Total Pageviews

Showing posts with label யோகம். Show all posts
Showing posts with label யோகம். Show all posts

Friday, January 26, 2018

யோகக்காவடி

யோகக்காவடி




அனைவருக்கும் தைப்பூச நன்னாள் வாழ்த்துக்கள்...

தமிழ் நாட்டை விடத் தெற்காசிய நாடுகளில் தைப்பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூச நன்னாளில் முருகப்பெருமானுக்கு வேண்டிக்கொண்டு  பால்.பன்னிீர்.,புஷ்பம்.,என பலவித காவடிகள் தூக்கி ஆடுபவர்களைப் பார்த்திருக்கிறோம்..ஆட்டம் சரி..ஆனால் எதற்காக என உணார்ந்தாடுகிறோமா என்பதே கேள்வி????. 


காவடிகள் தூக்கி, நற்பாவடிகள் பாடிஉந்தன்
சேவடிகள் நாடிவாறோம் ஓடி....

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்......எனப்பாடல்கள் பாடுகிறோம்

பொருள் புரியாமல் செய்யும் எதற்குமே பலன் இருக்குமா என்பது ஐயமே.

"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் 
செல்லுவர்..சிவபுரத்தின்...."-என்பது மாணிக்கவாசகர் வாக்கு. 

எல்லாத் தெய்வங்களுக்கும் உரிய சில பொதுவான ஆகம,தாந்திரிகநியமங்கள்,நெறிகள்,வழிபாட்டு முறைகள்  அவரவர் ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப இங்கு இருந்தன என ஒரு கருத்துண்டு. நம்மிடையே உருவ,அருவ,உருவருவ வழிபாடு என்பது பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. அவரவர் அறிவுக்கேற்ப இங்கு வழிபாடும் இருந்து வருகிறது...இதனையே

அவரவர் தமதம அறிவறி வகைவகை 
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர், இறையவர்
அவரவர் விதிவழி அடியனின் றனரே!.... என்கிறார் நம்மாழ்வார்


நம் இந்திய வழக்காற்றில்..மதங்கள் என ஒன்றில்லை.சமயங்கள் மட்டுமே இருந்தன

1.சிவனை வழிபடு தெய்வமாகக் கொண்ட சைவம்(saivam)-இது இறைத்தன்மை ஒருமை நிலையில் இருக்கும் நிலை. 
2.சக்தியை வழிபடு தெய்வமாகக் கொண்ட சாக்தம்(saaktham)-இது இருமை நிலை 
3.விஷ்ணுவை வழிபடு தெய்வமாகக் கொண்ட வைணவம்(vainavam)-மும்மை நிலை. 
4.பிரம்மாவை வழிபடு தெய்வமாகக் கொண்ட சௌரம்(sauram)-நான்கு நிலை தன்மை. 
5.விநாயகனை வழிபடு தெய்வமாகக் கொண்ட காணபத்தியம்(ganapaththiyam) -ஐந்தாம் நிலை. 
6.முருகனை வழிபடு தெய்வமாகக் கொண்ட (kaumaaram)-இறை தன்மையின் ஆறாம் நிலை. 


இந்த சமயங்களின் முடிவான நிலைஎன்பதும், இதன் நோக்கமும் யாதெனில், மனிதன் இறையைத் தனக்குள் உணர்ந்து கடவுள் மயமாக வேண்டும் என்பதே....

சிவநிலை என்பது அடக்கமும்..ஒடுக்கமும்.


முருக நிலை என்பது அறிவும்,,விரிவும். 

சிவனிலை என்பது உடலையும்,உள்ளத்தையும்,  சகலத்தையும் கடத்தல்.

முருகநிலை என்பது..உடலுக்குள்ளும்..உள்ளத்துக்குள்ளும் நிலைத்தல்.

முன்னது அனைத்தையுமாண்டு அனுபவித்து..முற்றும் உணர்ந்து..அடங்கி ஒடுங்கும் நிலை. 
பின்னது..கையில் இச்சா சக்திஎனும் ஒரு பெரிய ஆயுதத்தை வைத்துக்கொண்டுத் தனக்குள் தன்னை முழுமை பெறவிடாமல் தடுக்கும் சூரத்தனங்களை எதிர்த்து நிற்கும்     நிலை. 


ஆக ஒருமைக்கு உட்பட்ட முதல் நிலையான சிவனிலையை நோக்கி..ஆறாம் நிலைக்கு


உயர்வதே மனித வாழ்வு.. 


முருகன் அவதரித்தது சிவனின் நெற்றி எனக்கொண்டால்..நெற்றி நம் ஒவ்வொருவரின்..சிரசாய் விளங்கும் குன்று. 
நெற்றி எனும் குன்றில் இளங்கும்..அறிவுக்கடவுளே முருகன். 
அறிவுக்கான ஆட்ட மைதானம் நெற்றியெனில்..அறிவை ஆட்டுவிப்பது மூளை. ஆம் 
மனித மூளை..நம் கபாலத்தில் காரணத்தோடு..மூன்று இடங்களில் 
பிரித்துவைக்கப்பட்டிருக்கிறது. 
வலது மூளை..இடது முளை..மையத்தில்..முகுளம். 
ஒருவன் மது அருந்தினால்..சாக்கடையில் விழுவான்.. 
அவனுக்குச் சாக்கடையில் இருக்கிறோம் எனத் தெரியும்..நாற்றமடிக்கிறது எனவும் தெரியும்.  இந்த இம்சையில்,இச்சையில்  
இருந்து விடு பட வேண்டுமெனவும் தெரியும்..ஆனால் எழுந்து செயல்பட 
முடியாது.காரணம்..முகுளம் பாதிக்கப்படுவதே. 
நம் அன்றாட வாழ்வின் கேள்விகளும் 
விடைகளும்..மகிழ்ச்சியும்.சோகமும்..ஏற்றமும் இறக்கமும்..வலது இடதாய் 
இருக்கிறது. வலதில் ஒரு கருத்து..இடதில் அதற்கு எதிரான கருத்து.. 
எதை எடுத்துகொள்வது..

