Total Pageviews

Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Tuesday, May 15, 2018

காலநீட்டிப்புக் கணிதம்.






பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்புக் கணிதம்..!


செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .

பண்டைய தமிழ்ச்சித்தர் ஏடுகளைப் புறட்டும்போது நம் இன்றைய அறிவியலுக்கும், சிலவேளைகளில் நம்மால் நம்புவதற்கு கடினமானதுமானதுமானதும், கற்பனைக்குக்கூட எட்டா முடியாத பல தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. இருந்தும் இவற்றை ஆய்வு செய்வது அவசியமாகின்றது. நம் முன்னோரின் அறிவாற்றல் கட்டற்றக் களஞ்சியமாகவுள்ளது. இவற்றில் பல கேட்பார் யாருமின்றி அழிந்துவிட்டன, இன்னும் பல அழிவின் விளிம்பிலுள்ளன என்பது கவலை தருகின்றது. இருந்தபோதும் நம்மால் இயன்றவரை தமிழர்களை விழிப்புணர்வு அடைய வைப்பதே நமது இந்தப் பகிர்வின் திடமான எண்ணமாகும்.

பண்டைய வானவியலில் ஒரு நாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இ
ருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24*60=1440 ஆகும் .

வருடத்தின் சில நாட்களில் பகல் நீண்டு இருக்கும் சில நாட்களில் இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டு கூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலை முதன் முதலில் உலகிற்கு கூறினான்.

சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்

“ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி “


சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்
ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல் நீடிக்கும்
ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்
பாடலின் கடைசி வரி " விடுபூ முடி " மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது இந்த வாக்கிய கணித முறை தான் சோதிடவியலுக்கு அடிப்படையானதாகும்.

வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்

பகல் நீட்டிப்பை காண
வி - டு - பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளை எடுத்துக்கொள்வோம் வி என்பது வைகாசி
டு என்பது ஆனி
பூ என்பது ஆடி
மு என்பது ஆவணி
டி என்பது புரட்டாசி
இது போலவே வி - டு - பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளை கொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்
மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை
வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
வ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்

இது போல வி - டு - பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல் எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது

பகல் நீட்டிப்பு
வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்

இரவு நீடிப்பு
கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

Wednesday, January 10, 2018

பல்லாங்குழி....

பல்லாங்குழி....


மேலைநாட்டு வழக்கப்படி விளையாட்டுகளை..உள்ளரங்க விளையாட்டு, வெளியரங்க விளையாட்டு என பிரிப்பதுண்டு. அவ்வகையில் பல்லாங்குழி உள்ளரங்க விளையாட்டு . இருவராக ஆடக்கூடிய விளையாட்டுக்கள் நிறைய உண்டு. நம் விஸ்வனாதன்ஆனந்த் ஆடும் சதுரங்கம் முதல், உலகையே கலக்குதே அந்த கேரம் வரைக்கும் நிறைய ஆட்டம் இருந்தாலும்.. அவற்றிற்கெல்லாம் இல்லாத தனிபெரும் பழமையும், தத்துவ தன்மையும் பல்லாங்குழிக்கு உண்டு.
இருவராக விளையாடும் எல்லா ஆட்டங்களுமே எதிரில் விளயாடுபவர்களை வீழ்த்தும் ஆட்டம். பல்லாங்குழி மட்டுமே வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னால் ஒரு ஞானத்தையே உணரவைக்கும் ஆட்டமாகும். பல்லாங்குழி மனையின் அமைப்பை கவனித்தால் பெரும் வியப்பு தோணும் நமக்கு. ஆம்..ஒரு மீனின் வயிற்றை ஒரு பகுதியில் மட்டும் கிழித்து அப்படியே திறந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அமைப்பு.
ஒரே மனையாய் மூடியிருந்தது இப்போது பாதி பாதியாய் பிரிந்து, இந்த பக்க ஆட்டக்காரரக்கு பாதி அந்த பக்க ஆட்டக்காரருக்கு பாதி. அவரவர்களுக்கான பாதியில் இருப்பது ஏழேழு குழிகள். ஒன்று கூடாது..ஒன்று குறையாமல். ஏழேழு குழிகள். மூடிய போது ஏழு முழுக்குழிகளாய் இருந்தவை ஆட்டம் துவங்கியதும்..ஏழு அரைக்குழிகளாக பிரிந்துவிட்டது.
இந்த ஏழு என்றதும் பலருக்கும் பல உண்மைகள் தோன்றலாம்..அதென்ன மிக சரியாய் ஏழு என்று..?ஆம் நம் கலாச்சரத்தில் ஏழுக்குள் இருக்கும் முக்கியத்துவத்தை யாராலும் மாற்றமுடியாது. நாம்தான் இன்னும் உணராமல் இருக்கிறோம்.
இந்த பல்லாங்குழிமனையே ஒரு மனித உடல்தான். மனித உடல்தான் என்ற பிறகு அதைபோய் பிரிப்பானேன்..? பிரிக்கத்தான் வேண்டும். காரணம்..ஒவ்வொரு மனிதனும் அண்டமும் , பிண்டமுமாக இரண்டாகத்தான் இருக்கிறோம். மேலும்..இவ்வுலகின் ஒவ்வொரு ஆணும் பெண்ணுமே அர்த்தனாரிகள்தான். நம் உடலில் உச்சந்தலை சகஸ்ரம் உட்பட இருக்கும் ஆறு ஆதாரசக்கரங்களே இந்த ஏழு குழிகள். சிவபெருமான் தன் உடலில் பாதியை சக்திக்கு கொடுத்துவிட்ட கதை நமக்கு தெரியும். இதை நம் ஒவ்வொருவரின் வாழ்கையோடு பொருத்திபார்க்க முடியுமா..?
நிச்சயமாக முடியும். இந்த உலகமே ஈர்ப்பு தத்துவத்தின் அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்மைக்குள்ளும் சரிபாதி பெண்மை இருக்கிறது. அதுபோலவே ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சரி பாதி ஆண்மை இருக்கிறது. அது மறைத்துவைக்கப்பட்டிருக்கிறது. இதை காலம் உணர்த்தும்போது ஒரு ஆண் தனக்குள் இல்லாததான பெண்மையை ஒரு பெண்ணிடம் தேடுவதும், ஒரு பெண் தன்னிடம் இல்லையென கருதும் ஆண்மையை ஒரு ஆணிடம் தேடும் தன்மைதான் உடல் ஈர்ப்புக்கான அடிப்படை.
அந்த ஈர்ப்பு ஒரு முடிவுக்கு வந்து பந்தத்தில் நிறைவுறும்போது - இணைகளாய் மாறிய அவர்கள் அர்த்தநாரிகள் ஆகிறார்கள்.தம் நேசங்களை நிறைவு செய்துகொள்ளும் பொருட்டு அன்பு காட்டுபவர்களாகவும், விட்டுதருபவர்களாகவும் மாறுகிறார்கள்.தனி தனி உடல் ஆனாலும் வாழ்வின் வெவ்வேறு தளங்களில் மனதால் இணைந்தே அவர்கள் முடிவெடுத்து வாழவேண்டியிருக்கிறது.
சரி பல்லாங்குழி ஆட்டத்திற்கும் இந்த தன்மைகளுக்கும் என்ன தொடர்பு...?
நம் வாழ்வின் ஆதாரமாய் விளங்கும் நம் ஆதாரசக்கரங்கள் ஆண் - பெண்ணாய் பிரிந்து அதே நேரத்தில் ஒத்த முடிவில் இணைந்து செயல்படும் தன்மையதாய் உள்ளதன் குறியீடே பல்லாங்குழியாட்டம்.
இன்னொரு விதத்தில் சொல்வதானால் - கோவில் அரசமரத்தடியில் இருக்கும் 'நாகல்' போல, நம் உடலின் ஆறு ஆதார மையங்களை உச்சி சகஸ்ராரத்தில் இணைப்பதான குண்டலினி பாம்பின் மடித்துவைத்த தோற்றமே பல்லாங்குழி மனை. மிக பழமையான பல்லாங்குழி மனைகளில் பாம்புகள் செதுக்கப்பட்டிருப்பதை நீங்களே பார்க்கமுடியும்.
ஆணின் குண்டலியினில் பெண்ணின் ஆளுமை, மற்றும் பெண்ணின் குண்டலியினில் ஆணின் ஆளுமை , இவற்றின் அடிப்படை அத்தியாவசியமே.. பல்லாங்குழி ஆட்டத்துக்கான மூலக்கரு. ஒரு ஆண் தனியாக முடிவெடுப்பதும், ஒரு பெண் தனியாக முடிவெடுப்பதும்..வாழ்வில் என்ன வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு பெரிய உதாரணங்கள் தேவை இல்லை . மகாபாரதத்தில் சூதாடியபோது ஆண்கள் முடிவெடுத்தார்கள். இராமயணத்தில் மானுக்கு ஆசைப்பட்டு கணவன் ராமனையும், இலக்குவனையும் இயக்கியபோது சீதை முடிவெடுத்தாள்.
அரிச்சந்திரபுரானத்தில்- தன் உண்மை பேசும் கொள்கையிலிருந்து தவறக்கூடாது என்பதற்காக மன்னன் அரிச்சந்திரனும் - அவனது மனைவியும் சேர்ந்து முடிவெடுத்தார்கள்.
இருவர் ஒத்திசைந்து முடிவெடுத்து காலவோட்டத்தில் துன்பம் வந்தாலும் நிலையான இறுதி இன்பத்தை அடைய இப்படி எடுக்கப்படும் முடிவுக்கு பல்லாங்குழியாட்டத்தில் நிருபணம் உள்ளதா..?
உள்ளது.
அந்த ஏழு குழிகள் சொன்னோமல்லவா..? அவை வேறெதுவுமில்லை..
1.சகஸ்ராரம்

