Total Pageviews

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Monday, March 31, 2014

காலம்





நிதமும் நீ கடந்து போன ஒவ்வொரு நொடியும் எனக்குத் திரும்பி கிடைக்காதாவென ஏக்கத்துடனே கடந்து போகிறேன்.....!!!! 

விடியலில் ஆரம்பிக்கும் உன்னின் துரத்தல் நன்பகல் பகல் பிற்பகலென விரிந்தே என்னையும் உன்னோடு சேர்த்து கொண்டே.....!!!!


எப்போதுமே என்னுடன் பயணிக்கிறாய்
இருட்டில் கூட மறைந்து போகும் எந்தன்
நிழலும் இன்னொரு முகமானதாய்....!!!!


நொடி வினாடி நிமிடத்தில் ஜனித்தே
மணியாய் நாளாய் வாரமாய் மாதமாய்
வருடமாய் என்னின் வரமாய்.....!!!!


பிறிதொரு நாளின் துவக்கத்தில் எனக்குள்
அவதியும் அவசரமும் படபடப்புமாய்
தவிப்பும் சேர்த்தே உன்னை உணரவைத்தாயே....!!!!


ஒவ்வொரு நாளும் என்னை அழகுபடுத்துகிறாய்
அடுத்தொரு நாளில் என்னை அவதிக்குள்ளாக்கியே
பிறப்பின் தவத்தை எனக்குள் புகட்டினாயே..!!!!!


வருடங்கள் நகர நகர என்னுள் ஒரு பெரியதோர்
மாற்றமதை நிகழ்த்திவிட்டு நகர்ந்து விடுகிறாய்
ஏதுமறியா கள்வனாய் அருவமாய் அகன்றே....!!!!


காலமே உன்னை வணங்குகிறேன் ஒவ்வொரு
நாளும் என்னைப் புதுப்பித்தே வழியனுப்புகிறாய்
எனக்குள் இருக்கும் வலிகளை வடிகட்டியே....!!!!


எதையும் தாங்கும் வலிமையதை வலியால்
உணர்த்தியே என்னை இறுக்குகிறாய்
இறுகிப்  போகிறேன் இறுமாப்பாய்/...!!!!

Wednesday, March 19, 2014

நமை நாமே வெல்வீரா?????

ஒளிவீசும் விழியிரண்டும் ஒளியின்றி ஆனதென்ன!
ஒலிகேட்கும் செவியிரண்டும் ஒலியின்றிப் போனதென்ன!!
செவியிரண்டும் விழியிரண்டும் செயலிழந்து போனதனைக்
கவிவழியே மரபோடு கவிஞனிவன் பாடுகிறேன்!!
உடலென்னும் கூடுவிட்டு உயிர்ப்பறவை பறக்குதடா!
உடலென்ன உறவென்ன எல்லாமே மறக்குதடா!!
காலிரண்டு மூன்றாகி காலங்கள் மொட்டாக!
மேலிருந்து அழைப்புவர மூன்றுகால் எட்டாக!!
மீளாத தூக்கத்தில் மூழ்கிவிட்ட தசைப்பந்து!
காலனாலே காலமாகி கவிபாடும் இசைச்சிந்து!!
ஒருதுளி விந்ததுவே அண்டத்தோடு கலந்துவிட
கருவானாய் தாய்வயிற்றில் கல்லறையில் மலர்ந்துவிட!
பிறந்தபோது பேர்வைத்துப் புகழ்கின்றார் பெற்றோர்!
இறந்தபோது பிணமென்று இகழ்கின்றார் உற்றார்!!
ஏனிந்த மாற்றமென்று எவரேனும் சொல்வீரா?
‘நான்யார்?’ தெரிந்துகொண்டு நமைநாமே வெல்வீரா?

Friday, December 14, 2012

ஒரு தங்கை தாயாகிறாள்....




ஒரு கொத்துக் குளிர்த்தென்றல்
சட்டென்று சறுக்கி வந்து
என்உயிர் கொத்திச் சென்றதாய் ஓர்
பிரம்மாண்டப் பனிச்சரிவு எனக்குள்.

நினைவுகளும் நினைவுகளும்
நிர்ப்பந்தச் சண்டையிட,
என் கண்களுக்குள்
வானவில் ஒன்று
நிறுத்தாமல் நர்த்தனமிடும் சலங்கைச் சத்தம்.
என் தங்கை
தாயாகப் போகிறாள்.
ஒரு ஜனனச் சன்னல்
இதோ
பூமியின் பூபாளத்துக்காய் திறக்கப் போகிறது.
உற்சாக அலை ஒன்று
உள்ளுக்குள் உருள்கிறது.
அது
துள்ளும் கடலலையை எல்லாம்
உள்ளங்கைக்குள் சுருட்டிக் கொள்ளச் சொல்கிறது.
விரலிடுக்கில் விண்மீன் பறித்து
அதை
மின்மினிக்குப் பரிசளிக்கச் சொல்கிறது.
தோட்டத்தில்
தானியங்களை விலக்கிவிட்டு
வெள்ளைப்பூக்களும்
வண்ணத்துப் பூச்சிகளும் மட்டுமே
வளர்க்கச் சொல்கிறது.
பீலி பெய் சாகாடும் நிலை எனக்கு.
என் இதயக் குமிழுக்குள்
இத்தனை ஆனந்தத்தை
இறுக்கித் திணிக்க முடியவில்லை.
என் விரல் பிடித்து நடக்க
ஓர்
மழலை ரோஜா மலரப்போகிறது.
என் மொத்த மகிழ்ச்சிக் கொடிகளும்
ஒற்றைப்புள்ளியில்
ஓர் ஜீவ முடிச்சிடப் போகிறது.
ஒரு
பச்சைப்பிள்ளையின் முதல் சத்தத்துக்கு
ஓர் புதுத் தாயின் முதல் முத்தம்
புன்னகைப் பரிசாய் விழப் போகிறது.
பிரிய தங்கையே.,
நேற்றுவரை உன்னை பூவாய்த் தான் பார்த்தேன்.
நீ செடியான சேதியே
இன்றுதான் எனக்குள்
ஓர் சங்கீதமாய் விழுகிறது.
கிளைகளுக்குப் பூக்கிரீடம் சூட்டும் போது
வேர்களுக்குள் விழா நடக்குமென்று
இன்று தான்
விளங்கிக் கொண்டேன்.