அறிவுக் கண்கொண்டு பார்த்தால்..
இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை என்பதுதான் நிரந்தரம். அதுதான் அறிவு நிலை. 
சதா நம் கபாலத்தில்..வலது மூளையும்..இடது மூளையும்..செய்யலாமா 
வேண்டாமா..எனப் போராடியே..ஒரு முடிவை எடுக்கிறது. 
நம் எண்ண அலைகள்..கபாலத்தில்..வலதுக்கும் இடதுக்கும் ஆடும் ஆட்டம்.. 
கொஞ்சம் விழிப்புணர்வுடன் பார்த்தால்..ஒரு அரைவட்ட நாண் போல 
தெரியும்..அதாவது..காவடியின் மேற்பகுதி போல. 
காவடியாட்டத்தின் சிறப்பே அது விழாமல் இருப்பதுதான். 
in very simple words..kaavadi aattam is the balancing the thing in 
between left and right. 

எந்தப் பக்கமும் ஒருசார்பாய் சாய்ந்துவிடாமல்..நடுனிலையான அறிவுநிலையில்..நாம் வாழவேண்டும்..என்கிற உட்புற மன பயிற்சிக்காக வடிவமைக்கப்பட்ட உள்நிலை விஞ்ஞானமே காவடி தூக்குதல்....




காவடி ஆட்டம்.......


இது முகுளத்தை பக்குவமாக்கும் சுழிமுனைப் பயிற்சி,
  


.....இது நமக்குள் இருக்கும் சூரத்தனங்களை வென்று   இச்சைகளின் வசப்பட்டு வாடிக்கிடக்கும் மனத்தை விடுவித்து ஒருமையாற்றலுடன் மனதை வீறுகொண்டு எழச்செய்யும் பயிற்சி.    எனவேதான்   காவடி ஆட்டம் கெளமாரத்திற்குறிய யோகசாதனையாக இங்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது 

இச்சையை வெற்றி கொண்டு இச்சா சக்தியாக்கிக்கொள்ளும் அற்புத உள்நிலை விஞ்ஞானம்  காவடி தூக்குதல்....காவடி என்பது  சரியையில் யோகம்.

தமிழ் மொழியில் காவுதல் என்றால் தூக்குதல் என்று பொருள். காவு+அடி = காவடி!!! அதாவது இறைவனின் தூக்கிய திருவடியைப் பிடித்து மேலேறிச் செல்வதற்கே காவடி எனப்பெயர்...


இயற்பியலில் Fulcrum,lever என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோம். A lever is a beam connected to a hinge,called a fulcrum. அதுவே Human Fulcrum ஆகும்போது அதே Lever காவடி ஆகின்றது! அதாவது இருபுறமும் எடை சமன் செய்தல் =  Balancing!  (mechanical advantage of a lever(MA) = Balance ofTorque,about the fulcrum; MA= m1/m2= a2/a1)



சம்காரம் செய்த கடவுளர்களில்..எதிரியை..மன்னித்து தன்னிடமே வைத்துக்கொண்ட 
ஒரே கடவுள் முருகன் மட்டுமே. 
அன்பும்..அறிவும்..விழிப்புணர்வும் இருந்தாலன்றி இது சாத்தியமில்லை. 
எனவே..வெளியே நாம் பார்க்கும் காவடி ஆட்டத்தை இன்றுமுதல்...நமக்குள் ஆடிப் பழகுவோம். 
வேண்டுதலிலும் விழாமல்..வேண்டாமையிலும் விழாமல்..நடு நிலையில்..நம் 
அறிவுக்காவடியை ஏந்தி பிடிப்போம். 
நமக்குள் உயிர் உள்ள ஒவ்வொரு நொடியும்..தைப்பூசமே. 

அரோகரா. 


