Total Pageviews

Tuesday, September 11, 2012

பாரதியின் சுப்ரபாதம்.....








அதிகாலை நேரத்தில் ஆளற்ற, நிர்மானுஷ்யச் சூழலில் ,...உருகிய பனிக்கட்டிபோல் குளிர்ந்த தண்ணீரில்,அந்த ஊற்றில் மூழ்கி முங்கி குளிக்கும் சுகானுபவம் பாரதியைப் பரவசப்படுத்தியது. இந்த அனுபவத்தைப் பெறக் காரணமாக இருந்தவர் ....பாரதியால் பாசம் பொங்கப் பொங்கக் ‘குவளைக் கண்ணன்’ என்று அழைக்கப்படுகிற  குவளையூர் கிருஷ்ணமாச்சாரி தான்..



ஊருக்கு மேற்கே தியாகராஜப் பிள்ளை என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் நீறுற்று ஒன்று இருக்கிறது. அதனால் அதைத் தியாகராஜப் பிள்ளை மடு என்றே எல்லாரும் சொல்வார்கள். என்றைக்குமே வற்றாத ஊற்றுப் பள்ளம். கண்ணாடி மாதிரி நீர். விடிவதற்கு முன்னால் ஐந்து மணிக்கே போனால் கூட்டம் இராது. பிறர் தொந்தரவு இல்லாமல் ஆனந்தமாய் வேண்டிய மட்டும் குளித்துக் கொண்டிருக்கலாம். தினமும் அங்கே போய்க் குளித்துவிட்டு வருவோமா? ஆனால் நம் வீட்டிலிருந்து குறைந்த பட்சம் இரண்டு மைலாவது இருக்கும்” என்று திடீரென ஒருநாள் பாரதிக்கு ஆசைகாட்டினார், குவளைக் கண்ணன்.




இயற்கையுடன் ஏகாந்தமாய் ஒன்றிப் போவதில் பாரதிக்கு உள்ள ஆசை அவர் அறிந்ததுதான். அவர் எதிர்பார்த்தது போலவே பாரதியும் ஆசையுடன் துள்ளி எழுந்தார்.



“அட, அப்படியா? இதை ஏன் முன்பே சொல்லவில்லை? நாளை யிலிருந்தே அங்கு போகத்தொடங்கிவிடுவோம். விடிகாலை நாலு மணிக்கெல்லாம் வந்துவிடு; போகலாம்” என்றார், பாரதி, உற்சாகம் பொங்க.



மறுநாள் அதிகாலை சொன்னபடியே சரியாக நான்கு மணிக்குக் கவிஞர் வீட்டுக்கு வந்து அவசரமாகக் கதவைத் தட்டினார், குவளை. ‘யாரது’ என்று தனக்கே உரித்தானக் கம்பீரகுரலில் அதட்டல் போட்ட வாறு கதவைத் திறந்தார் பாரதி. எதிரே குவளைக் கண்ணன் நிற்பதைக் கண்டதும் முகம் மலர்ந்தார்.



”போவோமா, மடுவுக்கு?” என்றார், குவளை.



கவிஞர் அட்டகாசமாகச் சிரித்தார்.



”எதற்குச் சிரிப்பு? இப்போ என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படிச் சிரிக்கிறீர்கள்?” என்று குழப்பத்துடன் கேட்டார்,குவளை.



”திருப்பாவையில் ஆண்டாள் ‘அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செயும் எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்’ என்று பாடிக் கண்ணனை எழுப்பினாள். இங்கே என்னடாவென்றால் கண்ணன் வந்து என்னை எழுப்பிக் குளிக்கக் கூப்பிடுகிறான்! சிரிப்பு வராதா?”



இப்போது குவளையும் சேர்ந்து சிரித்தார்.



”சரி, நேரமாகிறது, புறப்படுங்கள். அப்புறம் பொதுமக்கள் வரத்தொடங்கிவிடுவார்கள்.”



இருவருமாக மடுவை நோக்கி நடந்தார்கள்.



அதிகாலை இருள் இன்னும் விலகவில்லை. ஆனால் விடியல் அரையிருட்டாக அனைத்தையும் நிழல் ரூபமாய்ப் புலப்படச் செய்தது. ஊருக்கு வெளியே வந்ததுமே மண்பாதையின் இருபுறமும் வயல்வெளிகளும் மரங்களும் சுற்றுச் சூழலுக்கு எழிலூட்டின. மென்மையாக வீசிய இளங் குளிர் காற்று உடலை வருடி மெய்சிலிர்ப்பூட்டியது.