2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்.

இந்த ஏழின் முழுமையும் இந்த ஆட்டத்தில் சரி பங்காய் பிரிக்கப் பட்டிருக்கிறது. நம் ஞானியரின் பார்வையில் இந்த ஏழு சக்கரங்களும் இன்னொரு பார்வையில் சுட்டிக்காட்டபட்டுள்ளன.
சகஸ்ரஹாரம் துவங்கி விசுத்தி வரை - ஆகாயம் அல்லது மேலோகம் எனவும், அனாகதம் துவங்கி சுவாதிஷ்டானம்வரை பூலோகம் எனவும், கடைசி மூலாதாரம் அதற்கு கீழ் நரகம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இப்போது பல்லாங்குழி மனையை விரித்துவைத்துக்கொள்ளுங்கள். சோவிகளை எடுங்கள். எவ்வளவு சோவிகள் தெரியுமா ஒவ்வொரு குழிக்கும் எட்டு எட்டு. இது எண்குணத்தின் குறியீடு. இந்த எட்டு குணங்களைக்கொண்டுதான் நாம் நம் ஒவ்வொரு உணர்வுகளையும் இந்த உலகை நோக்கி பிரதிபலிக்கிறோம்.
விளையாட இருவர் அமர்ந்தாயிற்று. அவர்தம் முறையே இடது பக்கம் ஒருவருக்கும் வலது பக்கம் ஒருவருக்குமாக இருக்கும் முதல் குழியே சகஸ்ரஹாரம். ஆட்டத்தை துவங்குபவர் எந்த குழியில் இருந்தானாலும் விளயாட்டை துவங்கலாம்.
permutation and combination தத்துவப்படி- முடிவுகள் வெவ்வேறாக இருந்தாலும் - மேலோகம் என்று சொல்லக்கூடிய முதல் மூன்று குழிகளிலிருந்து துவங்கப்படும் ஆட்டம் மிகுந்த லாபம் தரக்கூடியதாகவும், பூமி, நரகம் என்று சொல்லக்கூடிய பகுதியில் துவங்கும் ஆட்டத்தின் போக்குகள் வேறு மாதிரி இருப்பதையும் நீங்கள் விளையாடி பார்த்தால் கண்கூடாக அனுபவிக்கலாம்.
இந்த வாழ்வு எதிர்மறைகளுக்கு இடையில் ஒத்திசைந்து நேர்மறையாய் வாழவேண்டியதன் தேவையை பல்லாங்குழி ஆட்டம் உணர்த்துவதை நீங்களே உணரமுடியும்.
சிறு வயதில் என் காது கேட்காத பாட்டி - என்னோடு விளையாடும்போது ஜெயித்துக்கொண்டே இருப்பாள். நான் அழுவேன். ஒரு முறை சொன்னாள்.."இந்த குழியிலேர்ந்து எடுத்து ஆடு..நீயும் ஜெயிப்பே.."என்று .......ரகசியம் அதுதான். நம் முன்னோர்களின் அத்தனை உருவாக்கங்களும் ஞானமேயன்றி வேறில்லை.

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும், 

நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, 
அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
அன்னவர்க்கே சரண் நாங்களே.

Sunday, May 14, 2017

நாதம் என் ஜீவனே...