Friday, December 15, 2017

திருமந்திரத் தேன்துளி 1







திருமூலர் பெருமான் திருமந்திர மாலையில்  கதை ஒன்றைச் சொல்லி ஆத்மா, உயிர் ஆகியிவற்றின் இடையேயுள்ள உறவு முறையை அழகாக விளக்குகின்றார். இரண்டு அன்னங்கள் ஓர் ஆற்றில் இருக்கின்றன. இரண்டும் ஒன்றையன்று ஆழமாக நேசிக்கின்றன. ஒன்றை விட்டு ஒன்று பிரியாது. ஒன்று சீவன். மற்றொன்று சிவன். சிவனாகிய அன்னம் தான் வேறுபட்டது என்கிற உணர்வில் இருக்கும்பொழுது சிவத்தின் நிலையை அடையாது. ஆற்றங்கரை என்பது ஆற்று நீர். இரண்டு அன்னங்களும் ஆற்று நீரில் வாழ்கின்றன. சீவனாகிய அன்னம் நீரில் ஆனந்தமாய் நீந்தி அங்கும் இங்கும் சென்று மீன் போன்ற இரைகளைக் கவர்ந்து உண்கிறது. தன் செயலால் இன்பம், துன்பம் இரண்டினையும் நுகர்கிறது. சிவன் என்னும் மீன் நீரில் இருந்தாலும், உப்பு நீரில் வாழும் மீனின் உடலில் உப்பு ஏறாதது போல், தான் தானாய் இருந்து கொண்டு, எதனையும் நுகராமல், சீவ அன்னத்தின் செயல்களை சாட்சியாக மட்டும் பார்த்துக் கொண்டிருக்கின்றது. சீவ அன்னத்திற்கு அருளால் பாதுகாப்பாக இருந்து விடுகிறது. சிவ அன்னத்திற்கு ஆற்று நீரின் நிலையாமை தெரியும். சீவ அன்னமோ நிலையற்ற வாழ்வை நிலையானதாகக் கருதிக் கொண்டிருக்கின்றது. தன் போக்கிலேயே போய்கொண்டிருந்தால், தனக்குத் துணையாக, தன்னைப் பிரியாதிருக்கும் சிவ அன்னத்திடமிருந்து பெறக்கூடிய பெரும்பயனை இழந்து விடுகிறது. குருவருளால் ஒருநாள் சீவனாகிய அன்னம் இந்தக் கலக்கத்திலிருந்து தெளிவடைந்து விடுகிறது. தான் தேடும் இரையைவிடத் தான் வாழும் இடத்தைவிட மேலான இன்பத்தையும், இடத்தையும் வழங்கும் பேராற்றலுடையது தன்னைப் பிரியாதிருக்கும் அன்னம் என்று தெளிந்து அதனை ஆதாரமாகக் கொள்கிறது. அடைதற்கரிய பேரின்பத்தை அடைகிறது. குருவின் திருவருளாலே இது நடைபெறகிறது.
"அன்ன மிரண்டுள ஆற்றங் கரையினில்
துன்னி யிரண்டுங் துணைப்பிரி யாதன்னந்
தன்னிலை யன்னந் தனியன்ற தென்றக்கால்
பின் மடவன்னம் பேறணு காதே". (திருமந்திரம் - 2006)

சீவனென்ன சிவனென்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவன் ஆயிட்டிருப்பரே

Sunday, July 2, 2017

திரி சூலம்




மனித சரீரத்தின் வெளிப்பாடே கோவிலிலுள்ள கோபுரமும், கொடிமரமும்,  ஒருவகையில்  நமது       புராணங்களும்,   இதிகாசங்களும்   உருவச்சிலைகளும் ,அவற்றிற்குத் தொடர்புடைய சமயச்சின்னங்களும், சரீரம், மனம் மற்றும்  உயிர் இவற்றோடு தொடர்புடையவையே,,,,,,,


.  

வெறுமனே கோவிலுக்குச் செல்வதோடு  நின்றுவிடாமல் அனைத்தையும் ஒரு 
மறுஆய்வுக்கு உட்படுத்தி உண்மையை உணர வேண்டியது அவசியமாய் இருக்கிறது.



அன்பு என்பது ஓர் அகஉணர்வு. உயிர்கள் மட்டுமே இந்த உணர்வை அனுபவிக்க முடியும். உயிராகிய சிவமும் இந்த அன்பும் வேறு வேறு அல்ல  அதனால்தான் "அன்பும் சிவமும் இரெண்டென்பார் அறிவிலார்" என்று சொல்லப்பட்டது ...........




 அகத்தில் அன்புபொங்க புறத்தில்  உடல் மூலமாக அது செயல்படுத்தப்படுகிறது.

வெளிப்படுத்தப்பட்ட அன்பின் விளைவை உயிர் அனுபவிக்கிறது.

ஆக அன்போ அல்லது அதற்கு அபரமான காமமோ,
 மாற்றான கோபமோ எதுவாகினும் அது உணர்வாக மனதில்
தோன்றி சரீரத்தின் மூலமாக செயல்பட வேண்டியது கட்டாயமாகிறது . இவை அனைத்துக்கும்    
சாட்சியாக ஆன்மா சாட்சியாக   "சும்மா' இருக்கிறது.

அறிவியல் பூர்வமாக ஒரு உயிருக்குள் உணர்வு பயணிக்கும் தொனியை உணர முடியுமா..?   சிவச் சின்னங்களில் ஒன்றான திரி சூலத் தத்துவத்தை  உணர்ந்து கொண்டால் உணர்வு உயிருக்குள் பயணிக்கும் உள்அனுபவத்தை ஓரளவிற்கு புரிந்துகொள்ள முடியும்.


திரிசூலத்தைக் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் உண்மை விளங்கும்.



மனிதனின் ஆறறிவும் உடலில் ஒவ்வொரு புலனையும், பஞ்சபூதத்தையும் ஊடகமாக கொண்டு செயல்படுகிறது.

நிலம்-தொடு உணர்வு-உடல்(நிலத்தில் செடி உடலில் முடி)
நீர் _சுவைத்தல்-நாக்கு( நீர் ஊறும் புலன்)
நெருப்பு-ஒளி-கண்(உள்ளொளி கொண்டு அகவொளி காணல்)
காற்று-வாசம்-மூக்கு (சுவாசித்தல்)
ஆகாயம்-ஒலி-செவி (ஆகாசவாணியாய் ஓசையைக் கேட்டல்)

ஐம்புலன்களுக்கு ஐந்து பூதங்களென ஐந்து அறிவு வரை சூத்திரம் சரியே.

