![]() |
எப்படி இருக்கும்
முதுமை
இறப்பை எதிர்நோக்கிய
தனிமை?
அனாயாசமான
அனிச்சை சுவாசம்
பிரயாசையாகிப் போகுமோ? - மூச்சு
இழுக்கவும் விடவும்
முயற்சி தேவைப்படுமோ?
ஓடியாடியது போதுமென
ஓய்ந்திருக்கத் தோன்றுமோ ?- உடல்
ஒவ்வோர் இடத்திலும்
விட்டுவிட்டு வலிப்பது
பழகித்தான் போகுமோ?
நடக்க முடியாமல்
உட்கார்ந் திருக்க விரும்புமோ?
இருப்புக் கொள்ளாமல் - மனம்
படுத்துறங்க நாடுமோ?
படுக்கை முட்களாகி
புரட்டிப்புரட்டிப் போடுமோ?
உறக்கம் இமைக்கு வெளியே
விளையாட்டுக் காட்டுமோ?
வாழ்ந்ததெல்லாம்
விழித்திரையில்
வரிசையாகத் தோன்றுமோ? - வாழ்ந்த
வாழ்க்கை வந்து நின்று
பரிகாசம் செய்யுமோ?
பார்வை மங்கிப்போய்
பரிச்சயம் பிழையாகுமோ? - நில்லாமல்
அலைபாய்ந்த விழியிரண்டும்
நிலைகுத்திப் பார்க்குமோ?
குழந்தைகளின் ஆரவாரம்
கூச்சலென வதைக்குமோ?
சப்தம்கூட்டிப் பேசச்சொல்லி – கை
காதுமடல் தாங்குமோ?
சுமந்து சென்ற கால்களிலும்
சுணக்கம்தான் நிலைக்குமோ? - இனி
மூன்றாம் காலொன்று
முதற்கையில் முளைக்குமோ?
மறுமையை மறந்து மனம்
மருந்துகளை நாடுமோ? - வெறுத்து
ஒதுக்கிவைத்தச் சொந்தபந்தம்
ஒன்றுகூட ஏங்குமோ?
பயணச் சுமைதனிலே
பாவங்கள் கூடிடுமோ ?- இல்லை
மரண நினைப்பு மிகுந்து
பயம் வந்து சேருமோ?
எப்படி இருக்கும்
முதுமை - உறுதியாகிவிட்ட
இறப்பை எதிர்நோக்கி நிற்கும்
ஒருமை?
1 comment:
Thank s for showing the future however this going to happen to all now this letter is visual (funny) but soon this will be real (painy) so let me be prepared to things happen
Post a Comment