Wednesday, December 12, 2012

எப்படி இருக்கும் முதுமை????









எப்படி இருக்கும்

முதுமை

இறப்பை எதிர்நோக்கிய

தனிமை?

அனாயாசமான
அனிச்சை சுவாசம்
பிரயாசையாகிப் போகுமோ? - மூச்சு
இழுக்கவும் விடவும்
முயற்சி தேவைப்படுமோ?


ஓடியாடியது போதுமென
ஓய்ந்திருக்கத் தோன்றுமோ ?- உடல்
ஒவ்வோர் இடத்திலும்
விட்டுவிட்டு வலிப்பது
பழகித்தான் போகுமோ?

நடக்க முடியாமல்
உட்கார்ந் திருக்க விரும்புமோ?
இருப்புக் கொள்ளாமல் - மனம்
படுத்துறங்க நாடுமோ?

படுக்கை முட்களாகி
புரட்டிப்புரட்டிப் போடுமோ?
உறக்கம் இமைக்கு வெளியே
விளையாட்டுக் காட்டுமோ?

வாழ்ந்ததெல்லாம்
விழித்திரையில்
வரிசையாகத் தோன்றுமோ? - வாழ்ந்த
வாழ்க்கை வந்து நின்று
பரிகாசம் செய்யுமோ?

பார்வை மங்கிப்போய்
பரிச்சயம் பிழையாகுமோ? - நில்லாமல்
அலைபாய்ந்த விழியிரண்டும்
நிலைகுத்திப் பார்க்குமோ?

குழந்தைகளின் ஆரவாரம்
கூச்சலென வதைக்குமோ?
சப்தம்கூட்டிப் பேசச்சொல்லி – கை
காதுமடல் தாங்குமோ?

சுமந்து சென்ற கால்களிலும்
சுணக்கம்தான் நிலைக்குமோ? - இனி
மூன்றாம் காலொன்று
முதற்கையில் முளைக்குமோ?

மறுமையை மறந்து மனம்
மருந்துகளை நாடுமோ? - வெறுத்து
ஒதுக்கிவைத்தச் சொந்தபந்தம்
ஒன்றுகூட ஏங்குமோ?

பயணச் சுமைதனிலே
பாவங்கள் கூடிடுமோ ?- இல்லை
மரண நினைப்பு மிகுந்து
பயம் வந்து சேருமோ?

எப்படி இருக்கும்
முதுமை - உறுதியாகிவிட்ட
இறப்பை எதிர்நோக்கி நிற்கும்
ஒருமை?

Wednesday, November 7, 2012

நான் யார்????








நான் விசித்திரமானவன்


வித்தியாசமானவன்


யாராலும் பார்க்க முடியாத


அதிசயங்களை நேரில் பார்த்தவன்


பௌர்ணமி நிலவைப் பகலில் பார்த்திருக்கிறேன்,


செவ்வாய் கிரகத்தைத் தொட்டுப் பார்த்திருக்கிறேன்


குளிரும் சூரியனை அருகில் பார்த்திருக்கிறேன்


மேகத்தை மூடும் வானம் பார்த்திருக்கிறேன்


பூவின் சிரிப்பை நேரில் பார்த்திருக்கிறேன்


தென்றல் காற்றைத் தழுவிப் பார்த்திருக்கிறேன்


இரவின் நடுவில் விடியல் பார்த்திருக்கிறேன்


தூக்கம் இல்லாமல் தூக்கம் பார்த்திருக்கிறேன்


தூண்டிலே மீனாகிய விந்தையைப் பார்த்திருக்கிறேன்


மீன்களின் வலையில் சிக்கிப் பார்த்திருக்கிறேன்


மீன்களின் கண்ணீரைத் துடைத்துப் பார்த்திருக்கிறேன்


மீண்டும் ஒருமுறை பிறந்து பார்த்திருக்கிறேன்


மௌனம் பேசும் கவிதைகள் பார்த்திருக்கிறேன்


கவிதை பேசும் மௌனங்கள் பார்த்திருக்கிறேன்


கனவை கனவில் தேடிப் பார்த்திருக்கிறேன்


இத்தனைப் பார்த்தும் என்னை "நான்" பார்த்ததில்லை

Saturday, November 3, 2012

"நான்"இருப்பின் நிஜம்


"நான்"இருப்பின் நிஜம்

உனைக் காண
எனைத் தொலைத்தேன்

புதியன கூடப்
பழையன கழிந்தேன்

தோல்விகளின் தோலுரித்து
காலத்தை வென்று
திமிர்ந்த ஞானச் செருக்கோடு
பூமியில் நடந்தேன்