ஆறாவது அறிவு எது-  அது பகுத்தறிவு என நம் பிள்ளைகளுக்கு சொல்லி தந்தோமே தவிர

அதற்கு மேல் இம்மி அளவு கூட நாம் ஆறாவது அறிவு பற்றிய அறிதலில்

செயல்படவில்லை.

இத்தனைக்கும் பலாயிரம் ஆண்டுக்கு முன்பே ஆறாவது அறிவுக்கு ஒரு
தொல்காபபியன் பெயர் வைத்தும் இன்னும் நாம் அதை பயன்படுத்துவதில்லை.

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அவற்றொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆற்றறிவதுவே அவற்றொடு மனனே..
நேரிதை உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.

இது தொல்காப்பிய சூத்திரம். ஆறாம் அறிவுக்கு பெயர் மனம்.
மற்ற ஐந்து அறிவுக்கும் உள்ளது போலவே மனதுக்கும் தான் செயல்பட ஒரு ஊடகம் தேவை.
மனதின் ஊடகம் மூளை.(இரண்டாவது மூளை; முதுகுத்தண்டு) மனதின் செயல் ஆணைகளை மூளை மூன்று வெவேறான தலங்களிலிருந்து செயல்படுத்துகிறது.



வலது மூளை-இடது மூளை-நடு மூளை(முகுளம்)
இப்படிகூடச் சொல்லாம்
இடகலை-பிங்கலை-சுழுமுனை.

இந்த மூன்று முனைகளைக் குறிக்கும் அடையாளமே திரிசூலத்தின் தலைப்பகுதி.

இரண்டு முனைகள் வலதிடதாய் இருக்க நடுமுனை வானம் பார்த்து இருக்கும்.
தெருவிளக்கு கம்பத்தில் உள்ள மின்சாரத்தை வீட்டிற்குள் கொண்டுவரும்போது

என்ன செய்கிறோம்..?

phase -nutral- என பிரித்து முறையாக wiring செய்கிறோம் அல்லவா..?

இதே அமைப்புதான் சமச்சீராய் பிரிந்திருக்கும் மனித உடலிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

இடது பக்கத்திற்கும் வலது பக்கத்திற்கும் உயிராற்றல் என்கிற மின்சாரத்தை எடுத்து செல்ல wiring செய்யப்பட்டிருக்கும் பாதையே முதுகு தண்டுவடம்.


திரிசூலத்தின் தலைப் பகுதியோடு இப்பொழுது தண்டுவடத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.

எண்ணங்க்ள்தாம் செயல்கள். செயல்களால் விளைவு. அதற்கு பின் கிடைக்கிற அனுபவம் இன்பம் அல்லது துன்பம். இப்படி நிகழ்வது ஒரு சக்கரம்.


எண்ணங்கள் செயலாய் பரிணமிக்க மனம் நினைத்து-மூளை அதை வாங்கி-உடல்உறுப்புகளுக்கு ஆணையிட- அங்கங்கள் அதை செய்யும்.


இந்த நிகழ்விற்கு ஆதாரமாய் இருக்கும் மூன்று மூளையையும் உடலின் அனைத்து உறுப்புகளோடும் இணைத்து வைத்திருப்பது நரம்பு மண்டலம்.

அந்த நரம்பு மண்டலம் முறையாக நம் தண்டுவடத்தில் wiring செய்யப்பட்டிருக்கிறது.

தண்டுவடத்தை எந்த அளவிற்கு நிமிர்த்தி வைக்கிறோமோ..அந்த அளவுக்கு மினசாரப்

பகிர்மாணம் தடை இல்லாமல் இருக்கும்.

அன்பை காட்டுவதால் சிவனாகிப்போன நம் ஒவ்வொருவரும் நம் சூலத்தை எப்படி

நிமிர்த்தி வைத்திருக்க வேண்டுமென இப்போது புரியும்.

சூலம் சரி அது என்ன நடுவில் ஒரு உடுக்கை..?

இதுவும் உடல் தத்துவமே.

உடுக்கையைப் பிரித்து பாருங்கள். ஓசை எழுப்புக்கூடிய இரண்டு பக்கங்கள், தோலை வைத்து இறுக்கக் கட்டப்பட்டிருக்கும் விதம், இவையெலாம் சாதாரண சங்கதிகள் அல்ல. வலது புறம் இறுக வேண்டுமெனில் அதற்கான இறுக்கத்தை இடது பக்கத்திலும், இடது பக்கத்தை வலது புறமாய் இறுக்க வேண்டும். அதாவது நம் உடலில் வலது பக்கம் முழுவதையும் இடது மூளை கட்டுப்படுத்துகிறது.

இடது பக்கம் முழுவதையும் வலது மூளை கட்டுப்படுத்துகிறது.

உடுக்கையின் மையத்தில் உள்ள ஓசை எழுப்பும் மணியானது உடுக்கையை வலதிடதாய்

அசைக்கும்போது வலது பறையில் இடது மணியும்..இடது பறையில் வலது மணியும் ஓசை

எழுப்ப்ம் வண்ணம் ஏற்பாடு.(மணி என்றால் காற்று அதாவது நமது சுவாசம் எனப்பொருள்கொள்ளவேண்டும்)

அதனால்தான் வலது கையோ காலோ இயங்காமல் போனால் சிகிச்சை இடது மூளைக்கு

நடக்கும். இயக்கம் இடதில் தடைப் பட்டால் சிகிச்சை வலதுமூளைக்கு நடக்கும்.

