
விண்ணையும் மண்ணையும்
விளைவித்தவனுக்கு இன்று
விசேட பூஜையாம்..
வரவேண்டும் என்ற நண்பர்கள்
விருப்பமில்லை என்ற எனை
வருத்தி வரவழைத்தார்கள்..
தலைகுளித்து தளர உடையணிந்து
முகம்நிறைய வெள்ளைப் பூச்சிட்டு
முன்னால் கிளம்பியவர்களைத் தடுத்து
வினவினேன் - "கடவுளைக் காண
வேடமிட வேண்டுமா? " என்று..
அதிரும் சிரிப்புடன் சொன்னார்கள்
"அடையாளம் தெரிய வேண்டாமா?"
யாருக்கு என்றுதான் தெரியவில்லை..!!
அர்ச்சனைத் தட்டு வேண்டாமென்றதும்
அலட்சியமாய்ப் பார்த்தார் கடைக்காரர்..
அடுத்த மதமென்று எண்ணியிருப்பாரோ??
மனனம் செய்த மந்திரங்களை
மொழிபெயராது பொழிந்தார் அர்ச்சகர்..
புரியாத மொழியில் புலம்புகிறாரா?
புரியப்போவதில்லை என்று திட்டுகிறாரா?
பயபக்தியுடன் கேட்டு நின்ற
பக்தர்களைக் காணப் பாவமாயிருந்தது..
நம்மைப்பற்றி கடவுள் அறிய
நடுவிலொருவனின் தரகு தேவையா?
கைகளில் மின்னும் மோதிரமும்
கழுத்தில் சொலிக்கும் சங்கிலியும்
காணாது என்று காணிக்கையிடுமாறு
கறாராய்க் கடுகடுத்தார் அர்ச்சகர்..
அடுத்தடுத்து நாங்கள் கும்பிட்ட
அத்தனை கடவுளுக்கும் தனித்தனியே
யார்யாரோ பரிசுகள் அளித்திருந்தனர்..
ஆண்டவனுக்கு கொடுத்த அன்பளிப்புகளில்
அவரவரின் ஜாதியும் ஒட்டிக்கொண்டிருந்தது..
பாவம் தொலைக்க வருகிறோமா
பாவங்கள் பெருக்க வருகிறோமா
புரியவில்லை..
திரளான கூட்ட நெருக்கடியில்
தூரத்தில் நின்றே தரிசித்துவிட்டு
திரும்புகையில் சற்றே நின்று
இன்னும் ஒருமுறை பார்த்தேன்..
இறைவன் சிரித்ததைப் போலிருந்தது..!!
வெளியில் வந்த நண்பர்கள்
வேடிக்கையாய் அலுத்துக் கொண்டனர்..
"கடவுளைக் கண்குளிர பார்க்கமுடியவில்லையாம்?".
3 comments:
SUPER MASTER..........
MASTER,
The inner truth in this passage is forcing my mind to some new thought master..
thannambikkaiyai marandhu vittu
than nambikkai muluvadhaiyum,
kadavulin kaalil vittu
kaiyendhi nirporai kandaal.........?????
Post a Comment