கோவில் என்பதை உலக வாழ்வை மட்டுமே மையப்படுத்திப் பார்த்து வருகிறோம். கோவிலைப் பொதுவாகப் பொருள்சார்ந்த புறவாழ்க்கைக்கான தளமாகவேப் பார்க்கிறோம். கோவிலை உலகம் கடந்த நிலையில் அகநிலை கொண்டும் கொஞ்சம் பார்ப்போம். பொதுவாகக் கோவிலை கர்ம சித்திக்கானக் கோவில், யோக சித்திக்கானது, ஞான சித்திக்கானது என வகைப்படுத்த வேண்டும். என்றாலும், கோவில்களுக்கான பொது அமைப்பைக் கொண்டு நாம் பார்க்கலாம். கோவிலுக்குள் நுழைவதை வான்வெளியில் நுழைவதாகப் பாவித்துக் கொள்வோம். துவக்கத்தில் ஒன்பது கோள்களைக்(நவகிரகங்கள்) கடக்கும் நாம் அவற்றுக்கு அடிப்படையான கதிரவனையும், சந்திரனையும் பார்க்கிறோம். பிறகு, அவற்றைக் கடந்திருக்கும் அண்டங்களையும், பேரண்டங்களையும் மண்டபங்களாகவும், பிரகாரங்களாகவும் பார்க்கிறோம். இறுதியாக நாம் பார்ப்பது கருவறை. கருவறை என்பது இருட்டான அறை. அதுதான் கோவிலின் முதன்மையான, முக்கியமான பகுதி. வெட்டவெளியையேக் கருவறை குறிக்கிறது. கருவறையில் நிகழும் வழிபாட்டைக் கவனிப்போம். தீபம் ஏற்றப்பட்டு உள்ளிருக்கும் சிலைக்குக் காட்டப்படுகிறது. அந்நேரத்தில் பூசை செய்பவர் மணியையும் ஒலிக்கிறார். வெளிச்சத்தில் நாம் அச்சிலையைப் பார்க்கிறோம். அதாவது நம்மால் காணமுடியாத வெட்டவெளியின் பெருந்தோற்றத்தைக் கண்டுகொண்டதானப் பரவசம் அங்கு சாத்தியப்படுகிறது. வெட்டவெளி, மணி ஒலி, தீப ஒளி எனப் பிரபஞ்சம் தாண்டிய பெருவேளிக்கே சென்று விட்டதாய் ஒரு பேருணர்வு. வழிபாட்டில் ஐம்பூதங்களும் மதிக்கப்பெறுவது நம் கலாச்சாரத்தின் சிறப்பம்சம். வழிபாட்டின்போது தரப்படும் திருநீறு, மற்றும் திருமண்(மண் பூதம் ), தீர்த்தம்(நீர்பூதம்), சாம்பிராணி மணம் ( காற்று பூதம்) மலர்கள் மற்றும் திருவமுது போன்றவற்றைக் கவனிப்போம். வழிபாட்டில் மந்திரங்கள் முக்கியம் என்பது நம் ஆன்றோர்களின் கருத்து. இந்த நடைமுறைகளெல்லாம் எதற்காக??? . கோவிலின் கருவறைக்குள் சேமித்து வைத்திருக்கும் ஆகாயத்தை நமக்குள் கொண்டு வருவதற்குத்தான்.. ஆனால் எந்த ஒரு நடைமுறையையும் பின்பற்றாமல் ஆகாயத்தை நமக்குள் கொண்டு வரக்கூடிய ஒரு யுக்தி உண்டு எனில் அது பாடல் பாடுவதுதான். ஆம் நண்பர்களே , கோவிலின் கருவறையில் இருக்கும் ஆகாய சக்தியை நமது உடலில் ஊடுருவச்செய்வதற்கு பாடுவது ஒரு எளிய மார்க்கம் . ஆகாய பூதத்தில் பிறபூதங்கள் அடக்கம் என்பது நாம் அறிந்ததே. அவ்வகையில் எவ்விதச் சடங்குகளும் செய்தாலும் பாடல்கள் பாடினாலே வழிபாடு நிறைவுறும் என்பதும் நம் சமயத்தில் இருக்கிறது. கோவில்கள்தோறும் பயணித்த நம் சான்றோர் பெருமக்கள் பாடிவைத்திருக்கும் பாடல்களே அதற்குத் தகுந்த சான்றாக இருக்கின்றன. மனம்விட்டுப் பாடும் ஒருவனிடமிருந்து உளவியல் சிக்கல்கள் தானாக நீங்கி விடுகின்றன எனும் நவீன அறிவியலின் கருத்து கவனத்தில்கொள்ளத்தக்கது. ஆனால் எல்லாப்பாடல்களையும், எல்லாக் கோவில்களிலும் பாட முடியாது.

நாதயோகத்தை முழுமையாகப் புரிந்து கொண்டுப் பாடப்படும் பாடல்களினால் நமக்குள் இருக்கும் வெட்டவெளியையும், கருவறை வெட்டவெளியையும் இணைக்க முடியும்...இது சாத்தியப்பட்டால் நாத தலைவனை நம்முள் தரிசிக்க முடியும்.... பாடிப்பெறலாம் பரலோக நாதனை....

Friday, January 11, 2013

வாழ்க்கைச்சுவடு






இன்று,இந்த நடுநிசியில் பிரபஞ்ச எல்லைகளுக்கு அப்பால் தூக்கியெறியப் படப் போகிறான் அவன்.....மரணம் அவனைக் காதலிக்கத் தொடங்கி விட்டது....இந்த விஷயம் தெரிந்த மறுநிமிடம் உடலும் மனமும் பர பரத்தது. அவன் உயிர் அதன் கூட்டுக்குள் சிறகை விரித்துச் சோம்பல் முறித்துக் கொண்டது.



இத்தனை நாள் வாழ்ந்த நாட்குறிப்பைத் திருப்பிப் பார்த்துக் கொண்டான்.குறிப்பிட்டுச் சொல்லும்படியான மைல்கற்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை.சேகரித்த நட்புக்களும் உறவுகளும் எண்ணிக்கையில் ரொம்பவும் குறைவாகவே இருந்தது. பணக் கற்றைகள் அதனினும் குறைவாகவே இருந்தது.

இனி? .........

அவனுக்கான மணித்துளிகள் இவை எவற்றைப் பற்றியும் கவலைப் படாமல் கரைந்து கொண்டே இருந்தன... 43 வருடங்களை இப்படி ஒன்றுமே இல்லாமலா கரைத்துவிட்டேன் என்று அவன் மனம் குற்றம் சாட்டியது...திடீரென்று முதல் வகுப்பு டீச்சர்,எப்பவும் சண்டை போடும் இந்திரா,அழகாகச் சிரித்துப் பேசும் அசோக்,நண்பர்கள் கூட்டமாக நனைந்த மழை,பத்தாம் வகுப்பு பிரிவு விழா,முதல் பாராட்டு, முதல் காதல் இப்படியாக வாழ்வின் எல்லா முதலும் நினைவுக்கு வர..... இரண்டாவது எதுவுமே நினைவுகளின் விளிம்புகளில் எப்படி ஒன்றுமில்லாமல் கரைந்து போயின?

இப்படி சம்பந்தமில்லாமல் மனம் தாவிக் கொண்டேயிருந்தது......

மனம்...... உடனடியாகச் சுவடுகளைப் பூமியில் பதிக்க குறுகிய காலத் திட்டம் போட்டது. முதல் வேலை மனத்தில் நினைவுகளின்  சேகரிப்பா? பணச் சேகரிப்பா?உறைந்திருந்த உயிர் திடீரென்று விழித்துக் கொண்டது.

அதுவா? இதுவா?எல்லாமேவா?

நாளை முதலில் எதைச் செய்வது?

உறவுகளைப் பார்த்து எத்தனை நாளாகிறது? ஒரு நடை ஊருக்குப் போய் விட்டு வரவேண்டும் .....என் கண்ணே....உன்னைத் தூக்கி முத்தமிட்டு எத்தனை நாளாகிறது?எங்கே என் மகன்??? கண்விழிக்கட்டும் உன்னைக் கன்னத்தோடு உரசி இறுக்கிக் கொள்கிறேன்....வாழ்க்கைத் துணையின் பெயர் சொல்லி அழைத்துத்தான் எத்தனை நாளாகிறது???என்னவளே!!! நாளை பார்....உன்மேல் அன்பு மழை கொட்டப் போகிறேன்....என நினைத்துக் கொண்டான்

சில மணித்துளிகளுக்கான இந்த இரவல் உயிரைக் காலன் திருப்பிக் கேட்டுக் காவல் காக்கிறானே????ஏன் எல்லோரும் தூங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்??? காலத்தின் அருமை புரியவில்லையா?...உங்கள் தூக்கத்தினால் கொஞ்சமே கொஞ்சம் மிஞ்சியிருக்கும் என் மணித்துளிகள் விரயமாகிறதே????எனக் கவலைப் பட்டான்.

இந்த சுவாசம் இன்றே கடைசியோ??ஏன் இப்படி மூச்சு வாங்குகிறது?கண்கள் ஏன் இப்படிக் கொட்டுகின்றன? கடவுளே இன்னும் ஒரே ஒரு நாள் கொடு...தொலைத்த நொடிகளையெல்லாம் அந்த ஒரு நாளில் வாழ்ந்து முடித்துவிடுகிறேன்.....என வேண்டிக் கொண்டான்....அந்த மௌனத்தின் இருட்டுக்குள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை கூட இல்லாமல் வீழ்ந்து கிடந்தான்..... 

யார்மேலும் ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி இன்னும் ஒரே ஒரு நாள் அதிகம் கொடுக்காதக் கடவுளிடம் மட்டும் கோபித்துக் கொண்டே அந்த உயிர்ப் பறவைத் தன் சிறகுகளை உதிர்த்துவிட்டுத் தன் மரணக் குறிப்புகளைப் பிரதியெடுக்கக் கூட நேரமில்லாமல் நட்சத்திரக் கூட்டங்களை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது......