நம் ஒவ்வொருவரின் உணர்வுகளும் உடலுக்குள் செயல்வடிவம் பெறுவதற்கான blueprint இதுதான்.

நமக்குள் இருக்கும் நம்க்குச் சொந்தமான திரிசூலத்தை இன்று முதல் நாம் பூஜிக்கலாமா..?

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்.
தேடுவோம்..அனைத்தையும் உள்முகமாய் தேடுவோம்
அறிவியல் ஆன்மீகம் அனைவர்க்கும் நலம் தரும்..
.

Monday, October 31, 2016

ரிலாக்ஸ் உடலுக்கா??? மனதுக்கா???



லெட் அஸ் கம் டு சாந்தி ஆசனா" யோகாசனப்பயிற்சியின் முடிவில் இந்த வார்த்தையைக் கேட்டதும் எல்லோர் முகத்திலும் ஒரு சந்தோஷம்....உண்மையில் சாந்தி ஆசனத்தில் உடல் மட்டுமல்லாது உள்ளமும் சாந்தி பெறவேண்டும்...... உ டல் உறுதி பெறுவது மட்டுமே யோகத்தின் இறுதி இலட்சியமல்ல , மனம் அமைதிபெறுவதே இங்கு உயர்வான இலட்சியம் ........ மனம் பல வார்த்தைகளாலும் , காட்சிகளாலும் நிரம்பியிருக்கிறது. நமது கம்ப்யூட்டரை வேண்டியநேரத்தில் நிறுத்தவும், இயக்கவும் தெரிந்த நமக்கு, வேண்டியநேரத்தில் நமது மனத்தை நிறுத்தத் தெரிவதில்லை. அதனால் பிறப்பிலிருந்து இறப்பு வரை அது ஓய்வில்லாமல் சதா சலித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் ஒளியாற்றலாகிய உயிரும் சதா குறைந்துகொண்டே இருக்கிறது...

இந்த தொடர் மன அசைவிற்கு நமது கல்வி முறையும் ஒரு காரணமாகிறது. . இந்தக் கல்விமுறையால் எப்படி முழுவதுமாக மனதை உபயோகிப்பது என்று ஒரு பாதியை மட்டுமே கற்றுத் தரமுடிகிறது – அதை ஓய்வெடுக்க கூடியதாக......... நிறுத்துவது எப்படி என்பதை கற்றுக் கொடுக்க முடிவதில்லை. எனவே இந்த மனம் சிலருக்குத் தூங்கும்போதும் தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டே இருக்கிறது. அதற்கு தூங்கத் தெரிவதில்லை. எழுபது வருடங்கள் அல்லது எண்பது வருடங்கள் அது தொடர்ந்து செயல்படுகிறது. இந்தக் கல்விமுறையால் மனதை முழுவதுமாகப் பயன்படுத்தி ஒரு திறமையான பொறியாளனை உருவாக்க முடிகிறது, ஆனால் மனதை ஓயவு பெறச்செய்து மீண்டும் அவனை இயல்பான மனிதனாக்க முடிவதில்லை....
நம்மால் மனத்தை ஓய்வுபெறச் செய்வது எப்படி???எனக்கற்றுக் கொடுக்க முடிந்தால்...... நமது உயிராற்றலை சேமிக்கமுடியும்.....ஆரோக்கியமான மனிதர்களை உருவாக்குவதும் சாத்தியம்தான். இந்த விசேஷக் கல்வி முறையைத்தான் "யோகம்" என்கிறோம்.... . யோகக் கல்வியால் மனம் தேவைப்படாத போது அதை நிறுத்தும் ஒரு பட்டனை உருவாக்க முடியும்.

Thursday, September 1, 2016

நுண்மான் நுழைபுலம்........







நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.  


நண்பர்களே , 

கல்லாமை எனும் அதிகாரத்தில்  ஞான ஆசான்  வள்ளுவன்  கூறிய   குறுகத்தரித்த  குறளே   இது.....

இந்தக் குறளுக்கு   நமது  பெரியவர்கள் கொடுத்த தெளிவுரையை  கூகுளாரின் உதவியோடு   இங்கு காண்போம்.......
நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.
சாலமன் பாப்பையா
அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.
கலைஞர்
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புணையப்பட்ட பாவை போன்றது.
மு.வரதராசன்

'கல்லாமை" எனும் "அதிகாரத்தில்"  ஐயன்  வள்ளுவன் கொடுத்த இந்தக்   குறளை  "யோகக் கண்கொண்டு "பார்க்கும் பொழுது  எனக்கு உணர்த்தப் பட்டவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தப் பதிவின் நோக்கம்....

அறிவு என்றால் என்ன????

வள்ளுவர் கூறுவதைப் பார்ப்போம்....

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் 
உள்ளழிக்கல் ஆகா அரண். (421) 


இறுதிக்காலம் வரையும் மரணத்தருவாயிலிலும் காப்பாற்றும் கருவி அறிவு ஆகும்; எம படராகிய பகைவர் இந்த உடலுக்குள் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டையே "அறிவு "...........



நண்பர்களே, கல்வி என்றால் என்ன??????