தீட்சண்ய விழிகளில்
உன் நிஜங் கண்டு
நமைப் பிரிக்க எழுந்த
மாயச் சுவர்களைப் பிளந்து
உனைக் கூட வந்தேன்

ஊன விழி மூடி
ஞான விழி திறந்து
இல்லாது
நீ இருப்பதை உணர்ந்து
இருப்பதாய் நடிக்கும்
ஆணவத்தின் ஆர்ப்பாட்டம் முடித்தேன்

சுழியும் நெற்றியுள்
உன் முழுமை கண்டு
தொண்டையுள்
வழியும் சுழிக்குள்
என் மெய் சிக்க
பொய்யுலகக் கணக்கைக்
கழிந்தேன்

இருள் சேர் இரு வினையின்
கருவினைக் கலைத்து
ஒருமையில்
உனைச் சேர்ந்தேன்

பொய்த் தளைகளிலிருந்து
கவனம் கழல
மெய்ப் பொருளாம்
உன்னில் இலயித்தேன்
சத்குருவே!!!!
கனவுகள் கலைந்த
ஞான விழிப்பில்
பேதங்களற்று
நீயானேன்
"நானே"

Saturday, August 11, 2012

தத்தரிகிட..தத்தரிகிட..தித்தோம்





புகைக்கு நடுவே இருந்து ஒரு வன்மம்

மனதிற்குள் கனன்று கொண்டிருக்கிறது ..



திருப்பி அடிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

விடாது மூளைக்குள் ஒரு சிலந்தியின் குரல் …



என்றோ கற்றுக்கொண்ட

கெட்ட வார்த்தைகள்

தொண்டைகுழி தாண்டி நாவிற்குள்

சற்று முன்பு தூண்டிலில் இருந்து பிரிக்கப்பட்ட மீன் போல

வெடுக்கென்று தெறித்து விழ தருணம் பார்த்து

இறந்தது போல நடித்துக் கொண்டிருகின்றன …



யாரையும் காயப்படுத்திவிடுவேனோ

என மௌனித்திருந்த


பேசப்படாத வார்த்தைகள் மொத்தமும்

பரிசீலனைக்கு அருகதை இல்லாதவர்களுக்காய்

தன்னைத் தானே வதைத்துக் கொள்வது

படு முட்டாள்தனமான காரியமென

மீண்டுமொருமுறை காட்டிவிட்டன …



நான் காயப்படக்கூடும் என்ற

எவ்விதப் பிரக்ஞையுமின்றி

என்னைப் பற்றிய மதிப்பீடொன்று 

எய்யப்பட்டு விடும் முன்

எதிராளியை வீழ்த்த என்ன அவதூறு

பேசலாமென்ற சிந்தனையிலேயே

அர்த்தமற்ற வார்த்தைகளால்

நிரம்பிவிடுகின்றன 

எல்லா உரையாடல்களும் …



கவனிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்

எனது ஒவ்வொரு செயல்களுக்குமாய்

தரம்பிரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்

என் படுக்கை அறையின் ஜன்னல்கள்

களவாடப்பட்டிருக்கின்றன

எனது வார்த்தைகள் யார் யாராலோ தீர்மானிக்கப்படுகின்றன

எனது நாட்குறிப்புகள் எவனோ ஒருவனால்

எழுதப்படுகின்றன

குடைக்குள் வர மறுக்கின்றன

மழையும் மழை சார்ந்த எதுவும் …



கண்ணீரும் கவிதையும் இசையும்

தருவிக்கப்பட்ட புன்னகையும்

நிரந்தர ஆறுதல்கள் இல்லையென்று

தெரிந்துபோன

இச்சபிக்கப்பட்ட தருணத்தில்------மீண்டும்

ரௌத்திரம் பழகத் துவங்கியிருக்கிறேன்.......

Thursday, July 12, 2012

வலியும்,வழியும்





அழுகாமல் "நான்" பிறந்திருந்தால்
அன்றோடு முடிந்திருககும்
அழுகையின் அத்தியாயங்கள்

உலுக்கி எடுத்த உடல் வலி
பிறந்ததும் வீரிட்டு அழுதேன்
அழுகையின் அடுத்தடுத்த
அத்தியாயங்கள் தெரியாமல்

அப்போது கூட யோசித்திருக்கலாம்
வாழ்க்கை என்பது
வலிகள் நிறைந்ததென்பதை

புது உடலுக்குள் புகுந்துவிட்ட ஆனந்தம்
உடல்வலியை மனவலிமையால் வென்றிடலாம்
வாழத்துணிந்தது மனம்
வாழ்க்கையின் இன்னொரு முகம் தெரியாமல்

உடலை வளைத்து
உணர்ச்சிகளைப் பெருக்கி
வாழ்க்கைப் பயணத்தை
வலி இன்றிதான் துவங்கியது மனம்.

சிந்தனைச் சிறகுகள்
விரியும் வரை தெரியவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் வலி என்று


தேடலின் வேகத்தில்
ஓடத் துவங்கிய மனம்-
ஒவ்வொரு அடியிலும்
வாங்கியது அடி.


பற்றுப் பாசப் பங்கீட்டில் முட்டி மோதியதில்
வாழ்க்கை வலியின் – அடுத்தடுத்த
அத்தியாயங்கள் ஆரம்பமானது.


பங்கிட்டுக் கிடைப்பது தான் பாசம்


பெற்றோரின் பாசம்
உடன்பிறப்புகளோடு பங்கிட வேண்டும்.


