Total Pageviews

Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Tuesday, February 6, 2018

பஞ்ச கல்பம்

பளிச்சிடும் கண் பார்வைக்கு பஞ்ச கல்பம் - உங்களுக்காக...!




பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்ணொளி வழங்கும் சித்தர்களின் பஞ்ச கல்பம்:-
இக்காலத்தில் பல இளம் குழந்தைகளும் கண்ணுக்கு கண்ணாடி அணிந்து கொண்டும், பல பெரியவர்கள் வயதானால் கண்ணாடி அணிந்து கொள்வதையும், கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும் கண்டால் சித்தர் கண்ட தத்துவங்கள் எவ்வளவு வீணடிக்கப்படுகின்றன என்று வருந்தியிருக்கிறேன். கண்ணில் அறுவை சிகிச்சை செய்வதால் பிராணன் உலவும் இடமான கண்ணில் உள்ள பிராண சக்தி வீணடிக்கப்பட்டு ஆயுள் குறைகிறது. மாறாக கண்ணுக்கு வலிமை அளிக்கும் சித்த மருந்துகளைக் கையாள்வதால் கண்ணில் உள்ள பிராணன் வலுவாவதுடன் ஆயுளும் நீட்டிக்கப்படும்.

கண் பிராணன் நின்று உலவும் இடம், மேலும் இடது கண்ணில் தச(பத்து) நாடிகளில் ஒன்றான காந்தாரி என்ற நாடியும், வலது கண்ணில் புருடன் என்ற நாடியும் நின்றியங்குகிறது. நம் உடலை தச தேசம் என்று கூறுவார்கள். ஏனெனில் இது தச நாடிகளால் இயங்குவது. உயிர் இறப்பிற்கு பின்னும் இயங்கும் விதத்தைப் பற்றி வராகி மாலை, தச தேச விசால சுவடி இவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,நம் உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளில், இரண்டு கண்களிலும் கண்ணுக்கு இரண்டாயிரம் நாடிகள் வீதம் நான்காயிரம் நாடிகள்

ஓடுகின்றன. கண்களில் போடும் மருந்து கண்ணிலுள்ள நாடிகள் மூலம், தச நாடிகளிலும் வியாபித்து உடலெங்கும் சில வினாடிகளில் பரவி விஷம், வாதம், சன்னி, பல கர்ம வியாதிகள், தோல் வியாதிகள், மனோ வியாதிகள் இன்னும் பல வியாதிகள் முதலானவைகளைக் கூட கண்டித்து எறியும் தன்மை உள்ளது. இப்படிக் கண்களில் பிரயோகிக்கும் மருந்தை கலிக்கம் என்பார்கள்.
இப்படிக் கண்ணில் போடும் மருந்து கண்ணுக்கு பார்வை அளிப்பதுடன் மேலும் பற்பல வியாதிகளை குணமாக்கும் வல்லமையும் பெற்று விளங்குகின்றன. ஏனெனில் அவை அளப்பரிய காந்த சக்தியுடன் செயல்படுகின்றன.
இப்போது தலையில் போடும் மருந்தால் கண்ணுக்கு வல்லமை அளிப்பதைப் பார்ப்போம். பஞ்ச கல்பம் என்றழைக்கப்படும் இது சித்தர்கள் கண்ட மருந்து.  இராமலிங்க வள்ளலாரும் இந்த மருந்தை மிகப் பெருமையாகக் கூறியுள்ளார். இது தலையில் உள்ள சஹஸ்ராரச் சக்கரத்திற்கு வலிமையளிப்பதுடன், நோய்கள் நம்மை அணுகாமல் காக்கும் வல்லமையுள்ளது.
பஞ்ச கல்பம் ஐந்து வகையான மூலப் பொருள்களைக் கலந்து தயாரிப்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது.
கீழ்க்கண்ட சரக்குகளை எடுத்துக் கொள்ளவும்.
1)வெள்ளை மிளகு (சுத்தி செய்தது)---150கிராம்
2)கடுக்காய்த் தோல் (சுத்தி செய்தது)-125கிராம்
3)வேப்பம் பருப்பு உலர்ந்தது---------100கிராம்
4)நெல்லி வற்றல்--------------------75கிராம்
5)கஸ்தூரி மஞ்சள்-------------------50கிராம்
மேற்கண்ட ஐந்து சரக்குகளையும் நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பொடியை சிறிது பால் விட்டு அரைத்து 50 மிலி பசுவின் பாலில் கலந்து காய்ச்ச வேண்டும். பஞ்ச கல்பம் தேய்த்து குளித்து வந்தால் சிறிதும் நோய்களுக்கு இடமில்லாமல் வாழலாம்.

Thursday, April 3, 2014

சுகந்த முத்திரை.


வணக்கம் நண்பர்களே!!!!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு..............மறுபடியும் வலைப்பூவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி......மருத்துவ முத்திரைகள் குறித்த ஒரு தொடரை பதிவிடலாம் என நினைக்கிறேன்.....குருவருள் துணை புரியும் என நம்புகிறேன்...
     
நோய் ஏற்படுவதற்கு உடலிலுள்ள கழிவுகளே முக்கிய காரணம் என்பதை யோக வகுப்புகளில் நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்......அதிலும் சிறுநீர் சரியாக வெளியேறாவிட்டால் உடலின் பித்தம் அதிகமாகி மன அழுத்த நோய்களை உண்டாக்கும் என்பதையும் பார்த்திருக்கிறோம்.....

கோடைகாலம் தொடங்கிவிட்டது, நமது உடலின் வியர்வைச் சுரப்பிகளின் செல்பாடு நன்றாக இருந்தால்தான் பித்த தோஷத்தை சமன் செய்து வெப்பு நோய்களிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்...பஞ்ச பூதத்தில் நீரின் செல்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம்....நீர் கழிவு சரியாக வெளியேறாவிடில், ஜலதோஷம், சைனஸ், சூட்டு ஆஸ்துமா ,.....அம்மை, சூட்டுக் கட்டிகள், வெடிப்புநோய்கள் போன்றவை உண்டாகலாம்....மேலும் நீர் கழிவு சரியாக வெளியேறாவிடில் வியர்வையில் நாற்றம் உண்டாகும்......இந்த வியர்வை நாற்றத்தைப்போக்க முக்கியமான ஒரு மருத்துவ முத்திரைதான்   "சுகந்த முத்திரை".

                                          "வேகாத மண்ணும் சுடும்பாரு
                                            பாரே மயங்கிய மந்திர நீரு
                                            மடங்கித்தழையும் மற்றிரண்டும்
                                            சுகந்தமே சுந்தர தேகமாச்சு"

என யோக முத்திரை குருமார்களால் போற்றப்பட்ட சுகந்த முத்திரையை அப்பியாசம் செய்வதால் கோடைகால வியர்வை துர்நாற்றம் குறைவதோடு உடலின் நீர்பூதக் குறைபாடுகளையும் சமன் செய்யமுடியும்....நாற்றமடிக்கும் உடலை மணக்கச்செய்யும் முத்திரை  என இந்த முத்திரை பற்றிய செய்திகள் சித்தர் பாடல்களில் காணக்கிடைக்கிறது.

சரி .....இந்த சுகந்த முத்திரையை எப்படி செய்வது எனப்பார்ப்போமா?????

கடைசி இரண்டு விரல்களையும் மடக்கி உள்ளங்கையில் ஊன்றவும்.பெருவிரலின் நுனியை, மோதிர விரலின் பக்கவாட்டுப் பகுதியில் வைக்கவும். மற்ற இரண்டு விரல்களையும் இணைத்து பெருவிரலின் மேல் பதியவைத்து நுனிகளை நேராக நீட்டவும்.

எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற சந்தேகம் வருமே... முத்திரை வைத்துக்கொண்டு" பஞ்ச பூத சங்கமம் " சுவாசம்  மூன்று முறை செய்யலாம் ...காலை மாலை இரு வேளையும் செய்யலாம்..

மீண்டும் சந்திப்போமா.


Tuesday, April 23, 2013

“உடம்பு சூட்டுக்கு நல்லது கண்ணு…”,



எவ்வாறு அந்த முக்கண்ணணுக்கு நம் மரபில், தேவாதி தேவன்’, மஹாதேவன் என்ற ஒரு தனி இடம் உண்டோ, அதேபோல் இந்த முக்கண்ணணுக்கும், நம் வாழ்வில் இன்றளவும் ஓரு முக்கிய இடம் இருக்கிறது.

“சமையலுக்குத் தேங்காய், கோவிலுக்குத் தேங்காய், பண்டிகைக்குத் தேங்காய், ஏன் இறுதிக் காரியத்திலும் தேங்காய்…”

இவ்வாறு நம் அன்றாட சந்தோஷத்திலும், துக்கத்திலும் தேங்காய் பிணைந்திருப்பது கண்டிப்பாக காரணமில்லாத தற்செயல் அல்ல.

நம் நாட்டில் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் எந்தவொரு விஷயத்தையும், அரைவேக்காட்டுத் தனத்துடன் நம்மில் பெரும்பாலனோர் அலட்சியப்படுத்துவதும், அந்த விஷயங்களிலுள்ள மேன்மையை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தறியும் மேற்கத்தியர்கள், அதற்குக் காப்புரிமை பெற்றவுடன் குய்யோ முறையோ என்று நம்மவர் புலம்புவது இன்றைய தேதியில் புதிதல்ல.

பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளுக்குச் சொந்தமான தென்னை மரத்தின் தேங்காய் நமக்கு கயிறாகவும், படுக்கையாவும், உடையாகவும் மாறிவிட்டது. அதன் வழுக்கையும், இளநீரும் வெறும் பானமாகவும், உணவாகவும் அல்லாமல் நோய்களை தடுத்து விரட்டும் சஞ்சீவியாகவும் இருக்கின்றன.



நம் நாட்டில் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் எந்தவொரு விஷயத்தையும், அரைவேக்காட்டுத் தனத்துடன் நம்மில் பெரும்பாலனோர் அலட்சியப்படுத்துவதும், அந்த விஷயங்களிலுள்ள மேன்மையை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தறியும் மேற்கத்தியர்கள், அதற்குக் காப்புரிமை பெற்றவுடன் குய்யோ முறையோ என்று நம்மவர் புலம்புவது இன்றைய தேதியில் புதிதல்ல.

அந்த லிஸ்டில் நம் இளநீரும் சேர்ந்துவிடுமோ என்கிற பயம் அதிகரிக்கத்தான் செய்கிறது.

ஏனெனில், நம் இளநீரில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் நவீன அறிவியலின் முத்திரை குத்தப்பட்ட உண்மைகள் சில:
இளநீரால் இரத்தத்தின் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரிக்கச் செய்து, இதயத்தைக் காக்க முடியும்.
மதுவினால் பாதிப்படைந்த கல்லீரலுக்கு இளநீரால் புத்துணர்வு அளிக்க முடியும்.
பழங்களுக்கு ஈடான கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், மேக்னீசியம், துத்தநாகம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் என இவற்றுடன் பொட்டாசியமும் செரிவுடன் இருப்பதால், கோடை காலத்திலும் வயிற்றுப்போக்கின் போதும், நாம் இழக்கும் தாது உப்புக்களை மிக விரைவில் சமன்படுத்தும் மிகச் சிறந்த திரவம் இளநீர்.
கீழை நாடுகளில் வயிற்றுப்போக்கு ஏற்படும்போது ட்ரிப்சுக்கு பதிலாக, இளநீரையே நேரடியாய் நரம்பில் செலுத்தி மருத்துவம் செய்து உயிர் காக்கின்றார்கள்.

சுருங்கச் சொன்னால், கிட்டத்தட்ட மனித இரத்தத்துடைய சாரத்தின் (பிளாஸ்மாவின்) கட்டமைப்புகளுக்கு மிக நெருங்கிய இயற்கைத் திரவம் இளநீர் மட்டுமே!!

ஒரு தலைமுறைக்கு முன்னர், இளநீர் நம் வாழ்வில் எப்போதும் பின்னிப் பிணைந்திருந்த்தது, இப்போதோ உடல் நலமில்லாதபோது மட்டுமே இளநீரைத் தேடுகிறோம்.

சுருங்கச் சொன்னால், கிட்டத்தட்ட மனித இரத்தத்துடைய சாரத்தின் (பிளாஸ்மாவின்) கட்டமைப்புகளுக்கு மிக நெருங்கிய இயற்கைத் திரவம் இளநீர் மட்டுமே!!

இப்போதுள்ள இளைஞர்கள், நவீனம் என்ற பெயரில், இன்றைய விளம்பர யுகம், வெறும் சர்க்கரைத் தண்ணீரோடு வாயுவைச் சேர்த்து, புட்டியில் அடைத்து, ஒரு சினிமா ஸ்டாரையோ, நாம் நேசிக்கும் விளையாட்டு வீரரையோ முன்னிருத்தி நம் ஆழ்மனதில் நாம் அறியாமலே, “அக்கா மாலாக்களையும்,” “கப்சிக்களையும்” புகுத்தி விடுவது என்னவோ நம் கஷ்டகாலம்தான்.



“சம்மருக்கு என் சாய்ஸ், …ப்ஸி, …கோலா தான்!” என்று பீற்றிக் கொள்ளும் நவநாகரிக யுவ, யுவதிகள் பலருக்கு அவர்கள் விரும்பி அருந்தும் பானங்கள், மிக அதிக அமிலத்தன்மை (pH < 2.0 – Acidity) கொண்டவை என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஏனெனில், அதில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் (Artificial Sweeteners) Acidity ஐ மறைக்கின்றன.

“சரி சார்… Acidity அதிகமானா அப்படி என்ன பெருசாக் கெட்டுப்போகப் போகுது?,” என்கிற வீராப்பு வீராசாமிகள் குறைந்தபட்சம் தெரிந்துக் கொள்ள வேண்டிய அறிவியல் உண்மைகள்:

உடலில் (pH < 2.0 – Acidity) க்கும் குறைவான அமிலத்தன்மையை சமாளிக்கும் திறன் உடலில் வயிற்றைத் தவிற வேறெந்த பகுதிக்கும் கிடையாது.

கழிவறையைக் கூட ‘பளிச்’னு சுத்தம் செய்யும் திறன் நம்ம கோலாக்களுக்கு உண்டு என்பதை நீங்களே பரிசோதிக்கலாம்.
இத்தனை ‘ஸ்ட்ராங்கான’ அமிலம், நம் பற்களையும், எலும்புகளையும் அரித்து (எலும்புத் தேய்மானம்) பதம் பார்ப்தில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

“இந்த நோய் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” என்கிற ரேஞ்சுக்கு, சீறுநீரகக் கல், கணைய பாதிப்பு, டயாபெடிஸ், உடற்பருமன், கல்லீரல் நோய், தூக்கமின்மை, மன அழுத்தம், பதட்டம் என இந்தப் பட்டியல் நீள்கிறது.