கவிஞர் மடுவில் இறங்கிக் கழுத்தளவு நீரில் ஆசை தீரக் குளித்தார். வெகு நேரம் நீரில் மூழ்கிக் கிடந்தபின் பொழுது விடியத்தொடங்கிவிட்டதால், குவளையின் அவசரத்தைத் தாங்க மாட்டாமல் மனமின்றியே கரையேறினார். சொட்டச் சொட்ட நனைந்த உடலின் ஈரம் அகற்றாமலே வீடு திரும்பியவர், இனிமேல் தினப்படி தியாகராஜப் பிள்ளை மடுவில்தான் குளியல் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்.



அடுத்த நாளும் குவளை சரியாகக் குறித்த நேரத்திற்கு வந்து கவிஞரை மடுவுக்கு அழைத்துச் செல்லத் தவறவில்லை. ஆனால் மூன்றாம் நாள்தான் ஆளைக் காணோம்!



வருவார் வருவார் எனக் காத்திருந்து சலித்த பாரதி, அந்த அதிகாலைப் போதில் குவளைக் கண்ணனின் வீட்டிற்கே சென்று வாசற் கதவைப் படபடவென்று தட்டி, ’கிருஷ்ணா’ என்று உரக்கக் குரலும் கொடுத்தார்.



கவிஞர்தான் தன்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார், என்று பரபரப்படைந்தார், குவளை..



”யாரு வந்து இப்பிடிக் கதவை ஒடைக்கற மாதிரி தட்டறா, பொழுது விடியறதுக்கு முன்னாடியே” என்று திகைத்தார், குவளையின் தாயார்.



”நான் அடிக்கடி சொல்வேனே, அந்த சுதேசிக் கவி சுப்பிரமணிய பாரதிதான் வந்திருக்கார் போலிருக்கு அம்மா” என்றார், குவளை மகிழ்ச்சியுடன்.



”அட, அப்படியா,” என்று ஆவலுடன் கதவைத் திறந்து பாரதியை வரவேற்றார் அம்மையார். பாரதி வயதில் மிகவும் குறைந்த இளைஞராகத் தோற்றமளித்ததால் அம்மையாருக்கு அவரையும் தம் மகனாகவே எண்ணத் தோன்றியது.


”ஏண்டா கிருஷ்ணா, பாரதி நன்றாகப் பாடுவான் என்று சொன்னாயே?      எங்கே ஒரு ஸுப்ரபாதம் பாடச் சொல்லு கேட்போம்., இநதக் காலைப் போதுக்குக் கேட்கச் சுகமாயிருக்கும்” என்றார், அம்மையார், உரிமையுடன்.

பாரதி மனசுக்குள் சிரித்துக் கொண்டார்.


‘இந்த அம்மையாருக்கு என்ன சொல்வது? சொன்னாலும் எந்த அளவுக்கு இவரால் புரிந்துகொள்ள முடியும்?’.......







”ஸுப்ரபாதம் என்றால் என்ன” என்று குறும்புப் புன்னகையுடன் கேட்டார், பாரதி.




“என்னடா இது! ஸுப்ரபாதம் என்றால் என்னன்னு கேக்குறானே இந்தப் பிள்ளையாண்டான்! அப்புறம் என்ன பெரிய பாட்டுக்காரன் இவன்? எப்பப் பார்த்தாலும் பாரதி, பாரதின்னுண்டிருக்கையே, பூ, இவ்வளவுதானா ஒன்னோட பாரதி?–அம்மாவின் குரலில் ஏளனம் சிறிது தூக்கலாகவே இருந்தது. ஆனால் கவிஞர் அதைப் பொருட்படுத்தவில்லை. சிரிப்பு மாறாமல் நின்றார்.



“அம்மா, நீ நினைக்கிற மாதிரி இவர் மற்றவர்கள் எழுதி வெச்ச பாட்டுகளைப் பாடுகிற பாகவதர் இல்லே, கேட்டதும் ஒரு ஸுப்ரபாதம் பாடறதுக்கு!. இவராகவே பாட்டுக் கட்டி, அதை அற்புதமாகப் பாடறவர். புரிஞ்சுதா? சரி. நாங்கள் மடுவுக்குக் குளிக்கப் போறோம். கதவைச் சாத்திக்கோ” என்று கவிஞரை அழைத்துக்கொண்டு புறப்பட்டார், குவளை.