உடன்பிறப்புகளின் பாசம்
அத்தனையிலும் பங்கிட வேண்டும்


"அயலவரின்" பாசம்
அவரவர் பங்குக்கு அற்பத்திலும் சொச்சம்


பங்கிட்டுத் தான் பெற வேண்டுமா பாசத்தை?


யாருக்கும் எதற்கும் பங்கிடாத பாசம்
வேண்டுமென ஏங்கியது மனம்
முதன் முதலில் உணர்ந்தேன்
மன வலியை!

மன வலி

எனக்கு மட்டும்
எனக்கே எனக்காக மட்டும்
ஒரு பாசம் – ஏங்கியது மனம்
ஏங்க ஏங்க
கூடியது வலியும்

உடல் வலித்தால்
வீரிட்டு அழலாம்
மனம் வலிக்கிறது
என்ன செய்வேன்?

வலி
வலியாற்ற வழியில்லா
வலி
உடல்வலி தாங்க
வீரிட்டு அழுது பழகியவனால்
மனவலி தாங்க
நேரிட்டு அழ தெரியவில்லை

வலிக்கு
வடிகால் தான் அழுகை
என் மனவலிக்கோ
அழுகையே தூண்டுகோலாக

பாசாங்குப் பாசங்கள்
பரிகாசமாய் சில ஆறுதல்கள்


ச்சே..
திக்குத் தெரியாமல்
திக்குமுக்காடும்
குருட்டு வாழ்க்கை


வலியோடு
வாழ வெறுத்தவன்
வாழ்வை முடிக்க
வழிதேடினேன்


ம்ம்ம்….
வாழ்வின் முடிவு -
அட அதுகூட
ஒரு வலிதான்.


வலிக்கு வலியே மருந்தா?


மறுத்தது மனம்


வலிக்கு வலியே மருந்தாகுமா?


ஒரு கணத்தில் பிழைத்தேன்
மரணவாசலில் வந்த
மறுபிறவி பயத்தால்


ஒருவேளை
செத்து பிழைத்தால்
மீண்டும் இதே வலிகளா?


அட
இது ஒரு புதுவலி



மறுபிறவி தேடல்
மனவலியை மிஞ்சிய
ஒரு மரணவலி


தவம், தியானம் மன ஒருமுகம்
ஒருங்கே கோர்த்தே
சிந்தனைச் சிறகை விரித்தேன்
சிவலோகம் எனும் பரலோகம் நோக்கி
பறக்கப் பறக்க முற்றியது - பாசம்
பரவுலக வாழ்க்கைமீது


சிந்தனைச் சிறகடித்து
சுதந்திர சூட்சமங்களைச் சுவாசிக்கும் ஆர்வம்
வலி மாய்ந்தது போல ஒரு இன்பம்


பற்றுப் பாவ
பங்கீட்டைத் தாண்டி
இனனும் பறந்தேன் வேகமாக
பரம்பொருள் ரகசியம் தேடி


எல்லை நெருங்கிவிட்ட ஆனந்தம்
கடவுளை நேருக்கு நேர் சந்திக்கும் பதட்டம்
கேள்விகளை ஒத்திகை
பார்த்துக்கொண்டேன் ஒருமுறைகூட


அந்தோ…
சுதந்திர சுற்றுகளை
சுருட்டி முடக்கிய மாயையினின்று
விட்டுப் பிரிந்ததில்
ஒடிந்தது என் சிந்தனை சிறகுகள்.


இங்கு கடவுளை தேடுவது ஒருபுறமிருக்க
முதலில் சிறகொடிந்த நான் எங்கே?


நானே இல்லை என்றால்
நான் எப்படி தேடுவது கடவுளை?
நானும் இல்லை கடவுளும் இல்லை
இனி எங்கே நேருக்குநேர் சந்திப்பு


ஒடிந்தது சிந்தனைச் சிறகுகள் மட்டுமா
என் பரம்பொருள் தேடலும்.


ஒன்றும் அறியாதவன்
எதையோ அறிந்தவ"நாய்" மீண்டேன்

வாழ்க்கை வலிக்கே.
உடல்வலி, உள்ளவலி -இபபோது
எனக்குள் ஆன்ம வலியும்


கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்


சென்று, கண்டவனுக்கு
விண்டுவதில் குழப்பம்

பெருஞ்சூனியத்தை எப்படி
பேரானந்தம் என்றார்கள்?


நான் போன இடம் தவறா
போன முறை தவறா – இல்லை
போகவே இல்லையா?


அழுது தீர்க்க உடல்வலி
புலம்பி தீர்க்க மனவலி
புதிராய் தவிக்க ஆன்ம வலியோ?


வலிகள் மட்டுமே வாழ்க்கையானால்
வழிவேண்டும் வாழ -அல்லது
வரலாறாய் மாழ


கேலியான நானே
கேள்வியானேன்


நான் யார்?


முடிவுறா வலியோடு
அழுதே முடித்தேன் முதல் சுற்றை.
முடிவிலும் எனக்குள் தொடங்கிய தேடல்


நான் யார்?


எல்லா ஞானிகளும்
யோசித்த அதே யோசனை


தான் தான்
எல்லா மனங்களும்
சொல்லிக்கொண்ட அதே சொல்


எனக்குமேல்
எல்லா மனிதர்களும்

உணர்ந்து கொண்ட அதே உணர்ச்சி


நான்யார்? -என்
உடல் மன ஆன்ம வலிகளின்
உச்ச கேள்வி


புலன் தாண்டி
புறப்பொருள் கூடி
தேடிய அறிவியல்


புலன் அடக்கி
உள்மன உட்கருவில்

உணரத்துடித்த ஆன்மீகம்


புலன் மனம் கோர்த்து
பொருள் கருத்தை
பொருத்திப்பார்த்த தத்துவம்


அறிவியல் ஆன்மீகம் தத்துவம்
மூன்றிலும் தேடினேன்
நான்யார்? கடவுள் யார்?