“உடம்பு சூட்டுக்கு நல்லது கண்ணு…”, “அடிக்கிற வெயிலுக்கு ஒரு இளநீய சீவித் தாரேன் குடிதாயி!” எனப் பாசம் பொங்க, நம் பாட்டன்கள் கூறுவதை, ஒரு சச்சினோ, ஷாரூக், தோனியோ டிவியில் தோன்றி சொன்னால்தான் குடிப்பேன் என்று இப்போது நீங்கள் அடம்பிடித்தால், ஒரு நாள் வரும், அப்போது நீங்கள் நினைத்தாலும், உங்கள் தோப்பு இளநீரை, ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பதப்படுத்தப்பட்ட புட்டியில்தான் குடிக்க நேரிடும்.

ஸோ, இந்த சம்மருக்கு உங்கள் சாய்ஸ்???!

நம் தோட்டங்களில் குலை குலையாய் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் இயற்கை அமுதமா? அல்லது காசு கொடுத்தால் கேடு கொடுக்கும் ஸ்லோ பாய்ஸன்களா? நீங்களே முடிவு செய்யுங்கள்!

Sunday, October 14, 2012

"எபிலெப்சி" எனும் கால் கை வலிப்பு நோய்

மாஸ்டர், காக்கை வலிப்புநோய் நரம்புநோய்தானே???இதற்கும் இரும்புக்குக்கும் என்ன சம்பத்தம்???????.......ராகவன்...



நண்பர் ராகவன் சொல்வது போல "எபிலப்சி" எனும் காக்கை வலிப்பு நோய்...நரம்புநோய்தான்...மறுக்கவில்லை, ஆனால்..... இந்த நோய்க்கு "கால்- கை வலிப்பு நோய்" என்பதுதான் சரியே தவிர காக்கைக்கும் இந்த நோய்க்கும் சம்பத்தமில்லை.






நமது பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவம்,மூர்ச்சை (மூர்ச்சா), கால்கைவலி எனும் காக்கை வலிப்பு (அபஸ்மார), பைத்தியம் (உன்மாத), மூளைக்கோளாறுகள் (அ) மனக்கோளாறுகள் (மானஸதோஷ), திக்குவாய் போன்ற உச்சரிப்புக் கோளாறுகள், ஞாபகமறதி (ஸ்மிருதிக்ஷய),போன்ற நோய்களுக்கு மூளையே காரணம் எனக்கூறுகிறது.


ஆனால்.....ஐம்பூதங்களாலான இந்த மனித சரீரத்தில்,"மஜ்ஜைகளின் குவியல் " என அழைக்கப்படும் மூளையும்,நரம்புகளும்,நீர் பூதத்தை வைத்து வேலை செய்யக்கூடிய "சிறுநீரகத்தின்"கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக, சீன மருத்துவமான அக்குபஞ்சரும்,நமது சித்தர்களின் மருத்துவமான வர்மமருத்துவமும் சான்று கூறுகிறது.



எபிலெப்சியும், ஸ்ட்ரேமெரிங் எனச் சொல்லக்கூடிய திக்குவாயும் கிட்னியின் சக்திக்குறைவு என்பதை, TCM(Traditional chinish medichine) எனச்சொல்லக்கூடிய சீன மருத்துவ சாஸ்திரம் தெளிவுபடக்கூறுகிறது. மனித உடலில் அதிகமான கோப உணர்வினால் கல்லீரல் பாதிப்பதாகவும், அதிகப்படியானத் துக்க உணர்வினால் நுரையீரல் பாதிப்பதாகவும் கூறுகிற இதே சீன மருத்துவம், பய உணர்வினால் கிட்னி பாதிப்பதாகவும் கூறுகிறது....ஒரு எல் -கே -ஜி படிக்கின்ற குழந்தை,.... வகுப்பாசிரியை பிரம்பை எடுத்தவுடன் பய உணர்வினால் சிறுநீர் கழித்துவிடுகிறதா, இல்லையா???????பயம் வரும்பொழுது வாந்தி வரலாமே , ஏன் சிறுநீர் வருகிறது???இப்பொழுது சொல்லுங்கள் பய உணர்வினால் கிட்னியில் ஏதோ ஒரு பாதிப்பு ஏற்படுகிறது என்பது உண்மைதானே!!!!!!.


நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் பயத்தினால் திக்குவதை நாம் பார்த்திருக்கிறோமே!!! அதேபோல் பயத்தினால் நரம்புகள் வலுவிழந்து உடல் நடுங்குவதைப் பார்த்திருகிறோமே!!!!......அதிகப்படியான பய உணர்வினால் கிட்னி பாதிக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் நரம்புகளும் பாதிக்கப்பட்டு அதன் தொடர்விளைவாக எபிலெப்சி எனும் காக்கை வலிப்பு நோய் உண்டாகிறது.




நமது பாரம்பரிய மருத்துவமான சித்தமருத்துவம் யாருக்கு இரும்புச்சத்துக் குறைவோ, அவர்களுக்கு மனபயமும்,நரம்புத்தளர்ச்சியும் இருக்குமெனக் கூறுவதோடு ..இவர்களுக்கு அயச் செந்தூரம் கலந்த மருந்துகளை தரச் சொல்கிறது. ஹிஸ்டீரியா எனக் கூறப்படுகிற மன நோய்களுக்குக்கூட உடலின் இரும்புச் சத்துக் குறைவு ஒரு காரணம் என்பதை நவீன மருத்துவமும் ஏற்றுக்கொள்கிறது.




நமது கிராமங்களில் பெரியவர்கள், "பயமெனும்" பேய் பிடிக்காமல் இருக்க இரும்பை கையில் வைத்துக்கொள் எனச் சொன்னது பொய் இல்லை நண்பர்களே! நமது கிராமங்களில் பிள்ளைதாச்சி எனச் சொல்லக்கூடிய கர்ப்பஸ்ரிகளின் கால்களிலுள்ள குட்டிவிரல்களில் இரும்பு மெட்டி அணிவித்ததும், பூப்பெய்திய பெண்களுக்கு அருகில் இரும்பு பூண் பொருத்திய உலக்கைகளை வைத்ததும் மூடப்பழக்கமில்லை நண்பர்களே! இரும்பு அருகிருந்தால் பய உணர்வு குறையும் என்னும் அற்புத விஞ்ஞானம்....




நமது முன்னோர்கள் ஆன்மீக மெய்ஞானிகள், அவர்கள் சொன்னது என்றும் பொய்க்காது.....காக்கை வலிப்பு நோய் கண்டவருக்கு கையில் இரும்பை கொடுப்பதால் ..பய உணர்வு குறைகிறது...சிறுநீரகம் சக்தி பெறுகிறது...அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் நரம்புகளும், மூளையும் வலிமையடைந்து...நரம்பு நோயான காக்கை வலிப்பு தற்காலிகமாகக்குறைகிறது!!!!!!.




என்ன நண்பர்களே, முன்னோர்களின் வைத்தியம் முத்தான வைத்தியம் தானே!!!




சரி,யோக மருத்துவத்தில் இதற்கு என்ன தீர்வு?




நோயாளிக்கு ரத்த அழுத்தம் இல்லாத பட்சத்தில், சர்வங்காசனமும், மச்சாசனமும் நல்ல பலன் அளிக்கும்...புஜங்காசனம்,சலபாசனம், செய்யலாம்...."பஞ்சபூத சங்கமம்" நல்லபலனைக் கொடுக்கும். "நடனசந்தனா" , சாந்தி ஆசனம் மூளைக்கு ஓய்வும் , சக்தியும் அளித்து இந்நோயிலிருந்து மீண்டெழ உதவிசெய்யும்..கிரியாக்களில் "வமன தெளதி" பித்ததைக் குறைத்து நோயைக் கட்டுக்குள் கொண்டுவரும்.