“அப்ப்டின்னா தானே ஒரு ஸுப்ரபாதம் இட்டுக்கட்டிப் பாடட்டுமே பெருமாள் மேல! ஒண்ணுக்கு ரெண்டா இருக்குமோல்லியோ” என்றவாறு வாயிற் கதவைத் தாழிட்டுக் கொண்டார், குவளையின் தாயார்.



அந்த அம்மையார் கடைசியாகச் சொன்னது கவிஞரின் மனதைக் குடையத்தொடங்கியது-‘அப்படின்னா ........நானே ஒரு ஸுப்ரபாதம் இட்டுக்கட்டிப் பாடட்டுமே…’



“ஸுப்ரபாதம் என்றால் என்ன” என்று குவளையிடம் மீண்டும் வேண்டுமென்றே கேட்டார், பாரதி. காசியில் விச்வநாதருக் கென்று உள்ள ஸுப்ரபாதத்தையும் சென்னையில் வெங்கடேசப் பெருமாள் ஸுப்ரபாதத்தையும் பாரதி கேட்டிருக்க மாட்டாரா, என்ன?



“ஸுப்ரபாதம் என்றால் திருப்பள்ளி எழுச்சி” என்றார், குவளை, சுருக்கமாக.



“யாருக்குத் திருப்பள்ளி எழுச்சி?”



“இதென்ன கேள்வி? பெருமாள் கோவிலில் மஹா விஷ்ணுவுக்கு. சிவன் கோவில் என்றால் பரம சிவனுக்கு!”



“எங்கே, உனக்குத் தெரிந்த ஸுப்ரபாதம் ஒன்று சொல்லு கேட்போம்” என்று சிரித்தார், கவிஞர்.



பாசுரங்கள் பலவும் மனப் பாடமாய் வைத்திருந்த குவளை அதேபோல் வெங்கடேச ஸுப்ர பாதத்தையும் அறிந்திருந்ததால் உடனே அதனைப் பாடலானார். குரல் வளம் இல்லாவிட்டால் என்ன? குழந்தையுள்ளத்தில் ஆழ வேர்கொண்ட தெய்வ நம்பிக்கை இருக்கிறதே அது ஒன்றே போதாதா?



“கண்ணா, ஸுப்ரபாதம் என்றால் புனிதமான புலர்காலைப் பொழுது என்றுதான் நேரடியான அர்த்தம். காலைப் போதில் எழுவது முக்கிய பொறுப்பாவதால்... கடன், ஆதலால் தமிழில் ஸுப்ரபாதத்தைத் திருப்பள்ளி எழுச்சி என்கிறோம். ஆனால் சதா சர்வ காலமும் தூங்காமலேயே அறிதுயிலில் புன்முறுவலுடன் படுத்திருக்கிற திருமாலுக்கும் இமைப் பொழுதும் சோராத கூத்தபிரான் சிவனுக்கும் திருப்பள்ளி எழுச்சியா? பாரேன், ...... இந்த மனுஷ்யர்களின் மனப்போக்கை; பக்தி முற்றி, தெய்வத்தையும் தன்போலொரு மனிதனாகவேப் பாவிக்கத் தோன்றிவிடுகிறது. 


தான் வழிபடுகிற தெய்வத்துக்குக் காலையில் கண்விழிக்கச் செய்வது தொடங்கி, இரவு பள்ளியறைக்கு அனுப்பி வைப்பதுவரை எல்லாம் செய்தாகிறது. பக்தியில் மூழ்கிவிட்டால் அப்புறம் தான் வேறு, தெய்வம் வேறில்லை. தன்னைப்போலவே தெய்வமும் என்கிற நிச்சயம் மனிதனுக்குத் தோன்றி விடுகிறது, மனித வடிவில் தெய்வத்தைக் கண்டு மனிதனுக்குள்ள உணர்வுகளெல்லாம் தெய்வத்திற்கும் உண்டென உபசாரம் செய்யத்தோன்றுகிறது! 

இந்த விஷயத்தில் ஆண்டாள் விவரம் தெரிந்தவள். அவளும் நந்தகோபனையும் பலராமனையும் எழுந்திருக்கச் சொல்கிறாள்தான். தாயார் யசோதையை வேறு அழைத்து அவர்களை எழுப்பிவிடவும் சொல்கிறாள், ஆனால் ‘எல்லே இளங் கிளியே இன்னம் உறங்குதியோ’ என்று அவள் கூடுதலும் கூவியழைத்து எழுப்புவது தன் தோழிமார்களையும் உறவுமுறைப் பெண்களையும்தானே, தவிர இறைவனை எழுப்பவில்லை .....தூங்குபவன் இறையாக மாட்டான் அல்லவா” என்றார், கவிஞர்.