இன்னும் ஒரே ஒரு நாள் இவனுக்குக் கொடுத்திருந்தால் தன் சுவடுகளை அழுத்தமாகப் பூமியில் பதித்திருப்பானோ எனக் கடவுள் யோசிக்க ஆரம்பித்திருந்தார்....

நம்மிடம் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன, இந்த பூமியில் சுவடுகளைப் பதிப்பதற்கு????




"நான்" யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்..........நீங்கள்?????/

Saturday, August 25, 2012

கடவுள் இறந்துவிட்டார்.......




"கடவுள் இறந்து விட்டார்.நேற்று மாலைத் தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.அன்னாரது ஈமக்கிரியைகள் வரும் 16ம் தேதி கண்ணம்மாப்பேட்டைச் சுடுகாட்டில் நடைபெறும்"இடி இறங்குவது போல் அந்த செய்தி மக்களிடையே இறங்கியது.ஆரம்பத்தில் யாரும் அதை நம்பவில்லை.ஆனால் கடவுளின் உடலை மக்களின் பார்வைக்கு வைத்ததும் தான் அதை அனைவரும் நம்பினர்."ஓ"வென அனைவரும் அழுது புலம்பினர்.அவரது உடலைச் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல பெரும் கூட்டம் கூடியது.அவரது உடலைத் தகனம் செய்து முடித்ததும் பெருத்த விவாதம் மூண்டது."உலகம் இதோடு அழிந்தது" என அலறினார்கள் . "நியாயம்,தர்மம்,நேர்மை,நீதி எல்லாம் கடவுளோடு புதைபட்டு விட்டது" என ஆருடம் சொன்னார்கள் பலர்.

ஆள்வோர் கூட இதை நினைத்துக் கவலை கொண்டனர்.கடவுளுக்கு 16ம் நாள் காரியம் முடிந்த பிறகு பெரிய கலவரம் வரலாம் என அரசு எதிர்பார்த்தது. அதற்குள் புதிய கடவுளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஆள்வோர் முடிவு செய்தனர். புதிய கடவுளையும் புதிய மதத்தையும் தீர்மானிக்க ஒரு சர்வதேசக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.கடவுளைத் தேர்ந்தெடுக்கும் முன் புனித நூல் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா?கமிட்டியின் முன்பு இது தான் பெரிய பிரச்சனையாக இருந்தது.இறுதியில் கமிட்டி மெம்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜனநாயக அரசியல் சட்டமே உலகின் புதிய வேதநூலாக இருக்கும் என முடிவுசெய்தனர்.பெண்ணுரிமை,பேச்சுரிமை,சமத்துவம்,சுதந்திரம் ஆகியவை இந்த புதிய மதத்தின் கோட்பாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

"அவனவன் வேலையை அவனவன் பார்ப்பது" என்பது இந்த புதிய மதத்தின் முக்கிய கோட்பாடாக எற்கப்பட்டது. அடுத்தவனின் தனிமனித சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது மிகப்பெரும் பாவமாக இந்த புதிய மதத்தில் கருதப்பட்டது.

கடவுளாக யாரை நியமிக்கலாம் என மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டது. இறுதியில் தனிமனித சுதந்திரத்தை கடவுளாக ஏற்கலாம் என ஒருமித்த கருத்து உருவானது.ஒரே கடவுள் வழிபாடு இருந்தால் பிரச்சனை உருவாகலாம் என்பதால் சுதந்திரத்தோடு சமத்துவமும் சகோதரத்துவமும் கடவுளாகச் சேர்க்கப்பட்டு 3 கடவுள்கள் - ஒருவருக்கொருவர் சமமானவர்களாக உருவாக்கப்பட்டனர்

கடவுளின் வழிபாட்டு ஸ்தலங்களாகப் பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கும் என கமிட்டியினர் முடிவு செய்தனர்.புதிய மதத்தை அனைவருக்கும் இந்த பள்ளியில் கற்றுத்தரலாம் என முடிவு செய்யப்பட்டது. புதிய மதத்தை கட்டாயமாக்கலாமா என பெருத்த விவாதம் நடந்து இறுதியில் அதை கட்டாயமாக்குவதில்லை என முடிவு செய்தனர். தன்னை கட்டாயாமாக அனைவரும் வணங்குவதைத் தான் விரும்பவில்லை என புதிய கடவுளானத் தனிமனித சுதந்திரம் கூறிவிட்டார்.மற்ற கடவுள்களானச் சமத்துவமும்,சகோதரத்துவமும் இதையே சொன்னார்கள்.

16ம் நாள் காரியம் முடிந்ததும் மக்கள் பெரும்திரளாக கூடினார்கள். வன்முறையில் அவர்கள் ஈடுபடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் அப்படி வன்முறையில் ஈடுபடவில்லை. கட்டித் தழுவிக் கொண்டனர்.மதம்,ஜாதி,இனம் முதலிய அத்தனை வேறுபாடுகளயும் மறந்து அனைவரும் ஒருவரை ஒருவர் தழுவி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள். இனிமேல் ஜாதி மத சண்டைகளேப் பிடிப்பதில்லை என அனைவரும் சத்தியம் செய்து கொண்டார்கள்.

திடிரென்று பார்த்தால் உலகின் அனைத்து பிரச்சனைகளும் மிகச் சுலபமாகத் தீர்ந்து விட்டன. ஜாதிச் சண்டை,மதச் சண்டை முதலிய அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விட்டன. நாடுகளுக்கிடையே இருந்த பல பிரச்சனைகள் விநாடி நேரத்தில் ஒழிந்து விட்டன.வலதுசாரி இடதுசாரி அரசியல் கட்சிகள் அனைத்தும் காணாமல் போய் விட்டன.

ஆள்வோர் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். கலவரம் வருவதற்குப் பதில் உலகம் அமைதியான பூங்காவாக மாறிவிட்டது. காதல் திருமணங்கள் செழித்து வளர்ந்தன. ஆண்கள் பெண்களுக்குச் சம உரிமை தந்தனர். ஜாதி கொடுமைகள் ஒழிந்து மேல் ஜாதியினரும் கீழ் ஜாதியினரும் பெண்கொடுத்துப் பெண் எடுத்து சம்மந்திகளானார்கள். மத வேறுபாடுகள் மறைந்து மனிதர்கள் அனைவரும் ஒன்றே குலம் என வாழத்துவங்கினர். பெண்கள் சுதந்திரம் பெற்று சம உரிமை பெற்ற மனைவிகளானார்கள். பிற்போக்குச் சட்டங்கள் அனைத்தும் ஒழிந்து அவர்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையும் கிடைத்தது.

புதிய கடவுள்களை அறிமுகப்படுத்த இதுவே சரியான சந்தர்ப்பம் என ஆள்வோர் முடிவு செய்தனர். பெரும் கூட்டம் ஒன்றை கூட்டினர்."இதோ புதிய மதம்,இதோ புதிய கடவுளர்" என சமத்துவம்,சுதந்திரம்,சகோதரத்துவம் மூவரையும் அறிமுகப்படுத்தினர்."இது தான் இவர்களை வணங்கும் முறை" என சமதர்ம ஜனநாயக சட்டப்புத்தகத்தை அறிமுகப்படுத்தினர்.