பித்தமிலாது சித்தம் கெடாது என்பது பழமொழி.....பித்த பிரகிருதியில் உள்ளவர்களுக்கே இந்த நோய் அதிகமாகக் காணக் கிடக்கிறது. "கல்யாணக்கிருதம்' எனும் அருமருந்து இந்த நோய்க்குத் தீர்வாக அமையும். விபத்து போன்ற காரணங்களால் தலையில் அடிபட்டு அதன் விளைவாகத் தலைக்குள் ரத்தம் கட்டி அதன் மூலமாக இந்த நோய் உண்டாகும் பட்சத்தில் பஞ்சகர்மா சிகிச்சையில் ஒன்றான"சிரோதாரா" நல்ல பலன் கொடுக்கும்.


திரிதோஷ அறிவையும், உளவியலையும் இணைத்து செய்யப்படும் ஒரு சிகிட்சை முறையே இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டுவரும். 


Thursday, July 12, 2012

ஹீமோகுளோபின் அதிகரிக்க.....







ஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி--உணவே மருந்து,




உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.

இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
ஒன்பது நாட்கள் காலை 6 மணி மதியம் 12 மணி மாலை 6 மணி மொத்தம் பழங்கள் 1வது நாள் 1 1 1 3 பழங்கள்.2வது நாள் 2 2 2 6 பழங்கள்.3வது நாள் 3 3 3 9பழங்கள். 4வது நாள் 4 4 4 12 பழங்கள்.5வது நாள் 4 4 4 12 பழங்கள்.6வது நாள் 4 4 4 12 பழங்கள்.7வது நாள் 3 3 3 9 பழங்கள்.8வது நாள் 2 2 2 6 9வது நாள் 1 1 1 3பழங்கள்ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப் பாருங்கள்.

தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளாபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளாபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து அருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும். செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் இழந்த சக்தியையும், உற்சாகத்தையும் நாம் பெறலாம்.





Wednesday, March 21, 2012

அறையை அடைத்துக்கொண்டு தூங்குபவரா? ...இதைப்படிங்க!!!!








நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE),சிறு நீரகக் கல்,  மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிகால் வலி,போன்ற வாத நோய்கள் உண்டாக வாய்ப்பு அதிகம்.


யோக வாழ்வியலின்படி ,  சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று யோகிகள் கூறுகிறார்கள்.  முன்பெல்லாம் இது என்ன கூத்து, காற்றுக்கும் தீட்டா என்று நான் எண்ணியதுண்டு.இதைப்பற்றிய விளக்கங்களைப் பல குருமார்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றிருக்கிறேன்.அப்போதெல்லாம் விளங்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.

அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு  10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு நீங்கள் ஒருவர் மட்டுமே தூங்கினால் 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே யோகிகள் தீட்டு என்கிறார்கள்.

பொதுவாகக் காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தால், அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியான விகிதத்தில் வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது மட்டுமல்லாது நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையைச் செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது, மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.

விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.

மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் இனியும் தூங்காதீர்கள். 

Saturday, November 12, 2011

இருமினாலும், தும்மினாலும், சிறுநீரா......இதைப்படிங்க!


ன்றைய கம்ப்யூட்டர் யுக மனிதர்களை, பாடுபடுத்தும்,பயப் படுத்தும் முக்கியமான ஒரு உடல் பிரச்சினை அடக்க இயலாத சிறுநீர் தொல்லை, அதிலும் நடுத்தர வயதிலுள்ள லட்சக் கணக்கான பெண்கள் பல சமயங்களில் சிறுநீர் வருவதை அடக்க முடியாமையால் அவதிப்படுகிறார்கள். நடுத்தர வயாதானவர்களில், எட்டில் ஒருவர் இந்த சிறுநீர் தொல்லையால் பாதிக்கப்படுகிறார்கள், என புள்ளி விவரங்கள் கூறுகிறது. சில பெண்களுக்கு, தும்மினாலும், சிரித்தாலும் சிறுநீர் கசியும். சிலருக்கு அடக்க முடியாமல் பெருமளவில் சிறுநீர் போகும். குளிர்காலத்தில் இந்த உபாதை அதிகமாகும். சமூகத்தில், பொது இடங்களில், சிறுநீர் வருவதை அடக்க முடியாமல் போனால்,?............ இந்த இக்கட்டான,சங்கடமான சூழ்நிலையால் பல பெண்கள் தவிக்கிறார்கள். , இது வயதாகினால் வரும் சாதாரண கோளாறு என்று எண்ணுவதாலும்,கூச்சத்தினாலும் இதனைப் பெரும்பாலான பெண்கள் வெளியில் யாரிடமும் சொல்வதில்லை, இந்த வியாதியால்,ஆண்களை விடப் பெண்கள் இரு மடங்கு அதிகமாக பாதிப்படைகின்றனர். 



சிறுநீர் கட்டுப்பாடின்மையை கவனிக்காமல் விட்டால் பல சிக்கல்கள் ஏற்படும். சிறுநீரகம், சிறுநீர்ப்பைத் தொற்றுகள் ஏற்படலாம். சிறுநீர்ப்பையில் கட்டிகள் உண்டாகலாம். சிறுநீரில் உள்ள, யூரியாவினாலும், அமிலத்தினாலும் சிறுநீர்ப்பாதையில் எரிச்சல் உண்டாகலாம். இதனால் மனரீதியான பாதிப்புகள் கூடஉண்டாகின்றன. இவர்களால் நிம்மதியாக சமூக செயல்பாடுகளில் ஈடுபடமுடியாது. மனச்சோர்வு ஏற்படும். ......... 





கவலையை விடுங்கள்! 

இந்த உபாதையை கட்டுப் படுத்தலாம், குணப்படுத்துவது கூட முடியும். 



சிறுநீரகம் உற்பத்தி செய்யும் சிறுநீர், இரண்டு குழாய்கள் மூலம் சிறுநீர் பையை வந்தடையும். சிறுநீர்ப்பை சிறுநீரை சேமித்து வைக்கிறது. சிறுநீர் பையின் “கழுத்து”, ஒரு சுருக்குப்பை போன்ற தசையால் ஆனது. இது மூடவும், திறக்கவும், கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறுநீர்ப்பை நிரம்பியதும், நரம்புகள் மூலம் தண்டுவடத்திற்கு செய்தி செல்லும். மூளை உடனே சிறுநீர் கழிக்க வேண்டிய உந்துதலை உண்டாக்கும். சூழ்நிலையை பொறுத்து சிறுநீர் உடனே கழிப்பது (அல்லது) சிறிது நேரம் அடக்கிக்கொள்வது நடக்கும். இந்த அடக்கிக் கொள்ளும்,பிடித்து வைக்கும் விஷேச தன்மைக்குக் காரணமாக இருப்பது மண்ணீரல். சிறுநீர் உடனே கழித்தால் “பையின்” கழுத்து தசை விரிந்து சிறுநீரை சிறுநீர் தாரை வழியே வெளியேற்றும், சிறுநீர் பையின் தசைகளும் சுருங்கி, விரிந்து இதற்கு உதவும். இந்த செயல்பாடுக்காகவே சிறுநீர்ப்பை “பலூன்” போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பலூன் போன்ற சுருங்கி விரியும் தன்மைக்கு காரணமாக இருப்பது மண்ணீரல். 


