மாஸ்டர், துரோகங்களை எப்படி ஜீரணிப்பது? ஆண் அழக்கூடாதா? இந்த துரோகங்களை எல்லாம் மறந்து எப்படித் தியானத்தில் ஈடுபடுவது? ஆசைதான் துன்பத்திற்குக் காரணமென்றால் ஆசைப் படாமல் இருக்க முடியுமா?.....அக்சய் உலக ஆசைகளுடனேயே எல்லா உலக வசதிகளையும், போகங்களையும் பெற்றுப் பற்றற்று வாழ்வது என்ற கருத்து மிகவும் புதியது. இது சித்தர் போகருடையது. நம்முடைய உறவுகளும், நண்பர்களும், நம்மிடம் வேலை செய்பவர்களும் நமக்கு இழைக்கின்ற துரோகங்களாலும், ஏமாற்றங்களாலும் நமது மனம் பக்குவப்படுகிறது என்கிறார் போகர்.
அது மிகவும் உண்மை..அக்சய்!
சில அஹோரிகள் உடல் முழுவதும் ஊசியைக் குத்திக் கொள்கிறார்கள். சிலர் குத்திக்கிழிக்கின்ற முள் படுக்கையின் மீது படுத்துப் புரளுகிறார்கள். சிலர் இரும்பிலான ஆணிகளை விழுங்கிக் காட்டுகிறார்கள். இந்த யோக சாதனைகள் எல்லாம் உடலின் புறத்தோற்றம், அன்னமயகோசம் பதப்படுத்தப்பட்டு, பக்குவம் பெற்றுவிட்டதைக் குறிக்கின்றன. கடும் பயிற்சிகளைத் தாங்கிக் கொள்வதன் மூலம் சரீரம் யோகம் செய்வதுபோல், பிறர் நமக்கு இழைக்கும் துன்பங்களை, துரோகங்களைத் தாங்கிக் கொள்வதன் மூலம், மனம் பயிற்சி பெறுகிறது,உள்ளம் தவம் செய்கிறது. ஆரம்பத்தில் சிறிய துன்பமும், துரோகமும் கூட மலையளவு பெரிதாகத் தோன்றுகிறது. அது தொடரத் தொடர மனம் மரத்துத் தவத்திற்குத் தயாராகிறது.. செல்கிற பாதையில் எதையும் எதிர் கொள்கிற சக்தி மனதிற்கு வந்துவிடுகிறது. துன்பங்களாலும், துரோகங்களாலும், சுற்றத்தைக் கற்றுக் கொண்டவன் மெத்தப்படித்த அறிஞனை விடச் சிறந்த ஞானியாகி விடுகிறான். ஆரம்பகாலத் துன்பமும், துரோகமும் அழுகையை உண்டாக்குகிறது. "ஆண்பிள்ளை அழக்கூடாதாம்".... இது அகந்தை உள்ளவவன் கூறியதாகவே எனக்குப் படுகிறது. "அழத்தெரியாதவன் ஆன்மீகத்திற்கிற்கு அருகதையற்றவன்" என்கிறார் பகவான் ஓஷோ. தொடர்ந்த துன்பங்களாலும், துரோகங்களாலும், மனம் பரி பக்குவ நிலை அடைகிறது, கண்ணீர் விடுவதைக்கூட மறந்து போய், வெறுப்பும் விரக்தியும் கலந்த சிரிப்பு வருகிறது. மன மரணம் இயல்பாகவே நிகழ்கிறது. இதனால்தான் "துன்பப்படுகிறவன் பாக்கியவான் பரலோக சாம்ராஜ்யம் அவனுக்குரியது" என்றார் யோகி இயேசு. துயரங்களில் புதைந்து எழுந்தவனுக்கு எந்தத் துயரம் வந்தாலும் சிரிப்பது பழக்கமாகி விடுகிறது. இதுவே ஞானம் வந்துவிட்டதென்பதற்கு அடையாளம். எங்கோ படித்த ஞாபகம்!ஒரு மனிதனுக்கேற்பட்ட துயர அனுபவமாம் இது! ஒரே நேரத்தில் வரும் துயரங்களின் வரிசையைப் பாருங்கள். பசு மாடு கன்று போட்டதாம். அடாத மழை பெய்ததாம். வீடு விழுந்து விட்டதாம். மனைவிக்குக் கடுமையான நோய் வந்ததாம். வேலைக்காரன் இறந்து போனானாம். வயலில் ஈரம் இருக்கிறது. விதைக்க வேண்டுமென்று ஓடினானாம். வழியில் கடன்காரர்கள் மடியைப் பிடித்து இழுத்தார்களாம். “உன் மகள் இறந்து போனாள்” என்று சாவுச் செய்தியோடு ஒருவன் வந்தானாம். இந்த நேரத்தில் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து சேர்ந்தார்களாம். பாம்பு அவனைக் கடித்துவிட்டதாம். நில வரி வாங்க அதிகாரிகள் வந்து நின்றார்களாம். குருக்களும் தட்சிணைப் பாக்கிக்காக வந்திருக்கிறாராம். (ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச் சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத் தள்ளவொணா