“நீங்கள் சொன்னால் அது சரியில்லாமல் இருக்குமா” என்றார், குவளை, தேவதா விசுவாசத்துடன்.



அதன் பிறகு .பாரதி ஏதும் பேசவில்லை. ஏதோ யோசனையாய் நடந்தார். அன்று ஆசையாய் மடுவில் இறங்கிய போதிலும் நீராடு வதில் அதிக ஈடுபாடு காட்டாமல் தம் எண்ண அலைகளுக்குள்ளாகவே மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தார்.



மேலும் இரண்டு தினங்கள் அவர்கள் தியாகராஜப் பிள்ளை மடுவுக்குக் குளிக்கச் செல்வது தொடர்ந்தது. ஆனால் கவிஞர் அதிகம் பேசாமலே வழி நடந்தார்.



அடுத்த நாள் காலை மடுவுக்குச் செல்லத் தாமே மறுபடியும் குவளையின் வீட்டுக்கு வந்துவிட்டார் பாரதி, 


, “கண்ணா, ஸுப்ரபாதம் பாடச் சொன்னார் அல்லவா உன் தாயார்? சுயமாக இட்டுக்கட்டிப் பாடவும் சொன்னார். இப்போ ஸுப்ரபாதம், அதாவது நீ சொன்னாயே, திருப்பள்ளி எழுச்சி, அது உடனடியாகத் தேவைப்படுவது விஷ்ணுவுக்கும்,சிவனுக்குமல்ல மாறாக நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்துள்ள நமது பாரத அன்னைக்குத்தான்.அவள் விழித்தெழுந்துகொள்வதோடு, அடிமை வாழ்வே பரம சுகம் என்று மயங்கிக் கிடக்கிற தனது விவரங் கெட்ட பலப்பல பிள்ளைகளையும் தட்டி எழுப்பியாக வேண்டும். ஆகையால் இதோ, நான் பாடுகிறேன், பாரத மாதாவுக்கு ஒரு திருப்பள்ளி எழுச்சி; அம்மா, நீங்களும் கேளுங்கள்” என்றார்,உற்சாகம் ததும்ப




”பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்




புன்மை யிருட்கணம் போயின யாவும்.



எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி,



எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி



தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்



தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்



விழிதுயில் கின்றனை இன்னும் எம் தாயே!



வியப்பிதுகாண்! பள்ளி யெழுந்தரு ளாயே!”




என உணர்ச்சி வேகத்துடன் பாடத்தொடங்கினார், கவிஞர்.







அம்மாவும் பிள்ளையும் அவர் பாடுவதை இறுதிவரை பிரமிப்பு மாறாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.


"பாரதி" எனும் அந்த ஞானச் சித்தனை ஞாபகம் கொள்வதில் பெருமை கொள்கிறது யோக யுவ கேந்திரா....

Sunday, September 2, 2012

Saturday, August 25, 2012

கடவுள் இறந்துவிட்டார்.......




"கடவுள் இறந்து விட்டார்.நேற்று மாலைத் தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.அன்னாரது ஈமக்கிரியைகள் வரும் 16ம் தேதி கண்ணம்மாப்பேட்டைச் சுடுகாட்டில் நடைபெறும்"இடி இறங்குவது போல் அந்த செய்தி மக்களிடையே இறங்கியது.ஆரம்பத்தில் யாரும் அதை நம்பவில்லை.ஆனால் கடவுளின் உடலை மக்களின் பார்வைக்கு வைத்ததும் தான் அதை அனைவரும் நம்பினர்."ஓ"வென அனைவரும் அழுது புலம்பினர்.அவரது உடலைச் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல பெரும் கூட்டம் கூடியது.அவரது உடலைத் தகனம் செய்து முடித்ததும் பெருத்த விவாதம் மூண்டது."உலகம் இதோடு அழிந்தது" என அலறினார்கள் . "நியாயம்,தர்மம்,நேர்மை,நீதி எல்லாம் கடவுளோடு புதைபட்டு விட்டது" என ஆருடம் சொன்னார்கள் பலர்.