வயது கூடக்கூட, உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. சிறுநீரகத்தின் சக்திக் குறைவினால் அதனுடைய துணை உறுப்பான சிறுநீர்பையின் தசைகள் பலவீனமடைந்து, அதில் சேமிக்கப்படும் சிறுநீரின் அளவு குறையும். சிறுநீரை அடக்கிக் கொள்ளும் திறமை குறையும். சிறுநீர்ப்பையிலுள்ள சிறுநீர் முழுவதும் வெளியேறாமல், சிறிதளவு சிறுநீர், நிரந்தரமாக பையில் தங்கிவிடும். இதன் காரணமாக நாளடைவில் பெண்களின் நீர்த்தாரை எனப்படும் “லைனிங்” நலிவடையும். சிறுநீர்ப் பையில் எப்போதுமே “தசை அசைவுகள்" (மூளையிலிருந்து கட்டளை வந்தாலும், வராவிட்டாலும்) நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இளவயதில் இந்தத் தசை அசைவுகளை, தேவை இல்லாத போது, மண்ணீரல் தடுத்து வைக்கும். வயதானால் இந்த தடுக்கும் சக்தி குறைந்து போகும். எப்போதும் சிறுநீர் கழிக்கும் உணர்வு உண்டாகும். சிறுநீர்ப்பையின் கழுத்து தசைகள் சரிவர மூடிக்கொள்ளாமல், பிடித்து வைத்துக் கொள்ளும் பலத்தை இழக்கும். 



இந்த நோயை அறிகுறிகளை பொருத்து, ஐந்து வகைகளாக பிரிக்கலாம். 

1. அடக்கமுடியாத நீர்க்கசிவு –

 திடீரென்று, தீவிரமான, அடக்க முடியாத சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றி, சிறுநீர் வெளியேறுதல். பாத்ரூமை நோக்கி ஒடுவதற்குள் நீர் கசிந்து விடும். அல்சீமர் (மறதி வியாதி) நோய், பார்கின்ஸன் நோய், பக்க வாதம் போன்ற நரம்பு நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். அளவுக்கு அதிகமான தாம்பத்ய உறவு, அளவுக்கதிகமான சுய இன்ப பழக்கம், போன்ற, சிறுநீரகச் சக்தியைக் குறைக்கும் வாழ்க்கை முறைகளே இதற்குக் காரணங்களாகும். 

இந்த வகை நோயாளிகளுக்குத் தண்ணீரைத் தொட்டால், தண்ணீரால் கை கால்கள் கழுவினால், ஏன், தண்ணீர் ஓடும் சப்தத்தை கேட்டாலே உடனே சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்! மேலும் தாம்பத்ய உறவு முடிந்த அடுத்த வினாடியே சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். சிறுநீரகமே நரம்பின் வலுவுக்குப் பொறுப்பாக இருப்பதால், சிறுநீரக சக்திக் குறைவு நரம்பு பாதிப்புகளை உண்டாக்கி இந்த நிலைக்கு காரணமாகிறது. 

இந்த வகை நோயாளிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் உடனடியாக வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் பின்னாட்களில் மிகுந்த உடல் மற்றும் மன நோய்களுக்கு ஆட்பட வேண்டியதிருக்கும். தேவையானால் இந்த வகை நோயாளிகளுக்கு யோக சிகிச்சையுடன் கூடிய "வாஜிகரணம்" என்று சொல்லக்கூடிய ஆயுர்வேத சிகிச்சையும் தேவைப்படலாம். 


இந்த வகை நோயாளிகள் சிறுநீரகச் சக்தியை அதிகப்படுத்தும் சலபாசனத்தோடு,சுப்தவஜ்ராசனம், உத்தான பாதாசனம்,ஜானுசிரசாசனம், வீரிய ஸ்தம்பன் ஆசனம்,போன்ற ஆசனப்பயிற்சிகளைச் செய்யலாம், அஸ்வினி முத்திரையோடு கூடிய சக்தி முத்திரை பிராணாயாமமும், வஜ்ரோலி முத்திரைப் பயிற்சியும் இந்த நிலை நோயாளிகளுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். 



2. அழுத்த நீர்க்கசிவு 

இருமினால், தும்மினால், சிரித்தால், ஓடினால், வேறு சில அசைவுகளால் சிறிதளவு சிறுநீர் தானாக சிந்துவது அழுத்த நீர்கசிவாகும். பெண்கள் தாய்மையுறும் காலங்களில் இந்த நிலை ஏற்பட்டால் பயப்படத்தேவையில்லை.கர்ப்பப்பையின் அளவு பெரிதாவதால் அது சிறுநீர்ப்பையை அழுத்தும்.ஆனால் பிரசவத்திற்குப் பின்னும் இந்த நிலை ஏற்பட்டால் கவனிப்பது அவசியமாகும்.

கர்ப்பப்பை என்பது பஞ்ச பூதத்தில் மண்ணின் அம்சம், மண்ணில் விழும் விதை வளர்ந்து விருட்சமாவதைப்போலக் கர்ப்பப்பையில் விழும் பீஜமே ஒரு புது ஜீவனாக உருவெடுக்கிறது. சிவராஜயோக உடற்கூற்றுத் தத்துவத்தின்படியும் அக்குபஞ்சர் எனக்கூறப்படும் குத்தூசி வைத்தியத் தத்துவப்படியும் மண்ணீரலின் கட்டுப்பாட்டிலேயே கர்பப்பை உள்ளது. பிரசவதிற்குப்பின் கர்ப்பப்பையும் , அடிவயிறும் சுருங்கித் தனது இயல்பு நிலைக்குத் திரும்ப மண்ணீரலே பொறுப்பு. மண்ணீரலின் சக்தி குறைந்த நிலையில் இருப்பவர்களுக்கு கர்ப்பப்பையும், அடிவயிறும் இயல்பு நிலைக்குத் திரும்புவதில்லை, இதன் காரணமாக சிறுநீர்ப் பையைச் சுற்றியுள்ள தசைகள் எப்போதும் ஒருவித அழுத்தத்துடனேயே இருக்கும். இந்த நிலை தொடரும்போது மூடி, திறக்கும் சிறுநீர்பையின் “கழுத்து” சிதைந்து சரிவர திறந்து மூட முடியாமல் போகும். எஸ்ட்ரோஜன் பெண் ஹார்மோன், மெனோபாஸ் ஏற்பட்ட பெண்களில் குறைந்து விடும். இதனாலும் யூரின் கட்டுப்படாமல் போகும். 

குண்டானவர்களின் அடிவயிற்றுத் தசைகள் சிறுநீர்ப்பையை அழுத்திக் கொண்டேயிருக்கும். இதனாலும் சிறுநீர்க்கசிவு உண்டாகும். அடிக்கடி அபார்ஷன் செய்து கொள்பவர்கள், இடுப்புப் பகுதியில் அடி அல்லது காயம் அடைந்தவர்கள், சிசேரியன், அல்லது கர்ப்பப்பையை அகற்றி அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் கட்டுப்பாடற்ற நீர்க்கசிவு ஏற்படும். 





இந்த வகை பெண்களுக்குத் தனுராசனம், உத்தித பாதாசனம், அர்த்த கர்ப்பாசனம், யோக முத்ரா,போன்ற ஆசனப் பயிற்சிகளோடு, நகுலாசனத்தோடு கூடிய சஹஜரோலி முத்திரைப்பயிற்சி(ககல் பயிற்சி) நல்ல பலனைத்தரும்.உட்டியானா பந்தம், உதாணனை செயல்படுத்தி கர்ப்பப்பையை சீரமைக்கும்.(உடலிலுள்ள, ஆயசங்கள் என்னும் பைகளின் கட்டுப்பாடு உதானனிடமே உள்ளது) சிலருக்கு குறிஞ்சிக்குழம்பு போன்ற ஆயுர்வேத மருந்துகளும் தேவைப்படலாம். 