தெரியாது
தெரிந்து கொள்ளலாம்
அலுத்தது அறிவியல்


உனக்குள் இருக்கிறான்
உணரச்சொன்னது ஆன்மீகம்


நீதான் இறைவன்
அறிவை விளக்கி விவரித்தது தத்துவம்


மூன்றும் சொன்னவையோ
விடைகள்
எனக்குள் விடைகளே
வினாக்களாக


தெரியாது எனில்
அறிவியல் தெரிந்தது
எல்லாம் என்ன?


நான் தான் எனில்
நான் ஏன் தேடுகிறேன் இறைவனை


வினாக்களுக்கு விடைகேட்டேன்
உள்ளுக்குள் உள்ள
அத்தனை வலிகளையும்
ஒருங்கே கோர்த்து


வலி ஆற்ற
வியாபார உலகில்
விற்பனையில் கடவுள்கள்
விதவித கடவுள்கள்


விலைகொடுத்தால்
விரும்பியதை வாங்கிக்கொள்ளலாம்
பணம் அல்லது பற்று – இது தான்
கடவுளின் விலை


விலை தந்து தான்
வாங்க வேண்டுமா
என்னையும் கடவுளையும்
உச்சத்தில் வலித்தது மனம்


கடவுளுக்காக
பற்றை விலை கொடுத்தால்
எப்படி தெரிவேன் நான் யார்? என்பதனை


கடவுள் யார்? நான் யார்?
எது எந்தன் முதன்மை வலி


நானா?, கடவுளா?

யார் முந்தியவர்
முதலில் தேடுவது

யாரை?


கடவுளை தேடிப்போய்
நான் தொலைந்தாலோ
நானை உணரப்போய்
கடவுள் மறைந்தாலோ
எனக்குள் கடவுளை விட
நான் தான் முதன்மை வலி


நான் யார்

விடைதெரியாது விட்டிலாய் திரிந்தவனுக்கு
விளக்காய் ஒரு சுடர்

வாழ்க்கையைத் தொலைத்தவனை
வாவென அழைத்தது "யோகம்"


எனக்குள் வலி ஆற்ற வந்த
அற்ப சொற்ப விடயங்களுள்
யோகமும்ஒன்று- ஆயினும்
ஒன்றாய் நன்றாய்


குருவின் அறிமுகம் – இது
பங்கிடாத பாசம்


பங்கிடாப் பாசமாய்
எனக்குள் படர்ந்தார்
என்னவர்


குரு – இந்த முதல் சுடரே
என் முழுமுதல் விளக்கானது

என்னவரில் காண துடித்தேன்
என்னையும் கடவுளையும்


உணர்ச்சிகள் உசும்ப
உயிரை குடிக்கும்
சுவாச ரீங்காரம்
வலிகளின் வானவில்


விட்டிலாய் சுற்றும் விடலையை
கட்டிப்போட்டது
வீரியம் பூத்த
வாசியின் "வேள்வி"


வசப்பட்டது
என் உணர்ச்சிகள் மட்டுமல்ல

"நானும்"

யோகப்பேரின்பத்தில்
பொங்கியது நான் மட்டுமல்ல
என் உணர்ச்சிகளும்


ஆழமாகப் பூரித்துப்போனஎனக்குள் 
புரிந்தது புதிய ஞானம்

யோகத்தின் அர்த்தங்களை
அசைபோடலானேன்

யோகம் மருத்துவம் மட்டுமல்ல
மானுடம் வெல்லவைக்கும் 
மாபெரும் மகத்துவம்.

"நான்"என் உணர்ச்சிகள்
`எப்போதும் பிரிக்கமுடியா சார்புகள்

"தான்"- இதன் வெளிப்பாடே
என் உணர்ச்சிகள்
– இதன்
உட்கருவே "நான்"
நானின்றி – என்
உணர்ச்சிகள் இல்லை. – என்
உணர்ச்சிகள் இன்றி நானில்லை.


நான் தனின் அறிமுக நுட்பங்களே
என் உணர்ச்சிகள்


உணர்ச்சிகளின் வெளிப்பாடே
சாக்கிரம்,சொப்பனம்,சுழுத்தி

கனவே சொப்பனம்
உறக்கமே சுழுத்தி
விழிப்பே சாக்கிரம்

கனவு,விழிப்பு,உறக்கம்-மூன்றின்
முறையான முடிச்சே வாழ்க்கை.


அவிழ்க்க அவிழ்க்க அவிழ்ந்துகொண்டிருக்கும்
அது தான் வாழ்க்கை.
அறிந்தவன் அணைத்தேன் யோகத்தை
அதற்கப்பாலும் அறிய
அவிழ்ந்தது
என் வலி முடிச்சுகள் மட்டுமல்ல
அறிவின் கருவறைக் கட்டும்.