ஜீவனை சிவமாக்கும் "சாகாக்கல்வியே " இங்கு கல்வியாகப் போற்றப்படுகிறது.....  சாவை வெல்லமுடிகிற அறிவே இங்கு அறிவாகப் போற்றப்படுகிறது....பிற அறிவெல்லாம் இங்கு வெற்று அறிவாகவேப் பார்க்கப்படுகிறது.....

"நுண்மான் நுழைபுலம் " என்றால் என்ன?????

இங்குதான்  யோக ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்  வள்ளுவர்...

எண்சான் உடலுக்கும் பிரதானமாகிய சிரசில்  ,.....அதாவது நம்முடைய தலையில்  நுண்ணிய  மாட்சிமையுடைய  ஒரு துவாரம் ,  ஒரு சிறிய துளை உள்ளது....அந்தத்  துளையில்  "வாசியாகிய"  பிராணனை  நுழைத்துச் செலுத்தக்கூடிய  அறிவினைப் பெற்ற யோகியர் "மரண மடைவதில்லை"   .....ஜீவனை  சிவமாக்கி    ஆதியாகிய சிவத்துடன்  ஒன்றி   ஜீவ  சமாதியாகி விடுகின்றனர்.....

சிரசில்  உள்ள  இந்த நுண்ணிய  மாண்புடைய  துவாரத்தில்  "வாசியாகிய" பிராணனை நுழைவிக்கும் அறிவைப்  போதிக்கும்   யோகக்கல்வியே   இங்கு உண்மைக்கல்வியாக , "நுண்மான் நுழைப்புலமாக"   'சாகாக் கல்வியாகப்" போற்றப்படுகிறது.....பிற  கல்வி கற்றவர்கள்  இங்கு நிரம்பக்   கற்றிருந்தாலும்   கல்லாதவர்களாகவேப்  பார்க்கப்படுகிறார்கள்.....

மண்ணால்  செய்யப்பட்ட இந்த உடலை  விண்ணாய் , ஒளியாய் ... மாற்றுவதே  இந்த  சாகாக்கல்வியின்   இலட்சியம்......பரிமாணத்தில்  பிற உயிர்களுக்கு  இல்லாமல்  நமக்கு  மட்டும்  மனித  சரீரம்   வாய்க்கப்பெற்றதே இந்த இலட்சியத்தை  நிறைவேற்றிக்  கொள்ளத்தான் .........அறியாமையினால் வயிறு  வளர்க்கும்  ("மெக்காலே" ) பாடத்தைப்   பயில்பவர்கள்  அழகிய  மண் பொம்மைக்கு  ஒப்பானவர்கள்  என்கிறர்  அய்யன்  வள்ளுவர்....


நமது  தலையில்  உள்ள  இந்த  சிறிய  துவாரம் சித்தர்களால்  
"மயிர்ப்பாலம் "   "சுழிமுனைக்கதவு"  "நெருப்பாறு"  "நூல்பாலம்" "ஞானவாசல்"  என வர்ணிக்கப்பபடுகிறது....


நெற்றிக்கு நேர் உள் நின்றதும் 

நேரான உட்பாறை யுடைத்ததும் 

நெருப்பாறு மயிர்ப்பாலம் கடந்ததும் 

நெஞ்சில் யமவாதை நீக்கியதும் நாமே! நாம்.   

                                                                              என்கிறர்  ,....பரஞ்சோதி மகான்...


வல்லோர்கள் பார்ப்பார்கள் வாட்டியன்தானாய் வாய்க்குமோ யெல்லோர்க்கும் எளிதாச்சோஞானம்
பல்லோர்கள் மாயமாய்கை வாட்டியத்தான்பார் பாங்கான மயிர்ப்பாலம் செதுப்பாதுந்தாண்டித்
தல்லோர்கள் வாசினையைத் தவிடுபொடியாக்கி தரிக்கின்ற வாசியைத்தான் சாதனம்பண்ணி
மல்லோர்கள் மார்க்கமாய் ஆறுதளம் தாண்டி மந்திரியாமர்க்கடக மழிந்துபோமே
                                                                                 
                                                                         என்கிறார்     போகமகரிஷி........


அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும்

சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும்

நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்

எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.


                                                                                என்கிறார் சிவவாக்கியார்..........


நண்பர்களே,......நுண்மான் நுழைபுலம்  தெரிந்து கொண்டோம்........தக்க ஞான குருவை அணுகி  "உணர்ந்து"  கொள்ளுங்கள்.....

Friday, April 12, 2013

மச்ச எந்திரம்



துரௌபதையின் சுயம்வரத்தில் முக்கியமான போட்டியொன்று இருந்தது. 

மச்சயந்திரம் என்றொரு யந்திரம் . உயரத்தில் ஒரு தூணில் குறுக்குக் கம்பத்தில் நிறுவப்பட்ட யந்திரம் அது. அதில் ஒரு "மீன்" பதுமை வேகமாகச்சுழன்று கொண்டிருக்கும். 

அதன் கண்ணைப் பார்த்து அதனை அம்பால் அடிக்கவேண்டும். சுலபமாகத் தோன்றக்கூடும். ஆனால் அவ்வளவு சுலபமில்லை நண்பர்களே......!!   அந்த மீன் பதுமைக்குக் கீழே இரண்டு சக்கரங்கள் சுழன்றுகொண்டிருக்கும். அவற்றில் "துவாரங்கள்" இருக்கும். 