3. நிரம்பி வழியும் நீர்க்கசிவு 

சிறுநீர்ப்பை முழுவதும் நீர் சேர்ந்தாலும் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றாது. இதனால் சிறுநீர் கழிக்கும் உணர்வு இல்லாமலே சிலருக்கு சிறுநீர் கழிந்து விடுவதுண்டு.– இந்த வகை சிறுநீர் கட்டுபாடின்மை பெண்களைப் பாதிப்பது குறைவு. 

 தண்டுவட நரம்பு பாதிப்புகள், டயாபடீஸ், ஆண்களின் ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினாலும் இது ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு ஆண்கள் உடலில் முக்கியமானது புராஸ்டேட்சுரப்பி. ஆனால் ஆண்களுக்கு இந்த சுரப்பியைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பது வருந்தத்தக்க செய்தி. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் 40 வயதிற்கு மேற்பட்டோரில் 60 சதவீதத்தினர் புராஸ்டேட் பிரச்சினையால் அவதியுறுகின்றனர் என்கிறது புள்ளிவிவரம். 





எனது யோக மருத்துவ ஆராய்ச்சியில் ஓர் ஆச்சர்யமான விஷயம் செருப்புத்தைக்கும் தொழில் செய்துவரும் சகோதரர்களுக்கு புராஸ்டேட் பிரச்சினை வருவதில்லை. காரணம் அவர்கள் உட்கார்ந்திருக்கும் ஒரு விசேஷ நிலை. புராஸ்டேட் சுரப்பியால் வரக்கூடிய சிறுநீர் கசிவைத்தடுக்க, பத்த கோனாசனம், கோரக்கர் ஆசனம், அபானாசனம் போன்ற ஆசனப் பயிற்சிகளோடு, வியாக்ர பிராணயாமமும் நல்ல பலன் தரும். 

4. செயல்பாடுகளால் வரும் நீர்க்கசிவு 

கேரளாவில் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் உள்ள மாணவர்களுக்குப் "புரோட்டின் யூரியா" எனும் நோய் தாக்கியது, காரணம் ஆராய்ந்ததில் ஒரு உண்மை தெரிய வந்தது. பள்ளியில் சுகாதாரமற்றச் சூல்நிலையிலுள்ளக் கழிவறைகளில் சிறுநீர் கழிப்பதை விரும்பாத மாணவர்கள் சிறுநீரை அடக்க ஆரம்பித்ததின் விளைவே புரோட்டின் யூரியா – இதுபோல சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தாலும் நீண்டநேரமாக அடக்கி வைப்பவர்களுக்கு, நாளடைவில் சிறுநீர் கசிவு நோய் ஏற்படலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு சில உடலியல் பாதிப்புகளால் உடனடியாக பாத்ரூம் ஒடுவது சாத்தியமில்லாமல் போகலாம். அதுபோல ஆர்த்தரைடீஸ், அல்சீமர் வியாதி உள்ளவர்களுக்கும் இந்த நிலை சிறுநீர் கசிவுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. “வேகங்களை அடக்கினால் சோகம்தான்” என்பது மருத்துவப் பழமொழி. அதன்படி அளவுக்கதிகமாக சிறுநீரை அடக்காமல் இருப்பதே நல்லது. 



5. தற்கலிகமான நீர்க்கசிவு 

– ஜலதோஷம், இருமல், சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்று நோய்கள், சிலவகையான மருந்துகள் ஏற்படுத்தும் ஒவ்வாமை, போதிய உடல் அசைவு இல்லாமல் இருக்கும் நிலையில்,சில வகையான பித்த நோய்கள் இவற்றாலும் சிறுநீர் கட்டுபாடின்றி போகும். டிப்ரெஷனுக்கு கொடுக்கப்படும் மருந்துகள், மனோ வியாதிக்கான மருந்துகள், மனதை சாந்தப்படுத்தும் மருந்துகள் அலர்ஜி மருந்துகள் முதலியன இந்த நோய்க்கு காரணமாக இருக்கலாம். இதனைக் கண்டறிந்து நீக்கிவிட்டால் நீர்க்கசிவு நின்று விடும். 

நோய்நாடி நோய் முதல்நாடி- அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.-  குறள்

Sunday, July 24, 2011

தொட்டுக்காட்டாத வித்தை......


பொதுவாக சித்தர்கள் யோகத்தையும், மருத்துவத்தையும் மறை பொருளாக, குளுக்குறியாகவே சொல்லிவைத்துள்ளனர்.   அதன் நோக்கம்,   தகுதி உள்ளவர்கள் மட்டுமே இதனை உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். இந்த அரிய பொக்கிஷங்கள் தீயவர்களிடம் கிடைத்து, அழிந்து விடக்கூடாது என்பதில் யோக குருமார்கள் மிக்க கவனத்துடன் இருந்திருக்கின்றனர்.  அத்தகைய பரிபாஷையுடன் கூடிய கருத்துக்களைக் குருமார்களின் வழிகாட்டுதலுடனேயே புரிந்து கொள்ளமுடியும்.    இதைத்தான் "தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது" என்கிறார்கள்.

உதாரணமாக ஒளவையாரின் ஒரு பாடலைப்பார்க்கலாம்.

நல்ல வாக்கு சித்தியைப் பெறவும்,   அசையாத மனத்தைப் பெறவும்,  தாமரை லெட்சுமியின் கடைக்கண் கடாட்சம் பெறவும்,     ஓர் அருமருந்தினை ஔவையார் அறிமுகப் படுத்துகிறார்.   எல்லோருக்கும் தெரிந்த பழக்கமான பாடல்தான்! 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்தப்பாமல் சார் வார் தமக்கு. 

என்ன நண்பர்களே!  இதில் எங்கே மருந்து இருக்கிறது என்று தானே  குழம்புகிறீர்கள்?
 

மேலோட்டமாகப் பார்த்தால் மூல முதல்வனை, விநாயகனைப் பூக்கொண்டு அர்ச்சித்தால் நல்ல வாக்கு சித்தியும், மாமலராள் லெட்சுமியின் அருளும் கிடைக்கும் எனக் கூறுவது போலத் தோன்றும்.

ஆனால் இந்த பாடலின் சூட்சுமம் அதுவல்ல. துப்பார் என்றால் தேன். (தேனீயால் துப்பப்பட்ட மது).    திரு என்றால் திருவிசை என சித்தர்களால் மறை பொருளாகக் கூறப்பட்ட துளசி,  மேனி என்றால் குப்பை மேனி(இதற்கு பூனை வணங்கி என மற்றொரு பெயரும் உண்டு).  தும்பி என்றால் தும்பை.  கையான் என்றால் கரிசிலாங்கண்ணி,   பாதம் என்றால் சுவாசம்.

துளசி, குப்பைமேனி, தும்பைச் செடி, கரிசிலாங்கண்ணி போன்றவற்றை சமூலமாக(சமூலம் என்றால் ஒரு செடியின் இலை, தண்டு,  பூ, காய்,  வேர் என அனைத்தும் சேர்ந்தது எனப் பொருள்) எடுத்து, இவற்றிலிருந்து முறைப்படி செய்யப்பட்ட ஒளஷதத்தை உண்டு,  தப்பாமல் பிராணயாமப்பயிற்சி செய்பவர்களுக்கு சரஸ்வதியின் அருளான வாக்கும்,  லெட்சுமியின் அருளான பொருளும் கிடைக்கும் என்பதே இதன் பொருளாகும்.   