Thursday, July 5, 2012

இறை மனிதன்







நாயின் குணம் நாவிலே
நரியின் குணம் நினைவிலே
பாம்பின் குணம் பல்லிலே
பசுவின் குணம் பாலிலே
படைப்பின் பல குணங்களும்
பாடம் ஏதும் கொள்ளாமல்
பக்குவமாய் பற்றியது
பாவம் இந்த மனிதனுக்கு
பாதி மதி சூடிநி்ற்கும்
பரம சிவன் குணமும்
பாற்கடலில் பள்ளி கொள்ளும்
பரந்தாமன் குணமும்
பாழ்பட்ட மனிதனுக்கு
பல நாளும் தெரியலே
எத்தனையோ இறைகுணங்கள்
ஏராளமாய் இருந்தும்
மனிதன் என்னும் மிருகத்துக்கு
இவை அனைத்தும் இன்னமும்
இருட்டில்தானே மறைந்திருக்கு
எடுத்தியிம்ப சத்குருவும்
இரக்கத்தோடு வந்தால்கூட
இகழ்ந்து விரட்டும் இயல்புதான்
இவன் கொண்ட இழிகுணம்
கூறிவந்த குற்றமெல்லாம்
மிருகத்தின் குணங்களாம்
மனிதனுக்கு என்ன குணம்
மறந்தும் கூட தெரியலே
மறைந்திருக்கும் மனிதகுணம்
மறையோன் மட்டும் அறிவானோ??
எண்குணத்தான் என்பதெல்லாம்
இறைவனுடைய இயற்பெயராம்
இறைவனின் குணம்
இன்னதென்று அறிந்துவிட்டால்
இந்நிலத்தில் நீயே
இறையென்று அறியலாம்
குற்றமற்ற குணம் கொண்டு
கொற்றவனாய் வாழலாம்

Saturday, May 19, 2012

இறைதேடி.....





உயிரின் மூலாதாரங்களை
அகழ்ந்தாய்ந்திருந்தபோது தென்பட்டன
கடவுளின் காலடித் தடயங்கள்.
அடியொற்றியே தொடர்ந்தேன்.

 


கால வெளி எல்லைகள் தூர்ந்து
ஆதியும் அந்தமுமான பிராந்திய
வெளியெங்கும் விரவிக்கிடந்தேன் "நான்"
என்னெங்கிலும் பரவிக்கிடந்தது "வெளி"
விழித்தெழுந்த உடலணுக்கள் யாவிலும்
வெடித்துக் கிளம்பியது பேரானந்தக் கிளர்ச்சி
கருமக் கயிறுகள் அறுந்து
ஞான ஒளியூட்டம் நிகழ்ந்தது
சூன்ய பெருஞ்சூட்சமங்கள் தெரிந்தும், தெளிந்தும்
கண்ணெட்டியவரையில் காணக்கிடைக்கவில்லை
கடவுள் மட்டும்.

வந்த வழி வியந்தேன்.

இரண்டு சுவடுகளன்றி
இன்னொன்று ஏதுமில்லை.
இருந்த சுவடுகள் மீது
நின்றுகொண்டிருக்கின்றேன்
"நான்".
 

Thursday, March 29, 2012

எழுத்தின் இலக்கே

அவ்வை சொன்னாள்; அகரம் எனக்கு;
அதுவே என்றன் வாழ்வின் கணக்கு;
கவ்விய மனது; கருதுவ தெல்லாம்
கவிதையை இங்கு விதைப்பதன்பொருட்டு!


வள்ளுவன்,மூலன்,வார்த்தைகள் எல்லாம்
வரிசை கட்டிய தமிழ் ஊற்றாக
வள்ளல் பெருமான் போன்றோர் வடிவில்
வந்த ஞானியர் யாவரும் இங்கு


விதைத்துச் சென்ற வித்துக்கள் மண்ணில்
விளைந்தவை இங்கு அடர்வனம் ஆக;
புதையலைப் போலத் தேடி அவற்றைப்
புலவோர் பலரும் பொங்கலிட்டனர்!


சித்தரும் முத்தரும் சிந்தித்த மொழியென
பித்தன்யானும் பேயாய் அலைந்து-
புத்தியில் அவற்றைப் புரிந்து கொண்டே
புதுப்புது விளைச்சலை அறுவடை செய்து-


நட்ட நிசியிலும் நடுநின்றுணர்ந்து
எட்டிப் பிடித்ததை இம்மொழியாக்கி,
எட்டுத்திசையிலும்கொட்டி முழங்கி
எவரும் உண்ணத் தகுந்தவை என்றே-

கம்பன் இளங்கோ,காட்டிய தமிழில்
கொம்பன் பாரதிகூறிய வாறே
நம்தொழில் எழுத்தென;நாட்டுக் கீந்து,
நல்லவை நவின்று சோரா திருப்பது!


நம்பிக்கை கொண்டு நாடிடுவோர்முன்
நாளும் இதையே நந்தா விளக்கென-
தெம்புடன் சொல்லித் தெளிவுடன் வாழ்வது:
தேசம் இதனைத் தெரிந்து கொள்க!


எதையும் இங்கு எதிர்கொண் டிருந்து
எதிலும் கலங்கா மலைபோல் நின்று
விதியை மாற்றும் விதியை எழுதி
விதைப்பது தான்என் எழுத்தின் இலக்கு!

Monday, March 26, 2012

எச்சரிக்கை......