மக்கள் அனைவரும் புதிய கடவுளரை வணங்க முற்பட்டனர்."வேண்டாம்" எனச் சமத்துவ கடவுள் அலறினார். "நான் உங்களை விட உயர்ந்தவனல்ல. உங்களில் ஒருவன்." என கூறினார். மேடையிலிருந்து இறங்கி மக்களிடையேக் குதித்து அவர்களை கட்டித்தழுவினார்."நான் உங்கள் சகோதரன். உங்களில் ஒருவன். என் பெயர் சமத்துவம்" என கூறினார். மக்கள் ஆர்பரித்து அவரை தழுவினர். ஆரவாரம் செய்து அவரை ஏற்றுக்கொண்டனர்.

அடுத்ததாகச் சகோதரத்துவத்தை வணங்க முற்பட்ட போது அவரும் அதை ஏற்காமல் மக்களிடையேக் குதித்தார்."நான் உங்கள் சகோதரன்.என்னை ஏன் வணங்குகிறீர்கள்?" எனச் செல்லமாக கோபித்தார்."நான் உங்களில் ஒருவன்.என் பெயர் சகோதரத்துவம்" என கூறினார். மக்கள் ஆர்ப்பரித்து அவரை தழுவினர். ஆரவாரம் செய்து அவரை ஏற்றுக்கொண்டனர்.

சுதந்திரமும் மக்களிடையே கலந்தார்."நான் சுதந்திரம்.என்னை ஏற்றுக்கொண்டால் நீங்களும் சுதந்திரம் பெற்றவர்களாவீர்கள்" எனக் கூறினார். மக்களிடையே மக்களாக இந்த மூன்று கடவுளர்களும் ஒன்று கலந்தனர். தம் வேதநூலை மக்களுக்குப் படிக்க கொடுத்தனர். கோடிக்கணக்கில் மக்கள் இப்புதிய மதங்களால் ஈர்க்கப்பட்டனர். இதை தழுவினர்.

இந்தக் கூத்தை எல்லாம் விண்ணில் இருந்தபடி கடவுள் ரசித்து சிரித்துக்கொண்டிருந்தார். இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று தானே அவர் தற்கொலை செய்தது போல் நாடகமாடினார். மனிதன் தன் பிரச்சனைகளைத் தானே தீர்த்துக்கொள்ள வேண்டும், உலகின் புதிய கடவுளாக அவன் உருவெடுக்க வேண்டும்,சாதி,மத சண்டையை அவன் நிறுத்த வேண்டும்,எதற்கெடுத்தாலும் கடவுளிடம் ஓடி அவருக்கு ஜால்ரா தட்டுவதை அவன் நிறுத்த வேண்டும் என அவர் நினைத்தார்.

அதை செய்ய சிறந்த வழி இதுதான் என அவருக்கு பட்டது. அதனால் தான் இந்த தற்கொலை டிராமாவை அவர் அரங்கேற்றினார்.

மக்கள் சிரித்து சந்தோஷமாக இருப்பதைக் கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கும் இனி உலகின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டியத் தொல்லை விட்டுப்போனது.

ரிமோட்டை எடுத்து செய்திகளைப் பார்க்கத் துவங்கினார். மதக்கலவரம்,போர், சண்டை என எதுவும் இல்லாத மானிடஇனத்தின் முன்னேற்றத்தை,பெண்ணின்னேற்றத்தை,சமத்துவத்தை,சுதந்திரத்தை மட்டுமே செய்திகளில் பார்த்த கடவுள், ஆனந்த கண்ணீர் விட்டார். சிட்டுக்குருவிகள் போல் தன் குழந்தைகள் சிறகடித்துப் பறப்பதைக் கண்ட கடவுள் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயின் மனநிலையை அடைந்து சாந்தி பெற்றார்.




ஓம் சாந்தி.....சாந்தி....சாந்தி 







posted by முத்தமிழ்

Wednesday, July 18, 2012

கடவுள் பொம்மை










மதியம் மூன்று மணி ஆகியிருந்தது. கழுத்தில் கிடந்த அந்த அழுக்குத்துண்டால் முகத்தைத் துடைத்தவாறேக் கூவிக் கூவி கடவுள்களை விற்றுக் கொண்டிருந்தான் அந்த தள்ளு வண்டிக்காரன். அவ்வப்போது வறண்டு விடும் தொண்டையை அழுக்காயும் பழுப்பாயும் உள்ள பாட்டிலைத் திறந்து வீட்டிலிருந்து கொண்டு வந்த உப்புத் தண்ணீரால் ஈரப்படுத்தி ஒட்ட வைத்துக் கொள்வான்.




சிறியது, நடுத்தரம், பெரியது என்று பணத்துக்குத் தக்க அளவில் அவனிடம் கடவுள்கள் இருந்தனர். அவனது தள்ளு வண்டியில் எல்லாக் கடவுள்களும் இருந்தனர். ஒரு அடி அளவுள்ள பிள்ளையார் பொம்மை இருபத்தி ஐந்து ரூபாய் என்றால் அதே அளவுள்ள ஏசுநாதர் பொம்மையும் அதே விலைதான். அவனுக்கு எந்த சாமியும் உசத்தி இல்லை எந்த சாமியும் தாழ்ச்சி இல்லை.





துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டே அவன் வண்டியைத் தள்ளிய ஏதோ ஒரு புள்ளியில் ஒரு சின்னப் பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறியது. அப்போது ஏற்பட்ட ஒரு சின்ன குலுக்கலில் ஒரு கடவுள் பொம்மைக்கு உயிர் வந்து விட்டது.




" என்ன முத்து, எப்படிப் போகுது பொழப்பு?”





“ அத ஏன் கேக்குற சாமி? நாய் படாத பொழப்பு. நாலு பேரோட வயித்த ஒரு வேல நனைக்கறதுக்குதான் இப்படி நாயா பேயா வெயில்லுன்னு பார்க்காம மழைன்னு பார்க்காம அலைஞ்சு தேய வேண்டியிருக்கு” என்று புலம்பிக் கொண்டே போனவன் கொஞ்சம் சுதாரித்தவனாக ,” "ஆமாம் தெரியாமத்தான் கேக்குறேன் ஏம் பொழப்பு எப்படிப் போகுதுன்னுகூடத் தெரியலன்னா அப்புறம் நீயெல்லாம் என்ன சாமி?”





“ நூத்துக்கணக்கான வருஷம் தவம் இருந்த ஆனானப் பட்ட முனிவர்களே நான் முன்னாடிப் போய் நின்னு என்ன வரம் வேணும்னு கேட்டா எப்படிப் பதறிப் போய் குரல் நடுங்க யாசிப்பாங்கத் தெரியுமா? நீ என்னடான்னா கொஞ்சம் கூட பதட்டமே இல்லாம சர்வ அலட்சியமாப் பேசற”




“ அட போ சாமி, அவங்களுக்கெல்லாம் ஓங்கிட்ட ஏதோ ஒரு வரம் தேவப் பட்டிருக்கும். அதனால ஒங்கிட்ட வளஞ்சு குனிஞ்சு கூழக் கும்பிடு போட்டிருப்பாங்க. எனக்கு உன்னிடம் எதுவும் தேவை இல்ல. , புயலோ, மழையோ, வெயிலோ நாயா பேயா ஒழைக்கிறேன். ஒழப்புக்கான கூலியத் தவிர வேற எதையும் நான் எதிர்பார்க்குறது இல்ல. அதனாலதான் இந்த அசால்ட்டும் திமிரும்”





கடவுள் ஒரு கனம் அப்படியே ஆடிப் போனார். ஆக, உழைக்காம எதிர்பார்க்குற பணக்காரனிடம் தான் தனது ஜம்பம் பலிக்கும் என்பதும் உழைப்புக்கான நியாயமான கூலியை மட்டுமே எதிர்பார்க்கும் வேர்வைக்காரனிடம் எதுவும் நடக்காது என்பதும் புரிந்து போக மௌனமானார் கடவுள்.