இந்தச் சக்கரங்களும் ஒன்றுக்கு ஒன்று எதிரும் புதிருமாகச் சுழன்றுகொண்டிருக்கும். இந்த இரண்டு சக்கரங்களின் துவாரங்கள் ஒன்றாகச் சேரும்போது அவற்றின் நேரே "மீனின் கண்ணும் "வரவேண்டும். 

அந்த இரு சக்கரங்களின் துவாரங்களின் வழியாக மீனின் கண்ணில் அம்பு எய்யவேண்டும். 

அத்துடன் விட்டார்களா?      இல்லை. 

அந்த மச்ச யந்திரத்துக்கு நேர் கீழே ஒரு தடாகம். அதில் நிர்மலமான நீர்; அசைவற்று இருக்கும். அந்த நீரில் மேலேயுள்ள மச்சயந்திரத்தின் பிரதிபிம்பம் தெரியும். 

மேலே மச்சயந்திரத்தைப் பார்க்காமல் கீழே தண்ணீரில் தெரியும் பிம்பத்தைப் பார்த்துக்கொண்டு மேலே அம்பைக் குறிவைத்து எய்யவேண்டும். 

அவ்வளவுதானா? 

இல்லை. 

இன்னும் இருக்கிறது. 

அந்தத் தடாகத்தில் ஒரு பெரிய தராசு இருக்கும். அந்தத் தராசின் இரு தட்டுகளிலும் தட்டுக்கு ஒரு "காலாக" வைத்து ஊன்றி அதில் "இசகாமல் பிசகாமல்" நின்று அங்கிருந்து கீழே பார்த்துத் தண்ணீரில் தெரியும் பிம்பத்தின் மூலம் குறியைக் குறித்துக்கொண்டு, மேலே வில்லைத் தூக்கிப்பிடித்து  நாணை இழுத்துவிட்டு மீனின் கண்ணைச் "சுழலும் சக்கரங்களின் துவாரங்களின்" வழியாக அடிக்கவேண்டும்.

இப்படிக் குறிபார்த்து, மச்ச யந்திர மீனின் கண்ணில் அம்பை எய்து தான் துரௌபதையின் கரத்தை வென்றானாம் அர்ஜுனன்.

அர்ஜுனன் வென்றவுடன் ஐந்து பேருக்கும் மனைவி ஆகிவிட்டாளாம் அந்தக் "குமரி"

என்ன நண்பர்களே ! கதை புரிகிறதா?

இதில் அர்ஜுனன் யார்?.........துரெளபதை யார்?..........மச்ச எந்திரம் எது? .....மீனின் கண் எது?.....சுழன்று கொண்டிருக்கும் சக்கரம் எது?......தடாகம் எது?........தராசு எது?.....கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!!!!!!!!!!!!


Saturday, August 4, 2012

கூர்ம யோகம்




இந்த பிரபஞ்சத்தில் 84 இலட்சம் ஜீவ ராசிகள் இருப்பதாக யோக நூல்கள் கூறுகின்றன.



ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்

நீர்பறவை நாற் காலோர் பப்பத்துச் - சீரிய

பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த

அந்தமில் சீர்த்தாவரநா லைந்து.


ஊர்வன : 11

மானுடம் : 9

நீர் :10

பறவை :10

நாற்காலோர் :10

தேவர் :14

தாவரம்(4*5) : 20


மொத்தம் = 84

ஆக 84 இலட்சவகை ஜீவராசிகளாகும். 


மேற்கண்ட பாடலில் 7 வகையான ஜீவராசிகளின் உற்பத்தி பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஜீவராசிகள் நான்குவகை யோனி வாயிலாக தோன்றுகின்றன. குறிப்பாக கருப்பை, முட்டை மற்றும் வெப்பம், வியர்வைகளால் தோன்றுகின்றன.. 



இந்திய யோக மரபில் 84 இலட்சவகை ஆசனங்கள் இருப்பதாக யோக நூல்கள் கூறுகின்றன...இந்த 84 இலட்ச யோகாசன இருக்கை நிலைகளும் ஜீவராசிகளின் இருக்கை நிலைகளை ஒத்ததே . யோக கலாசாரத்தில்,உலக மதங்களில் எந்த கண்டத்திலும் இல்லாத அளவுக்கு மனிதன் அல்லாத மற்றைய ஜீவராசிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து புனிதமாக்கப்பட்டுள்ளது..



எலி முதற்கொண்டு யானை வரை, புல் முதற்கொண்டு புள்ளினம் வரை அனைத்து உயிர்களின் இருக்கை நிலைகளுக்கும் முக்கியத்துவம் தந்திருப்பது நமது யோக மரபு . உருவ அளவில் வேறுபாடு இருந்தாலும்,ஆத்ம நோக்கில் அனைத்து ஜீவராசிகளும் இங்கு ஜீவர்களாகவே மதிக்கப்படுகின்றனர்.


இந்திய யோக மரபாண்மை என்பது, "மரம்,செடி,கொடி.மண்,மலை,பறவை, விலங்கு,உயிருள்ள பொருள்,உயிரற்ற பொருள் என அனைத்தையுமே தெய்வாம்சம் பொருந்தியதாக பார்கக் கூடியது" என்று மிகச் சாதாரணமாக ஒரு கருத்தை எல்லோரும் கூறிவிடலாம்.உண்மைதான், அதனால்தான் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வள்ளலாரால் வாட முடிந்தது. எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும் என்கிற கருத்தியலுக்கு இது பொருந்தகூடியதுதான் என்றாலும், அதற்குரிய சரியான காரணத்தை உணர வேண்டியதுள்ளது.