விருந்துவர சர்ப்பந் தீண்டக் கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் குருக்கள்வந்து தட்சணைகள் கொடு என்றாரே!) ஒரே நேரத்தில் இவ்வளவு வந்து சேர்ந்தால் ஒருவனுக்கு அழுகையா வரும்? இவ்வளவு துன்பங்களையும் சந்தித்த பிறகு, ஒருவன் மனம் மரத்துப் போகும். மரத்துப்போன நிலையில், துன்பங்களைக் கண்டு பிடிக்காமல் அலட்சியப்படுத்தத் தோன்றும். மன மரணம் இயல்பாகும். “அச்சமில்லை அச்சமில்லை” என்ற பாரதியின் தைரியம் நமக்கும் வந்துவிடும். பார்ப்பதெல்லாம் பரம்பொருளாகத் தோன்றும்; பேராசை அடிபட்டுப் போகும். தீக்குள் விரலை விட்டாலும் நந்தலாலனை தீண்டியதாகத் தோன்றும். எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா? என எக்காளமிடலாம். பல ஆண்டுகள் இயம, நியமங்களுடன் யோகம் செய்து பெறுகிற ஞானத்தை விட இந்த ஞானம் அழுத்தமானது; ஆழமானது; உண்மையானது; உறுதியானது. துரோகங்களும், துன்பங்களும்தான் ஒரு மனிதனைப் பக்குவம் பெற்ற ஞானியாக்குகின்றன. ஞானம் என்பது துரோக, துன்ப அனுபவங்களிலிருந்துத் திரட்டப் பெற்ற தொகுப்பு நூல் என்று யாராவது என்னிடம் கூறினால் அதற்கு வழிமொழிகிற முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். துரோக, துன்ப அனுபவங்களே உண்மையான பட்டறிவை உண்டாக்குகின்றன. வயிற்றிற்கு ஆகாத உணவைச் சாப்பிட நேரிடுகிறது. வயிறு கலாட்டா செய்கிறது. பேதியாகிறது, வாந்தியாகத் தள்ளுகிறது. மருத்துவர் உதவியுடனோ, உதவியின்றியோ சரியாகிப் போகிறது. ஆனால் மனத்திற்கு ஏற்காத பல விஷயங்களை உள்ளே செலுத்தி, இவற்றை ஜீரணிக்காமல் அல்லது வெளித்தள்ளாமல் நிரந்தர குப்பைத் தொட்டிபோல் மனத்தை ஆக்கிக் கொள்கிறோம். மகிழ்ச்சியான கணங்களிலெல்லாம் இந்த அடக்கி வைத்தத் துரோகத் துன்பங்களைக் கவனத்திற்குக் கொண்டு எத்தகைய மகிழ்ச்சியையும் துடைத்து எடுத்துவிடுகிறோம். நிரந்தரக் கவலைகளை ஜீரணிப்போம். மாற்றமுடியாத கவலைகளை ஏற்றுக்கொள்ளுவோம். ‘மாற்றங்களைத்’ தேடுவோம். மிகப் பெரிய இழப்பா? கீதையின் தத்துவத்தை நம்புவோம். ‘என்ன கொண்டுவந்தோம் இழப்பதற்கு’ இழந்த உறவா? நட்பா? புதுப்பிப்போம்.
‘உறவுகள் துரோகம் பண்ணிட்டாங்க" என்ன செய்யலாம் என்கிறீர்களா அக்சய் ? என்ன செய்வது, நாம் உறவுகளைத் தேர்ந்தெடுத்த விதம் அப்படி . இது கவலை அல்ல! அறியாமையால் செய்த தவறுக்குத் தரப்பட்ட விலை!
சிறு நரி துரோகம் செய்ததற்காகச் சிங்கங்கள் சோர்ந்து விடலாகாது. இந்த துரோகங்களும், துன்பங்களும் குருமார்கள் நமக்குக் கற்றுக் கொடுப்பதற்காக நடத்தியப் பயிற்சிப்பட்டறை எனக் கொள்வோம்.
நமது புகைவண்டி போய்க்கொண்டே இருக்கட்டும். ஏறுபவர்கள் ஏறிக்கொள்ளட்டும். இறங்குபவர்கள் இறங்கிக் கொள்ளட்டும். நமது இலட்சியப் பயணத்திற்கு குருமார்கள் துணை இருப்பார்கள். கல்லான நெஞ்சே கவலைக் கருத்தாகிப்பொல்லாப் பவக்கடலில் போகாதே-எல்லாம்செலக்குமிழி என்றுநினை செம்பொனம் பலத்தைக்கலக்கமறப் பார்த்தே கரை. - பட்டினத்தார்
1 comment:
மிக அருமை. விருப்பு வெறுப்பற்று இருப்பதன் முக்கியத்துவத்தை மிக தெளிவாக உவமைகளோடு விளக்கியதற்கு!
போக சித்தரின் கருத்து மிக புதுமை. அனைத்தையும் பெற்று பற்றற்று இருப்பதற்கு மிகவும் பக்குவமடைந்த மனம் வேண்டுமென்பதில் சந்தேகமில்லை.
Post a Comment