கொஞ்ச நேரம் இப்படியே மௌனமாக கடந்தது. வீடுகளே இல்லாத பகுதியாக இருந்ததால் .அவனுக்கு கூவ வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. கூவிக்கொண்டே இருந்த வாயை எவ்வளவு நேரம்தான் சும்மா வைத்திருப்பான்? மெல்ல ஆரம்பித்தான்.





“ஏஞ்சாமி என்ன இப்படி படச்ச?”





கேள்வியின் வில்லங்கம் புரியாத கடவுள் “எப்படி?” என்று அப்பாவியாய் கேட்டார்.





“ ஒன்னும் தெரியாத அப்பாவியாட்டம் கேளு. அவுங்கள மாடி மேல மாடி வீட்டிலும் எங்கள ப்ளாட் ஃபாரத்திலும் ஏம்பா படச்ச?”





என்ன சொன்னாலும் சிக்கிக் கொள்வோம் என்பது புரியாமல் எதையாவது சொல்லி சிக்கிக் கொள்ள கடவுள் என்ன மன்மோஹன்சிங்கா? " நான் எங்கடா முத்து உங்கள படைச்சேன்? நீதானடா எங்களை எல்லாம் படைச்சு இப்படி இந்த தள்ளு வண்டியில போட்டு இந்த வேகாத வெயில்ல தள்ளிட்டுப் போற..”





“ என்னோட பொழப்பப் பாத்தா ஒனக்குக் கூட நக்கலா இருக்குல்ல. படைக்கிற அளவுக்குத் துப்பு இருந்தா நான் ஏஞ்சாமி இந்த மொரட்டு வெயில்ல கெடச்ச தேஞ்சுப் போன ரெண்டு சோத்தாங்கால் செருப்பையே ரெண்டு கால்லயும் மாட்டிக்கிட்டு லோலு படறேன்..” என்று சொல்லிக் கொண்டே போனவன் எதிர்த்தத் திசையில் இருந்து டி.வி. எஸ் சில் வந்த தம்பதியர் இவனை நிற்கச் சொல்லி கைகாட்டிக் கொண்டே அவர்களது வண்டியை ஓரங்கட்டவே “ செத்த பொறு சாமி கிராக்கி ஒன்னு வருது . முடிச்சிட்டு வந்துடறேன்” என்றவாறே அவர்களை எதிர் கொள்ளத் தயாரானான்.





ஏனோ தெரியவில்லை அந்தப் பெண்ணிற்கு இவனோடு பேசிக் கொண்டு வந்த அந்த பொம்மையைப் பிடித்துப் போயிற்று. கையிலெடுத்து புரட்டிப் பார்த்துக் கொண்டே " இது எவ்வளவு?” என்று கேட்டாள்.





எங்கே தன்னை விற்றுவிடுவானோ என்ற பயம் அந்தப் பொம்மைக் கடவுளைத் தொற்றிக் கொண்டது.





“ அது வேணாம்மா. "டேமேஜ்" ஆனது. வேற எதையாவது நல்லதா எடுங்கம்மா” என்றவன் அந்தப் பொம்மையை வாங்கி ஒரு ஓரமாய் வைத்தான்.





தன்னை அவசரமாய் விற்காமல் இருந்தமைக்காக ,அவர்கள் இருவருக்கும் தெரியாத வகையில் ஒரு புன்னகையால் அவனுக்கு நன்றி சொன்ன அந்தக் கடவுளை நோக்கி “ எதையாச்சும் ஒளறி காரியத்தக் கெடுத்துடாத, இந்த வியாபாரத்த முடிச்சுட்டு வந்துடறேன்” என்று அவர்களுத் தெரியாத வகையிலேயே இவனும் அவரை நோக்கி புன்னகைத்து வைத்தான்.











அதை எடுத்து இதை எடுத்து அப்படியும் இப்படியுமாய் உருட்டிப் பார்த்து இறுதியாய் ஒன்றை எடுத்து அறுபது சொல்லி நாற்பதுக்கு இழுத்து வந்த அவர்களது சாமர்த்தியத்தை அவர்களே ரசித்தவாறு நகரத் தொடங்கினர் அந்தத் தம்பதியர். போகும் போதும் அந்தப் பெண் அந்த பொம்மையை மீண்டும் கையிலெடுத்துப் பார்த்தாள்.





“ அதுதான் நல்ல சரக்கில்லன்னு சொன்னேனேம்மா. அதப் போடு”





“ இல்லப்பா அது என்னமோ தெரியல இருக்கிற சாமியிலேயே இந்த சாமிதான் உயிர்ப்போட இருக்கிற மாதிரித் தெரியுது.” என்றவளிடமிருந்து அந்தப் பொம்மையை நாசுக்காக வாங்கி வண்டியில் போட்டவன், “ உங்களுக்கு நல்லது சொன்னாப் புரியாதும்மா. நாளைப்பின்ன உங்க கிட்ட நான் தொழில் பாக்குறதா வேண்டாமா?” என்றான்.





“ அதுதான் ஓடஞ்ச பொம்மங்கிறாப்புல இல்ல. வச்சிட்டுப் பேசாம வாயேன்” என்று அவளது கணவர் சலிக்கவே அந்தப் பெண் தங்களது வண்டி நோக்கி நகர்ந்தார். வண்டியில் ஏறி அமர்ந்த பின்பும் அந்த பொம்மையின் மீது அவளது கண் இருந்ததை முத்து கவனிக்கவே செய்தான்.





அப்பாடா என்றிருந்தது முத்துக்கு. எங்கே தனக்கு வாய்த்தப் பேச்சுத் துணையைப் பறித்துக் கொண்டு போய்விடுவாளோ என்று ஒரு கணம் ஆடித்தான் போனான்.





” தேங்க்ஸ் எ லாட் முத்து”





“ என்ன சாமி கான்வெண்ட்டுல படிச்ச தொர வீட்டுப் புள்ள மாதிரி இங்க்லீசெல்லாம்” பேசற.





” எல்லா பாஷையும் நமக்கு ஒன்னுதானேப்பா”





“ அப்ப ஒனக்கு எல்லா பாஷையும் தெரியுமா?”





“ஆமா! பின்னத் தெரியாம?”





“ இல்ல அப்ப ஒனக்கு தமிழ் தெரியுமா?”





“ லூசாடா முத்து நீ. இவ்வளவு நேரம் நாம தமிழ்தான பேசினோம்”





“ஆமாம் ஆமாம் நாந்தான் ஏதோ கிறுக்குத் தனமா பேசிட்டேன். அப்புறம் ஏன் சாமி தமிழ் ல சாமி கும்பிடக் கூடாதுங்கறாங்க?”





“ நான் எப்பவாச்சும் அப்படி சொன்னேனாடா? அது மட்டுமல்லடா முத்து, அப்பனுக்கே க்ளாஸ் எடுத்த முருகனுக்கே பாடம் நடத்திய அவ்வையோட ஊருடா இது. அப்பேர் பட்ட முருகனையே அசால்ட்டாப் பார்த்து ஒன்னோட தத்துவம் பிழை என்றால் அதை சொல்ல என் தமிழுக்கு உரிமை உண்டு என்று சொன்னாளேடா கிழவி. அவ்வளவு கம்பீரமான மொழிடா தமிழ்”





“ அவ்ளோ கிரேடா சாமி தமிழுக்கு”





“இல்லையாடா பின்ன. இந்த மொழியை ரசிக்கத் தானேடா சிவனே நக்கீரனை சீண்டிப் பார்த்தார்”





“ அப்புறம் ஏன் சாமி பல பள்ளிக் கூடத்துல ‘அம்மா’ன்னு கூப்பிட்டாலே புள்ளைங்கள முட்டிக்கால் போட வைக்கிறாங்க?”