என்ன 
செய்தால்
உங்களுக்கு கோபம் வரும் "
‘ஏன்’ 
‘சரி...சரி... என்ன சொன்னால்
கோபப் படுவீர்கள்"
‘எதற்கு கோபப் படவேண்டும்’ 
‘அப்போ உங்களுக்கு கோபமே
வராதா’ 
‘நான் சொன்னேனா’ 
‘அப்போ
கோபப் படுவீர்களா’
‘படலாம்’ 
‘கோபப் அப்டுவீங்களா?!!!
கோபப் படுவீங்களா நீங்க!!!?’ ஆச்சர்யத்தில்
புருவம் உயர்த்திக் கொண்டார்
சிரித்துக் கொண்டேன்
‘சாதுங்க நீங்க’ 
அவரையேப் பார்த்தேன்
‘ஆழமான பார்வை உங்களுக்கு’ 
‘அப்படியா?’
‘ஆமாங்க’
‘உண்மையாகவா?’
‘அட சத்தியமாங்க’
‘ஏன் நீங்க அப்படி
பார்க்க மாட்டீர்களா?’
‘பார்ப்பேனே.. பார்ப்பேனே.. இதோ..’ அவர்
கண்களை உருட்டிக் காட்டுகிறார்.
‘அசிங்கமா இருக்கே’ என்றேன்
‘ஏன்..???????????????!!!!!!!’
‘ஆமாங்க நல்லாவே இல்ல’ 
‘ஏன்..???????????????!!!!!!!’
‘குருடு மாதிரி இருக்கு?’
‘குருடா….!!! யாரு?’
‘நீங்க தான்
ஆந்தை மாதிரி முழிக்கிறீங்க’ 
சற்று நக்கலாகச்
சிரித்துக் கொண்டேன்
‘நானா???!!! நானா???!! ஆந்தையா??
என்னை பார்த்தா ஆந்தை மாதிரி தெரியுதா???
நீ மட்டுமென்ன யோக்கியமா – உனக்கும் தான்
நொள்ள கண்ணு’ என்றார் வெடுக்கென்று
‘இப்பதான் சாது’ன்னீங்க
‘ஐயோ; ஐயோ; நீயா சாது!!?
மொடாகண்டன் நீ’
‘ஆழமான பார்வைன்னு கூட
சொன்னீங்களே’
‘அப்போ சொன்னேன்
இப்போ இல்லை, நீ அப்படியில்லை’ என்றார் கோபம்
தலைக்கேறியவராக
‘ஒரே நிமிடத்தில் மாறிவிட்டேனா’ என்றேன்
‘நீ எப்பவுமே
இப்படித் தான் போல
நான் தான் தவறாகப் புரிந்துக் கொண்டேன்’ என்றார்
‘சரி, இப்போவாவது
புரிந்துக் கொண்டீர்களா’ 
‘புரிது புரிது; நீ போ’ என்று
சலித்துக் கொண்டார்
நான் மௌனமாக அங்கிருந்து
நடக்கலானேன்
அவர் என்னை
பைத்தியம் என்று
பக்கத்தில் இருந்தவரிடம்
கோபமாக பேசிக் (பற்ற வைத்துக்) கொண்டிருக்கிறார்.
நான்
திரும்பிக் கூட
பார்க்கவில்லை அவரை
அவரின் சப்தம்
என் காதில் வெகு வேகமாக
குறைந்துக் கொள்ளுமாறு
மிக வேகமாக நடக்கிறேன்......
உலகத்தின் நடத்தை........
மனிதரின் மனசு.........
நாம் தலையாட்டும் வரை தான்;
ஒரு கண்ணைப் பற்றிப் பெருமை பேசினால்
இரு கண்ணையும் பாதுகாக்க
தயாராக இருங்கள் என்பது மட்டுமே என்
உலகத்திற்கான எச்சரிக்கை!

Tuesday, March 20, 2012

அன்றும் இன்றும்........

அன்று...
எரிக்க புகைக்கும் விறகு
எரியூட்டும் எரிபொருள்....
ஏழைத் தாயின் கண்ணீர்...!
இழுத்து ஊதி.... ஊதி ஊதி...
இன்னமுது படைக்கும்
ஏழையின் சோற்றுப் பானை
சிரிக்கும்....
வெந்ததாய் வெளிவந்து...!

இன்று...
குறைவாய் நேரம்
குக்கர் வாய் இறுகும்...
அரிசி கலப்பட வேதிப்பொருள்
அலச நேரமின்றி...
அவசர சமையல்....!
மூடி மூச்சிரைக்கும்
குக்கருக்கு "மாரடைப்பு"..!
காப்பாற்ற விசிலடிக்கும்.
"உள்ளுக்குள்"  மூடி மறைக்கும்
"நாகரீகச் சமையல்". 

அன்று
உழைப்பின் மிகுதி
பிழைப்பின் தகுதி.
வாழ்வின் நித்திய
கடமையில் நிறைவேறும்
ஆசனங்கள்... அத்தனையும்..!
வியாதியின்றி ஆயாவும்...
மகளும், மருமகளும் ஆனந்த
ஆர்ப்பரித்தார்கள்.

இன்று..
தும்மல், சலம், இறுமல்,
எல்லாமும் மருத்துவ மனையில்..!
இருப்பிடம் தற்காலிகம்.
மருத்துவமனை வாடகை வீடு...!
கண்டிப்பாய் பிரசவம் "அறுவை"...!
அறுவை என்பதனாலே....
அளவோடு பிள்ளை...!
தலைவலிக்கு போய்...
தாங்கமுடியா நெஞ்சுவலி...!
வேண்டா விருந்தாய்..சில வியாதி.
இலவச இணைப்பாய்... சில வியாதி.
சொத்தை எழுதிக் கேட்கும்
"நோய்ப் பரப்பு மையங்கள்"...
 

Saturday, March 10, 2012

கோலாட்டம்


போதக முகத்தோனே
பேரன்னை புதல்வோனே!
ஏரம்ப நாயகனே
கோட்டுமலை பெரியோனே!