சித்தர்கள் தமது பாடல்களைப் பரிபாஷையாகவேக் கூறியிருக்கிறார்கள்.  இந்த பரிபாஷைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள அந்தக் குறிப்பிட்ட சித்தரின் நிகண்டுகளைப் படித்து மனப்பாடம் செய்துகொள்ள வேண்டியதிருக்கும்.  மேலும் மூலிகைகளின் குணத்தை நன்குத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். (நிகண்டு என்பது ஒரே பொருளைக் குறிக்கும் பல பெயர்களைக் கொண்ட சித்த பரிபாஷைத்தொகுப்பு)

எடுத்துக்காட்டாக போகர் பாடல்களைப் படிக்க போகர் நிகண்டு படித்து தேர்ந்திருக்க வேண்டும்.  போகரின் ஒரு பாடலைப் பார்ப்போமா?
 


யானைக்கண் ஒருபிடியும் அரசன் விரோதி இளம்பிஞ்சும்-கானக் குதிரை மேற்தோலும் காலில் பிடியாய் மாட்டியதும் தாயைக்கொன்றான் பூச்சாற்றில் தட்டியே அரைத்து உண்பீரேல் தமிழும் வடுகும் குணமாகும். 

என்ன விடுகதை மாதிரி இருக்கா?
 யானையைப் போல பலம் கொடுப்பதாலும், இதனுடைய பழம் யானைக்கண்ணைப் போல இருப்பதாலும்,  சித்தர்களுடைய பரிபாஷையில் அத்திப்பழத்திற்கு யானைக்கண் என்று பெயர். 

பழங்களின் அரசன் எலுமிச்சை, எலுமிச்சைப் பழத்தின் எதிரி புளி,
 

நன்கு பழுத்த மாம்பழங்களை அசைக்கும்போது கொட்டைகளில் உள்ளிருக்கும் பருப்பு தனியாக ஆடும்தானே!........ காட்டிலுள்ள மாமரத்தில், மொத்த மாம்பழங்களும் காற்றில் ஆடும்போது குதிரைகள் ஓடுவதுபோல சப்தம் வருமாம். எனவே மாம்பழத்திற்கு கானக்குதிரை என்றுபெயர்.கானக் குதிரை என்றால் அமுக்கிரா கிழங்கு எனக்கூறுவோரும் உண்டு. ஆனால் அமுக்கிராக் கிழங்கை அஸ்வம், குதிரை என்றுதான் சித்தர்கள் கூறியுள்ளனர்.எனவே கானக் குதிரை என்பது மாம்பழமே. 

விளாம்பிசின் காலில் ஒட்டியதென்றால் அவ்வளவு எளிதாகப் போகாது. கொஞ்சம் தோலையும் பிய்த்துக்கொண்டுதான் போகும். எனவே இதனைக் காலில் பிடியாய் மாட்டியது என்கின்றனர்.   கடைசியாகத் தாயைக்கொன்றான் பூ என்றால் என்னவென்று பார்ப்போமா????...... 

அட..... அது நம்ம வாழை மரந்தாங்க!   பக்கக்கண் வந்தவுடன் தாய்மரம் இறந்து விடுகிறதல்லவா? அதனால் வாழைப்பூவிற்கே தாயைக்கொன்றான் பூ எனப்பெயர். 
         

 "அத்திப்பழம் ஒருபிடியும், புளியம்பிஞ்சும், மாம்பழத்தோலும்,   மற்றும் விளாம்பிசினையும் வாழைப்பூச்சாரில் அரைத்து உண்டால் தமிழ் நாட்டிலும், வடுகு எனக் கூறப்படும் ஆந்திராவிலும் காணக்கூடிய வெட்டை நோயைத் தீர்க்கலாம்"



போதுமடா சாமின்னு தலை சுத்துதா?.............. “அவனருளாலே அவன்தாழ் பணிந்து” என்பார்களே அதுபோல சித்த ரகசியத்தைப் புரிந்துகொள்ள சித்த குருமார்களின் துணைவேண்டும். 
 

“தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது"







வித்தில்லாத சம்பிரதாயம் மேலும் இலை கீழுமில்லை
தச்சில்லாது மாளிகை சமைந்தவாறும் அதெங்கெனே
பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே!


Saturday, July 2, 2011

நகை மருத்துவம்


        நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்

நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை நண்பர்களே!... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் நமது யோகியர்.

‘‘குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது...!’’ என்கிறார்கள் யோகியர்.

‘‘நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம்.

நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும். இதுதான் அக்குபஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத்துவம்!

பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தியாவில்தான். போகர் என்ற சித்தர்தான் இதை சீனா வரை கொண்டு சேர்த்தவர். அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கும் இதை பரவச் செய்து வருகிறார்கள்.

இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள்.

இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்!

லேட்டஸ்டாக வெள்ளி, ஒயிட் மெட்டல், கோல்டு பிளேட்டட் நகைகள் என்று ஃபேஷனாகவும் மார்க்கெட்டுக்கு நிறைய வந்து விட்டன.இவை ஃபேஷனுக்கும் ஃபேஷன்... தங்கம் விற்கும் யானை விலை, குதிரை விலையில், இவை நம் தேவைகளையும் நிறைவு செய்யும்...

நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்!

நம் உடலின் அந்தந்த ஏரியாவில் சற்றே அழுத்தத்தைக் கொடுப்பது போல், நாம் போட்டிருக்கும் ஆபரணத்தை லேசாகச் திருகிவிட வேண்டும். தினசரி இதுவே ஒரு சிகிச்சையாக உங்களுக்கு அமையும்!...



மற்றபடி உடல்நிலை சரியில்லாத சீரியஸான நிலையில், இந்த வைத்தியத்தை மட்டும் செய்தாலே போதும் என்று நின்று விடக்கூடாது! அவசர நேரத்தில் மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்வதே முறையானது!...    
சரி.... நாம் அணியும் எந்த ஆபரணம், என்னவிதமான மருத்துவப் பலனை தருகிறது என்று இனி பார்ப்போம்!





















வைரம் இருக்கும்படியான அணிகலனை இடது காதில் மட்டும்,அணிந்து கொண்டால் மன அமைதி கிடைப்பதோடு, உடலில் எதேச்சையாக ஏற்படும் படுவர்மங்கள் கூடத் தானாகவே இளகி விடுமாம்.

சுவாசப் பயிற்சிகள் செய்யும் அன்பர்கள் கையில் தங்கம், வெள்ளி, செம்பு மூன்றும் கலந்த கங்கணக் காப்பை அணிந்து கொண்டால் திரிதோசத்தைச் சமப்படுத்த முடியும்.

Saturday, June 18, 2011

குடல்வால் - உபயோகமில்லாத உடலுறுப்பா?



மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு உறுப்பு உள்ளது. இந்த உறுப்பு நான்கு அங்குல நீளம் மற்றும் அரை அங்குல விட்டம் உடையது, ஒரு புழுவின் வடிவத்தில் பை போன்று இருக்கும்,


குடல்வால் இல்லாமல் மனிதனால் உயிர்வாழ இயலும்.   எனவே இது மனிதனின் உடலில் இருக்கும் ஒரு தேவையற்ற உறுப்பாக இதுவரை கருதப்பட்டது,  எதேச்சையாக வயிற்றில் அறுவை சிகிட்சை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் நம்மிடம் சொல்லாமலேயேக் கூட இந்தக் குடல் வாலையும் வெட்டி எடுத்து விடுவார்களாம்.  இந்தக் குடல்வாலின் நன்மைகள் என்ன தெரியுமா?


மனிதனின் உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் உண்டு . இவற்றில் நன்மை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு. தீமை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு.