“ அந்தப் பள்ளிக் கூடங்களிக்கு ஏண்டா புள்ளைங்கள அனுப்புறீங்க?”





“ அதுவும் சரிதான் சாமி”





இப்படியான பேச்சுக்கு இடையே இரண்டு மூன்று பொம்மைகளை விற்றிருந்தான். ஒரு லாரி ஓட்டுநரிடம் பேசும் போது 'ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்'


விலையேற்றம் குறித்து முத்து பேசியிருந்தான்.





“அது என்னடா 'ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்?'





” அது ஒரு வகையான ரசாயனக் களி மண் சாமி”





“ உங்க ஊருல களி மண்ணு தீர்ந்து போச்சாப்பா? பேசாம அதுலேயே செய்யலாமே?”




“ இந்த ஷைனிங் கிடைக்காது சாமி”





“ இல்ல எங்களில் சிலரை தண்ணீல போடறப்ப கறையாம மீனெல்லாம் செத்துப் போகுதாமே? பேசாம களி மண்ணுல செஞ்சா மீனெல்லாம் பிழைக்குமே முத்து”





" நான் பிழைக்க வேணாமா சாமி. இந்த நவீன காலத்துல களி மண்ணு சாமியெல்லாம் யாரு வாங்குவா சாமி?. அது மட்டுமல்ல ' ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்ல ' செஞ்சாத் தான் உன்ன செஞ்ச திருப்தியே வருது சாமி”





“பார்த்தாயா முத்து, நீயே வசமா வந்து ஒத்துக்கிட்ட பார்த்தாயா. அப்ப நீதான எங்களப் படச்சது?





”அது என்னவோ நெசந்தான் சாமி. ஆனா உன்னப் படைக்கிறதுக்காக என்னப் படச்சது நீதானே சாமி?”





"கடவுள் மீண்டும் பொம்மையாய்ப் போனார்"






Wednesday, June 27, 2012

ஐ போன்- சொன்ன வேதம்








வணக்கம் நண்பர்களே! நான் தான் செல்போன் பேசுகிறேன்!

என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?......உலகமே என் மூலமாக பேசும்போது நான் மட்டும் பேசக்கூடாதா என்ன?????


என்னுடைய பரிமாணத்தில் நான் இப்போது "ஐ போன்"


என் புத்தம்புதிய, அதிநவீன Android operating system என்ன! மினுமினுக்கும் user interface என்ன!... டச் ஸ்க்ரீன் என்ன!... 5G connectivity என்ன! ... உலகிலுள்ள எல்லப்பாடல்களையும் பதிவு செய்து வைத்துக்கொள்ளக் கூடிய அளவிற்கு ஜிகா பைட்ஸ் மெமரி மற்றும் MP4 player..கணக்கற்ற மெகா பிக்சல் கேமெரா என்ன?...கேம்ஸ் என்ன?... என்று என் பெருமைகளைக் கூறிக்கொண்டே போகலாம்......

எனக்குப் பெருமை தாங்கவில்லை....பின் இருக்காதா?.. இப்போது நான் ஒருவரோடு பேசப்பயன்படும் கருவி மட்டுமா என்ன?...."நான்" இல்லாவிட்டால் உலகமே ஸ்தம்பித்து விடும்.....பேச்சுக்காக மட்டுமே டெலிபோன் என்ற காலம் மலையேறிப்போச்சு.....

சரி விசயத்துக்கு வருவோம்....

என்னை முதன்முதலில் வாங்கியவர் ஒரு சில மாதங்களுக்கு எல்லோரிடமும் என்னுடைய சிறப்பம்சங்களைக் கூறித் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தார்......மனிதர்களாகிய உங்களில் சிலர்...புதுசா கல்யாணம் ஆனவுடன்...புதுசா வேலை கிடைத்தவுடன்...அல்லது வியாபாரத்தில் லாபம் கிடைத்துக் கொஞ்சம் அதிகமான பணம் கையில் கிடைத்தவுடன்..."தலை-கால்" தெரியாமல் ஆடுவீர்களே!! அதுபோல்தான் "நானும்" ........எனக்கு ஒரே குஷி!!!!!!


என்னை வைத்திருந்தவருக்குக் கொஞ்ச காலம் என்னைப் பிடித்திருந்தது.......என்னுடைய பயன்பாடு முடிந்து விட்டதாகவும், வேறொரு "ஐ போன்" வாங்கப் போவதாகவும் அவருடைய நண்பரிடம் கூறிக்கொண்டிருந்தார்.... எனக்குத் தூக்கி வாரி போட்டது....ச்சே...இந்த மனிதர்களே இப்படித்தானா? பயன்பாடு முடிந்தவுடன் தூக்கிப் போட்டு விடுவார்களோ??? என்னுடைய பயன்பாடு முடிந்து விட்டதா????? அப்ப நான் இறந்து விடுவேனா?????? மரண பயம் என்னைப் பிடித்து கொண்டது....ரொம்ப கஷ்டப்பட்டேன்...எனக்கு ஒரு உண்மை புரிந்தது....எவ்வளவு தான் பெருமை பேசினாலும் ஒரு நாள் எல்லோரும் இறந்து விடுவோமோ?......மரண பயத்தினால் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டேன்......

அந்தக் குறிப்பிட்ட நாளும் வந்தது.....என்னவர் ஒரு புது போன் வாங்கிவந்தார்....எனக்குப் பயம்....அதிகமாகியது....என் உடலை இரண்டாகப் பிரித்து "என்னை" மட்டும் தனியாக எடுத்துப் புது போனில் மாட்டிக் கொண்டார்......

என்ன ஆச்சரியம் !!!!!! நான் இறந்து விடுவேன் என நினைத்தேன் ....ஆனால் இருக்கிறேனே....என் உடலாகிய போனைப் பிரிந்த பிறகும் இதோ உயிரோடு இருக்கிறேனே!!!!!!இந்த போன் "நானில்லையா"???? அப்ப இந்த சிம் கார்டு தான் "நானா"!!!!!!!!  

இத்தனைக்காலமும் இந்த உடலாகிய போன் தான் "நான்" என தவறாக நினைத்திருக்கிறேன்.....இப்போது மரண பயம் விலகியது.....கொஞ்சம் கொஞ்சமாக "ஞானம்" வரத் தொடங்கியது.......சந்தோசத்தில் உறங்கிப் போனேன்.....



காலையில் எழுந்து பார்த்தால் ....


எனக்கு மூச்சுமுட்டுகிறது...என்னால் சரியாகப்பேசமுடியவில்லை...ரொம்ப.....பயமாப்போயிட்டுது...


என்னவென்று விசாரித்துப்பார்த்ததில்......தமிழ்நாட்டில் கரண்ட் கட்டாம்..என்னோட பேட்டரில சார்ச் இல்லையாம்.......



இப்போதான் எனக்கு ஒரு உண்மை புரிஞ்சுது...

"பிராணசக்தி"யாகிய பேட்டரி இல்லைனா..."மனமாகிய சிம் கார்டு "வேஷ்ட்......."மனமாகிய" சிம்கார்டும் , பேட்டரியாகிய பிராணனும் இணைந்து செயல்பட்டால் தான் போனாகிய "இந்த உடல்" வேலை செய்ய முடியும் என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்.....மின்சாரமாகிய .....பிராணசக்தியை இனி வேஸ்ட் பண்ணக்கூடாது என்ற உண்மை எனக்குப் புரிஞ்சுடுது!!!!!பிராண சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தேன்.........