அந்த வகையில் நீண்ட வருடங்களாக நமது யோக மரபில் எனது சிந்தனையைத் தூண்டிவிட்ட ஒரு விஷயம், ஆமை!. மிகவும் மெதுவாகச் செயல்படக்கூடிய ஆமை யோகிகளிடம் 'பச்சக்கென்று' ஒட்டிக்கொண்டதெப்படி..?சிந்தனை செய்ய வேண்டிய விஷயமாக எனக்குப்பட்டது.

பாற்கடலைக் கடையும்போது மேருமலைக்கு அடி ஆதாரமாக இருந்த ஆமை பற்றியும், தசாவதாரங்களில் ஒன்றான கூர்ம அவதார ஆமை பற்றியும் , வெவ்வேறு மதிப்பீடுகளை உற்றுனோக்கி, உணரவேண்டியதிருக்கிறது.

ஆமை விஷயத்திலும், நாம் வழக்கம் போல் சுட்டுவிரல் காட்டும் நிலாவைப் பார்ப்பதற்குப் பதிலாகச் சுட்டு விரலையே நிலாவாகப் பார்க்கும் பாமர நிலையில் இருக்கிறோமோ? என எனக்குத்தோன்றியது.


ஆமைகள் இன்னமும் பல சந்தேகங்களுக்கு விடை சொல்லமுடியாத ஒரு உயிரினம். ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழக்கூடிய உயிரினம் எனச் சொல்லப்படுவதுண்டு..சில கோவில்களில் காணப்படும் ஆமை உருவங்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த உருவங்களின் மூலமாக யாரோ எனக்கு யோகபாடம் கற்றுத்தருவதாகவே ஒரு உள்ளுணர்வு...அந்த உள்ளுணர்வை துணைகொண்டு ஆமையை ஆராயத்தொடங்குவோமா???? ......




ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடத்து
-திருக்குறள் 126-

ஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்.


ஆமை போல் ஐந்தும் அடக்கித்திரிகின்ற ஊமைக்கு முத்தியடி குதம்பாய்.

ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துப் பாதுகாப்பது போல ஒருவன் ஐந்து புலன்களயும் உள்ளுக்குள் இழுத்து ஒடுக்கி விட்டால் ஆன்ம ஒளி பிறக்கும் என்று குதம்பை சித்தர் கூறினாலும், திருமந்திரம் இதற்கும் மேலாக ஒரு படி செல்கிறது.

இன்றைய உயிரியல்(Biology) படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும் பிராணி ஆமை தான் என்று தெரியும். இதை கின்னஸ் சாதனை நூலிலும் காணலாம். 



இதையே திருமூலரும் 


ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்

ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள

வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்

ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே. (-திருமந்திரம் 2304-) 


என்கிறார்...................



இந்த மந்திரத்தில்,மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால், .............ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன செய்ய வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார்:

இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும். 



ஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதை நமது சித்த பெருமக்கள் அறிந்திருந்தனர்.மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும் அல்லவா?. அல்லது சரியான தகவலை உணர்ந்துகொள்ளும் உத்தி இருந்திருக்க வேண்டும். திருமூலநாயனார் 3000 ஆண்டு வாழ்ந்திருக்கிறார். ஆமையிடமிருந்து ஒரு சரியான யோக யுக்தியைக் கற்று, இந்தப் பாடல் மூலமாக நமக்கு ஒரு யோகபாடம் நடத்தியிருக்கிறார்.


நீண்ட நாள் வாழ்வது எப்படி?


ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் . இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அந்தளவுக்கு ஆயுள் கூடும்!


நாம் சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு பாங்கில் பணம் சேமிப்பது போல. பாங்கிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் உயிர் வாழும் ஆண்டுகளும். 



இந்த சுவாச ரகசியமே யோகத்தின் அடிப்படை...




திருமூலர் தனது பாடலில்:-


விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்

தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்

வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து

விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே


விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.


இந்த சுவாச தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''சிதம்பர இரகசியம்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருகிறது. 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கிறது. 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடிகளைக் குறிக்கிறது.


ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் 

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர் இல்லை 

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளருக்கு 

கூற்றை உதைக்கும் குறியதுவாமே. என்கிறார் திருமூலர்.

இந்தப் பாடலில், ஒரு சுவாசக் கணக்கு இருப்பதாகவும்,.அதன்படி சுவாசிக்கத் தொடங்கினால் கூற்றுவன் எனச் சொல்லக்கூடிய எமனையும் விரட்டி விடலாம் என்கிறார் திருமூலர். அந்தக்கணக்கின்படி ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.




ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்


18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இந்த நிலை யோகியரால்மட்டுமே முடியும்)


ஆமை ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை தான் சுவாசிக்கிறதாம். அதனாலேயே அதற்கு வாழ்நாள் அதிகம்.


ஒரு மனிதன் பிராணாயாமம் செய்தால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிராணாயாம ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம் என்கிறார் திருமூலர். 


சரி நண்பர்களே!ஆமை என்ன பிராணாயாமம் செய்கிறது? அதற்கு மட்டும் ஏன் ஆயிரம் வயது?


அடுத்த பதிவில் பார்ப்போமா?




(ஆமை இன்னும் வரும்)