணை, ஸ்ரீரங்கத்தின் ஏழு பிரகாரங்கள், திருப்பதியின் ஏழு மலைகள் மற்றும் பகவான் கிருஷ்ணனின் புல்லாங்குழலில் உள்ள ஏழு ஓட்டைகள் ஆகியவை இந்த குண்டலினி சக்தி மற்றும் ஏழு ஆதாரங்களைத்தான் குறிக்கின்றன.
ஔவையார் தனது விநாயகர் அகவலில்,
குண்டலினி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே. என்று பாடுகிறார்
ராஜ யோகத்தால் லயப்பட்ட மனதை நாசம் செய்வதே ஞான யோகம்.........
தன்னுடய கவனத்தை உள்ளுக்குள் திருப்பி, மனம் உருவாகிய இடத்திலேயே அதனை ஒடுங்கச் செய்வதற்கு ஞான யோகம் எனப்பெயர். இதில் குண்டலினி சக்திக்கோ வேறு சாதனைகளுக்கோ இடமில்லை. யோகத்தின் பயன் ஞானம் எனக்கூறலாம்.
இதனையே பகவான் ரமணரும் தனது அருணாச்சல பஞ்ச ரத்தினத்தில்,
வெளிவிடயம் விட்டு விளங்கும் அருணேசா
வளியடக்க நிற்கும் மனத்தால் - உளமதனில்
உன்னைத் தியானித்து யோகி ஒளி காணும்
முன்னிலும் உயர்வுறு மீதுன்.
என்கிறார்.
பால் பிரண்டன் எனும் பக்தர் ரமணரிடம், "பகவான் உங்களது "ஆத்ம விசாரம்" எனும் ஞான மார்க்கம் உங்களுக்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். என்போன்ற ஆரம்ப சாதனையாளர்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதே" எனக் கூறியபோது.
ரமண பகவான் கூறிய பதில் " முதலில் பூஜை செய்யுங்கள், பின்பு ஜெபம், பின்பு தியானம் இறுதியாக ஆத்ம விசாரம் எளிதாக இருக்கும் என்பதே. இதில் பூஜை என்பது கர்ம யோகம், ஜெபம் என்பது பக்தி யோகம், தியானம் என்பது ராஜயோகம், ஆத்ம விசாரம் என்பது ஞானயோகம்.
யோகம் என்பது வெறும் உடற்பயிற்சி, அல்லது ஹட யோகம் மட்டுமே யோகம் என நினைத்திருந்தால் உங்களதுக் கருத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள் நித்யா! யோகம் என்பது ஞானத்திற்கான அடித்தளம். அஸ்திவாரம் இல்லாமல் வீடு கட்ட முடியுமா? அதுபோல யோகம் இல்லாமல் ஞானம் பெற முடியாது என்பது என்னுடைய கருத்து.
நண்பர்களே இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். எவ்வளவு ஹடயோகப்பயிற்சிகள் செய்தாலும் இந்த சரீரம் ஒரு நாள் இறந்து விடும்.வெறும் ஹடயோகப் பயிற்சிகள் மட்டுமல்ல யோகம். இந்த சரீரத்திற்கு மரணம் வருவதற்குள் "நான் இந்த உடலில்லை, அழியாத நித்தியமான ஆத்மா" என்பதை உணர்ந்து கொண்டு மரணத்தை ஜெயிக்கும் உபாயமே யோகம்..
மரணம் இல்லாத பெருவாழ்வு என வள்ளலார் கூறுவதும், நித்திய ஜீவன் என இயேசு கூறுவதும் இதைத்தான். ஆத்மனாகிய "தான்" என்றும் அழியாத வஸ்து என்பதை உணர்ந்து கொள்வதற்கே யோகப் பயிற்சிகள் துணை செய்யவேண்டும். பயிற்சி முறைகளால் "நான் இந்த உடலல்ல, "நான் ஒரு அழியாத ஆன்மா" எனும் உணர்வு நிலை உண்டாகும். இதனையே ஞானம் என்கிறோம்.
மனம் ஒடுங்கினால் "யோகம்"
மனம் அழிந்தால் "ஞானம்"
நான் மறைகள் கற்பதல்ல "ஞானம்"
"நான்" மறையக் கற்பதே ஞானம்.