நன்மைசெய்யும் பாக்டீரியாக்கள் உணவை செரிக்கவைப்பதோடு மட்டுமல்லாமல், மனித உடலுக்குத் தீமை செய்யும் பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கிறது. நன்மை செய்யும் பாக்டிரியாக்களைச் செழிக்க செய்வதும் கூட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகமாக்குவதற்கு சமமான செயலே.




இவ்வாறு செழிப்படைந்த நன்மைசெய்யும் பாக்டிரியாக்கள் உயிர் படலங்களாகக் குடல்வாலை ஆக்கிரமித்து கொண்டு வாழ்கின்றன.   குடல்வாலே, தீமைசெய்யும் பாக்டீரியாக்களைத் தடுக்கும் அரணாக செயல்படுகிறது. எனவே குடல்வால் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்கு என அழைக்கப் படுகிறது.
பெருங்குடலில் வசிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கழிசல்,பேதி போன்றநோய்களின்போது வெளியேறிவிடுகின்றன.

ஒரு-மண்டலம் ஆண்டிபயாட்டிக் மருந்து சாப்பிட்டபிறகும் இதேநிலை ஏற்படுகிறது. அதன் பிறகு குடலுக்குத் தேவையான நன்மை தரும் பாக்டிரியாக்களை சப்ளைசெய்வது அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வாலாகும்.  

ஆறு வருடங்களுக்கு முன்பே இதனை பலமுறை நமது யோகவகுப்புகளில் கூறி இருந்தாலும், டியூக் பல்கலைக்கழக பரிணாம உயிரியல் வல்லுநர்கள் குடல்வாலின் இதே பயனை-அண்மையில் வெளியிட்டிருக்கிறார்கள்.

||Although regarded as a vestigial organ but recent studies indicate that the appendix has different functions like immune function, maintaining of gut flora, etc 
Read more: http://en.wikipedia.org/wiki/Vermiform_appendix ||
||These researchers at the 'Duke University Medical School' believe they have sufficient evidence to back up their theory, in that the appendix appears to help produce and protect the good bacteria in the intestines. The appendix, they say, acts like a "good bacteria factory" that "cultivates and preserves" good bacteria nutrition to help keep your body healthy. There is much more bacteria (or germs) inside your body than cells. Most of this bacteria that resides inside your body is needed to help you digest, absorb, and eliminate your food. These friendly microbes also provide your skin with a protective barrier. 
Read more: http://www.disabled-world.com/artman/publish/appendix.shtml ||

குடல்வால் ஆட்டுக்குத்தாடியை போல ஒரு அனாவசிய-உறுப்பு அல்ல நண்பர்களே!  நவீன காலத்தில் சுகாதாரம் அற்ற சூழலில் வாழும் நம்மவர்களுக்கும் இந்த குடல்வால் ஒரு-பாதுகாப்பு சாதனமாக இருக்கிறது என்பதே உண்மை.  நமது உடல் என்பது மூலப் பிரகிருதியால் தெளிவாகப் படைக்கப்பட்ட ஒரு ஒப்பற்ற இயந்திரம்.  இந்த உடலினுள் உபயோகமில்லாத உறுப்பு என்று எதுவுமே இல்லை நண்பர்களே!  


ஒரு உறுப்பின் உபயோகம் நமக்குத் தெரியவில்லை என்பதற்காக அதனை உபயோகமற்ற உறுப்பென அறுத்து விடுவது அறிவுடைமையாகாது.  ஒரு உறுப்பை எடுத்தாலும் உயிர்வாழ முடியும் என்பதற்காக அந்த உறுப்பை அகற்றி விடுவது எந்த வகையில் நியாயம்? குடல்வால்வைப் போலவே மண்ணீரலும்,  டான்சிலும் பரிசோதனைக்கு உட்படுத்தப் படவேண்டிய உடலுறுப்புகளே என்பது எனது கருத்து. 


இந்தக் குடல்வால் ஒரே நாளிலெல்லாம் கெட்டுப்போகாது நண்பர்களே!

குடல்வால் நோயை நமது உடல் குறைந்தது ஒரு வருடத்திற்கும் மேலாகவே அறிகுறிகளாக வெளிப்படுத்துகிறது.  உடல் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இதனை நாம் அலட்சியப் படுத்துகிறோம். விளைவு வேறு வழியில்லாமல் படைப்பின் ரகசியத்தில் அரிதாகக் கிடைத்த குடல்வாலை இழக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.


யோக மருத்துவப் பயிற்சிகளை,   ஆதுரஸ்ய ரோக நிவாரணம், ஸ்வஸ்த ஸம்ரக்ஷணம்,   என இரு வகையாகப் பிரிக்கலாம்.  அதாவது நோய் வந்த பிறகு குணமாக்குவதற்காகச் செய்யப்படும் பயிற்சிகள்,  நோய் வருவதற்கு முன்பே ஆரோக்கியத்தை நிலைப் படுத்துவதற்காகச் செய்யப்படும் பயிற்சிகள்.  இவற்றுள் குடல்வால் நோய்க்காகச் செய்யக்கூடியப் பயிற்சிகள் ,நோய் வருவதற்கு முன்பாகவே செய்யக்கூடிய ஸ்வஸ்த ஸம்ரக்சனம் வகையைச் சேர்ந்தது.
                

பெருங்குடலின் சக்திக்குறைவே குடல் வால் அலர்ஜியை ஏற்படுத்துகிறது.    "சர்வ ரோகா மலவாச்சகா" எனக்கூறுவது குடல்வால் அலர்ஜி நோய்க்கு முற்றும் பொருந்தக் கூடிய வார்த்தையாகும்,  மலச்சிக்கலே குடல்வால் அலர்ஜிக்கு முக்கியகாரனமாக அமைகிறது.

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது.  தண்ணீர் அதிகம் குடிப்பது. நார்சத்துள்ள உணவுகளை உண்பது போன்ற வாழ்க்கை முறைகளால் குடல்வால் அலர்ஜி வராமல் பர்த்துக்கொள்ளமுடியும்.    

லெட்சைகெட்டக்கீரையை வாரத்திற்கு இரு முறையேனும் உணவாகப்பயன்படுத்தலாம். சுண்டைக்காயையும்,பிரண்டையை-யும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் வால் அலர்ஜி என்ற நோய்க்கு இடம் கொடாமல் வாழமுடியும்.  

அதுவும் சனிக்கிழமைகளில் சுண்டைவற்றல் குழம்பும் பிரண்டைத்துவையலும் வயிற்றிலுள்ள ஆமத்தைக் குறைத்து குடல்வால் அலர்ஜியை விரட்டும்.

மலமிளக்கிகளை அதிகமாகப் பயன்படுத்துவதும் குடல்வால் அலர்ஜி வருவதற்கு ஒரு காரணம் என்பதால் மலமிளக்கிகளைப் பயன்படுத்துபவர்கள்,தங்கள் உடல் பிரகிருதியைக் கருத்தில் கொண்டு செயல்படவும்.  எனிமா கேன்களைப் பயன்படுத்துவது சிறந்தது.

யோகத்தில் அக்னிசாரக் கிரியையும்,   நெளலிக்கிரியையும் குடல்வால் அலர்ஜியை வரவிடாமல் காக்கும் என்பதில் சந்தேகமில்லை.  

ஆசனங்களில் பவன முக்தாசனம், அபானாசனம் போன்றவை மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்,  நவுக்கானம்,  ஹம்சாசனம் போன்றவை வயிற்றிலுள்ள நோய்த்தொற்றுகளை வெளியேற்றுவதில் பெரும்பங்கு வகிக்கும்.   சூஜி முத்திரை, பெருங்குடல் பாதைகளை சுத்தப்படுத்தி அங்குள்ள நச்சுக்களை வெளியேற்றும்.  

சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்
துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்
கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே.  - திருமூலர்