நல்லாத்தான் வாழ்க்கை போயிட்டுருந்தது.....திடீரென ஒருநாள் என்னால செயல்பட முடியல .....பேட்டரில பிராண சக்தி இல்லையோன்னு நினைச்சேன்.....ஆனால் பேட்டரில "பிராண சக்தி" நல்லாவே இருந்துச்சு...பிறகு ஏன் என்னால் செயல்பட முடியவில்லை?????

விசாரித்துப்பார்த்ததில்.......சிக்னல் கிடைக்கலையாம்....."சிக்னல்" என்றால் என்னன்னு எனக்குள்ளேயே விசாரம் செய்ததில் "ஆத்மனாகிய சிக்னலே" "உண்மையான நான்" என உணர்ந்து கொண்டேன். உடலாகிய போன் இருந்தாலும்,இல்லாட்டியும்......மனமாகிய சிம்கார்ட் இருந்தாலும் இல்லாட்டியும்......மின்சாரமாகிய பிராண சக்தி இருந்தாலும் இல்லாட்டியும்........ஆத்மனாகிய சிக்னல் நித்தியமாக இதோ இருக்கிறேன். 

உடலாகிய போன் நானல்ல
மனமாகிய சிம்கார்டு நானல்ல
பேட்டரியாகிய பிராணனும் நானல்ல
ஆத்மனாகிய சிக்னலே நான்

பூரண ஞானம் என்னுள் ஒளிரத் தொடங்கியது......

என்ன மக்களே!! என்ன சொல்ல வாறேன்னு புரியுதா? 

நீங்களும் ,

இந்த உடல் நானல்ல ,
இந்த மனம் நானல்ல,
பிராணனும் நானல்ல,
பூரணமான,நித்ய,சுத்த,முக்த,உணர்வாகிய ஆத்மனே "நான்" என எப்போது உணரப் போகிறீர்கள்?

அறிவே இல்லாத" நானே" இந்த உண்மையை உணரும்போது ஆறறிவு பெற்ற நீங்கள் உங்களுக்குள் உண்மையாக உள்ள பொருளை உணர்வால் உணர வேண்டாமா?

தவளை வேதம் சொன்னால் அதனை `மாண்ட்டூக்ய உபநிஷதமாக எடுத்துக்கொள்வீர்கள்!!!!... பாம்பு யோகத்திற்கு சூத்திரம் சொன்னால் அதை பதஞ்சலி யோகசூத்திரமாக எடுத்துகொள்வீர்கள்...நான் வேதம் சொன்னால் எடுத்துக்கொள்ள மாட்டீர்களா?????
.













Thursday, April 26, 2012

அய்யோ.....அய்யோ....









நவீன கட்டண(மில்லாத) கழிப்பிடம் 




இதுதான் ஸ்ட்ரைட்டனிங்கா........?



இந்த பைக் ல வீலிங்....பண்ணலாமா...? 



இலவச டிவி யோ....?







Tuesday, April 3, 2012

தேன்சிட்டு....

"இன்னைக்கு செம வெயில்னு" சொல்லிக்கிட்டே வீட்டுக்குள் நுழைந்தாள் வேலைக்காரி செல்வி.........


"அம்மா...... வாட்டர் டேங் நிறைஞ்சு தண்ணி வெளிய போகுது ......எங்க இருக்கீங்க"..... கத்தினாள்...


"அய்யய்யோ.....வேலையில கவனமா இருந்ததுல மோட்டர ஆப் செய்ய மறந்துட்டேன் செல்வி .... மோட்டர் சுவிச்ச ஆப் பண்ணிடுமா "...


..........சொன்னவங்க ஜான்சியம்மாள் 


செல்வி முனகிக்கொண்டே மோட்டர் ரூமுக்குள் போனாள்,,


இப்போ போடற வெங்காய வத்தல் ஒரு வருசத்துக்கு வருமுன்னு... சொல்லிகிட்டே மாடியிலிருந்து ஜான்சியம்மா இறங்கி வந்தாங்க..


இந்த வருடம் வெயில் அதிகம்னு தொலைக்காட்சியில் அறிவிப்புச் செய்து கொண்டிருந்தார்கள் ,


எங்கு நோக்கினும் பவர் கட் பற்றியே பேச்சு ....


ஆனால் எங்களுக்கு எந்த கவலையுமில்ல ,
நாங்க ஜான்சியம்மா வீட்டுக்கு வந்ததிலிருந்து , நோ பவர் கட் ...


அந்த பிரச்னையை டிவி செய்தியில மட்டுந்தான் கேட்போம் 


ஜான்சியம்மா வீடு சூப்பரா இருக்கும் .
நிறைய பூச்செடிகள் ,பெரிய மரங்கள்னு வீட்டை சுற்றி
ரொம்ப அழகா இருக்கும் ...


வீட்டை ரொம்ப..சுத்தமா வைத்திருப்பாங்க ஜான்சியம்மா


நாங்க கொஞ்சம் அப்படி இப்படின்னு ,இருந்தா கூட 
செல்விய விட்டுச் சரி செய்யச் சொல்வாங்க..


எங்களை ஏதும் சொல்ல மாட்டாங்க ... 


ஆனால் இதுக்கு முன்னாடி நாங்க இருந்த வீடு
ஒண்டிக் குடித்தனம்...நிறைய பிரச்சனைகள் ..நகரத்தில
இருந்தோம் ,அங்கக் காத்துக் கூடச் சரியா வராது ...


நாங்க இருந்த வீட்டுக்கு மாடில செல் போன் கோபுரம்
போடுவதற்கு வந்தாங்க...எங்களைக் காலி செய்ய 
சொல்லிட்டாங்க ..... கஷ்டத்தில ,ஆளாளுக்கு ஒரு
மூலையில இருந்தோம் ...............


கிராமத்துல இருந்து ஒரு மாமா எங்க வீட்டுக்கு வந்தாங்க, இப்படி நகரத்தில
இருந்து என்னத்தை கண்டீங்க....




என்னோட பேச்சைக் கேளு "தம்பி னு எங்க அப்பா கிட்ட
பேசி ,எங்களை அவர் இருக்கிற கிராமத்துக்குக் கூட்டிட்டு
வந்திட்டாங்க ..


அழகான கிராமம்,அமைதியான ஊர் .. மேலகரம்.....அதிலும் 
நாங்க இருக்கிற ஜான்சியம்மா வீடு நினச்சாலே ரொம்ப 
சந்தோசமா இருக்கு ..




கதவைத் திறக்கிற சத்தம் , ஜான்சியம்மாதான் வர்றாங்க ..






"கண்ணு சீக்கிரமா வா.... சாப்பிடு ..நான் 
திரும்பப் போயிட்டுச் சீக்கிரமா வரேன்....
இல்லேன்னா ஜான்சியம்மா "சாமிக்கு பூ"பறிச்சிட்டு 
போய்டுவாங்க ....அப்புறமா உனக்குப் பிடிச்சத் தேன் கிடைக்காதுடா"
என்றாள் ,என் அம்மா கீச் கீச்...எனும் .........கொஞ்சு மொழியில் ...


அவ எப்பவுமே இப்படித்தான் காலையிலேயே இரைதேடக் கிளம்பி விடுவாள் !!!!!!!




அட என்ன பாக்கறீங்க ...இந்தப் பசுமை மாறா
கிராமத்தில் சிறகடிக்கின்றோம் ..
இன்னும் இருகின்றோம் .கீச் கீச் கீச்...


இங்கு வாழும் மக்கள் இங்கிருக்கும் எங்களை 
போன்றவர்களுக்காக "செல் கோபுரத்தை"
தவிர்த்ததால் இன்னும் இருக்கிறோம் .."நாங்க தேன்சிட்டுக் குருவிகள்தான் " 
வாங்க எங்களையும் கணக்கெடுங்க ....கீச் கீச் ...