பொதிகைமலை பெரியோனே
அகத்திய நாயகனே
குறுந்தடிக் கூத்தாட வந்தோம்
களம் வந்து காத்திடய்யா!!


தந்தகித்தோம் தரிகிடத்தோம்
தத்தித்தோம் தரிகிடத்தோம்!
தந்தகித்தோம் தரிகிடத்தோம்
தத்தித்தோம் தரிகிடத்தோம்!
ஏலேலோ ஆட்டமாடி
ஏலேலந்தம் பாடவந்தோம்!
எழிலான  ஏழு(சக்கரம்)தேசம் 
இறங்கி நாமும் ஓடிவந்தோம்!!


அருமனை அங்காளம்மா
அழகாக பெத்தபுள்ள!
கடம்பங் குச்செடுத்து 
கழியாட்டம் ஆடவந்தோம்!!
கைக்கொரு கழிகொண்டு
எதிராக சோடிபோட்டு!
சித்தர் கூட்டக் கலையிதையே
சிறப்பாக ஆடவந்தோம்!!


தகுதியான தமிழினந்தான்
தரணி போற்றும் நல்லினந்தான்
தகுதியான இக்கலையைக்
குறுந்தடி சிலம்பமென்பார்.

சீதவெற்றம் குச்செடுத்து
சிங்கார உடையுடனே!
சித்தர் கூட்ட குலம் விளங்க
கூட்டமாக ஆடவந்தோம்!!


கொரண்டிக் கழிகொண்டு
தட்டித்தட்டி ஆடயிலே!
கருப்பன் சாமி சலங்கை போல
கலகலன்னு ஒலிக்குதய்யா!!
மாடனுக்கும் இயக்கிக்கும்
வரலாறு சொல்லிவந்தோம்!
வக்கனையா பாட்டெடுத்து
வரிசை போட்டு ஆடிவந்தோம்!!


முடவாட்டுக் கிழங்கை நல்லா
பக்குவமா கிளர்ந்தெடுத்து!
பாபநாசம் உச்சியிலே
பாங்காக வாசம் செய்தோம்!!


அகத்திய ஆசானவர்
தலையேத்தி தந்தபாடம்!
கணுக்கால் சதிராட
அடவுகட்டி ஆடிவந்தோம்!!
உடும்பின் தோலெடுத்து
உலர்ந்து போனபின்னே!
சுட்டெடுத்த மண்பானை
வாயில்தான் கட்டிவச்சோம்!!


கட்டிவச்ச பானையத
உடுக்கக் கட்டை என்போம்!
அதில் வந்த இசையோடு
அழகாக ஆடிவந்தோம்!!


ஒருகையில் கழிஎடுத்து
மறுகையில் துணிய கட்டி!
வட்டமிட்டு ஆடிவந்த
ஒத்தைக்கழி கோலாட்டம்!!
கைக்கொரு கழிஎடுத்து
முன்நெற்றி மண்பார்க்க! 
வளைஞ்சு நெளிஞ்சு ஆடிவந்த
 குறுந்தடிக் கோலாட்டம்!!


உத்தரம் ஒன்னு செஞ்சு
பலவண்ண துணிகள் கட்டி!
வலக்கையில் கழிஎடுத்து
இடக்கையில் துணி பிடித்தோம்!
வட்டமாக கூடிநின்னு
வந்த இசைக்கேற்ப!
கோலாட்டம் அடிக்கையிலே
துணிகளில் பின்னல் விழும்!!


ஆடிவந்த திசைக்கிப்போ
எதிராக அடுத்தகுழு!
நேரெதிரா ஆடயிலே
விழுந்த பின்னல் அவிழ்ந்துவிடும்!!


அழகான இந்த ஆட்டம்
கவர்ந்திழுக்கும் ஆட்டமய்யா!
இதற்கான பெயரதுவே
பின்னல் கோலாட்டம் என்பார்!! 

தாண்டியா என்பதெல்லாம்
தானாக வந்ததல்ல!
எம்கலைய பார்த்துதானே
தருவித்த கலையப்பா!!


'கால்களுக்கும்" "கை"களுக்கும்
ஒருசேர பணிகொடுத்து!
அழகாக ஆடியது
கனவாக போச்சுதய்யா!!
சின்னமக்கா பொன்னுமக்கா
சிங்கார கண்ணுமக்கா!
சீரான இக்கலைய
சீரழிக்க வேணாமய்யா!!


break னு சொல்லிக்கிட்டு
நீங்க ஆடும் ஆட்டமெல்லாம்
குறுந்தடிக் கோலாட்டம்
முன்னே எங்கு நிக்குமையா?????

தோளிலே கைபோட்டு
தோழனென இல்லேனாலும்!
கூனிப்போன எங்களைத்தான்
கோமாளி ஆக்காதய்யா!!

ஆன்மீகம் சொல்லும் ஆட்டம்
அறிவறிந்து ஆடும் ஆட்டம்
வழியறிந்த சித்தர் கூட்டம்
வாசியேற ஆடும் ஆட்டம்


தங்குதற்கு "காரவீடு"
தகுதியா இல்லேனாலும்!
தரணியில சித்தர் ஆட்டம்
தரம் தாழ்ந்து போகலய்யா!!

அடுத்த சிவ ராத்திரியில்
அழகாக ஆண்களுமே
ஆடித்தான் காட்டப்போறோம்
அங்கவந்து பாருமையா!!!!!