ஆள்வோர் கூட இதை நினைத்துக் கவலை கொண்டனர்.கடவுளுக்கு 16ம் நாள் காரியம் முடிந்த பிறகு பெரிய கலவரம் வரலாம் என அரசு எதிர்பார்த்தது. அதற்குள் புதிய கடவுளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஆள்வோர் முடிவு செய்தனர். புதிய கடவுளையும் புதிய மதத்தையும் தீர்மானிக்க ஒரு சர்வதேசக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.கடவுளைத் தேர்ந்தெடுக்கும் முன் புனித நூல் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா?கமிட்டியின் முன்பு இது தான் பெரிய பிரச்சனையாக இருந்தது.இறுதியில் கமிட்டி மெம்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜனநாயக அரசியல் சட்டமே உலகின் புதிய வேதநூலாக இருக்கும் என முடிவுசெய்தனர்.பெண்ணுரிமை,பேச்சுரிமை,சமத்துவம்,சுதந்திரம் ஆகியவை இந்த புதிய மதத்தின் கோட்பாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

"அவனவன் வேலையை அவனவன் பார்ப்பது" என்பது இந்த புதிய மதத்தின் முக்கிய கோட்பாடாக எற்கப்பட்டது. அடுத்தவனின் தனிமனித சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது மிகப்பெரும் பாவமாக இந்த புதிய மதத்தில் கருதப்பட்டது.

கடவுளாக யாரை நியமிக்கலாம் என மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டது. இறுதியில் தனிமனித சுதந்திரத்தை கடவுளாக ஏற்கலாம் என ஒருமித்த கருத்து உருவானது.ஒரே கடவுள் வழிபாடு இருந்தால் பிரச்சனை உருவாகலாம் என்பதால் சுதந்திரத்தோடு சமத்துவமும் சகோதரத்துவமும் கடவுளாகச் சேர்க்கப்பட்டு 3 கடவுள்கள் - ஒருவருக்கொருவர் சமமானவர்களாக உருவாக்கப்பட்டனர்

கடவுளின் வழிபாட்டு ஸ்தலங்களாகப் பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கும் என கமிட்டியினர் முடிவு செய்தனர்.புதிய மதத்தை அனைவருக்கும் இந்த பள்ளியில் கற்றுத்தரலாம் என முடிவு செய்யப்பட்டது. புதிய மதத்தை கட்டாயமாக்கலாமா என பெருத்த விவாதம் நடந்து இறுதியில் அதை கட்டாயமாக்குவதில்லை என முடிவு செய்தனர். தன்னை கட்டாயாமாக அனைவரும் வணங்குவதைத் தான் விரும்பவில்லை என புதிய கடவுளானத் தனிமனித சுதந்திரம் கூறிவிட்டார்.மற்ற கடவுள்களானச் சமத்துவமும்,சகோதரத்துவமும் இதையே சொன்னார்கள்.

16ம் நாள் காரியம் முடிந்ததும் மக்கள் பெரும்திரளாக கூடினார்கள். வன்முறையில் அவர்கள் ஈடுபடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் அப்படி வன்முறையில் ஈடுபடவில்லை. கட்டித் தழுவிக் கொண்டனர்.மதம்,ஜாதி,இனம் முதலிய அத்தனை வேறுபாடுகளயும் மறந்து அனைவரும் ஒருவரை ஒருவர் தழுவி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள். இனிமேல் ஜாதி மத சண்டைகளேப் பிடிப்பதில்லை என அனைவரும் சத்தியம் செய்து கொண்டார்கள்.

திடிரென்று பார்த்தால் உலகின் அனைத்து பிரச்சனைகளும் மிகச் சுலபமாகத் தீர்ந்து விட்டன. ஜாதிச் சண்டை,மதச் சண்டை முதலிய அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விட்டன. நாடுகளுக்கிடையே இருந்த பல பிரச்சனைகள் விநாடி நேரத்தில் ஒழிந்து விட்டன.வலதுசாரி இடதுசாரி அரசியல் கட்சிகள் அனைத்தும் காணாமல் போய் விட்டன.

ஆள்வோர் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். கலவரம் வருவதற்குப் பதில் உலகம் அமைதியான பூங்காவாக மாறிவிட்டது. காதல் திருமணங்கள் செழித்து வளர்ந்தன. ஆண்கள் பெண்களுக்குச் சம உரிமை தந்தனர். ஜாதி கொடுமைகள் ஒழிந்து மேல் ஜாதியினரும் கீழ் ஜாதியினரும் பெண்கொடுத்துப் பெண் எடுத்து சம்மந்திகளானார்கள். மத வேறுபாடுகள் மறைந்து மனிதர்கள் அனைவரும் ஒன்றே குலம் என வாழத்துவங்கினர். பெண்கள் சுதந்திரம் பெற்று சம உரிமை பெற்ற மனைவிகளானார்கள். பிற்போக்குச் சட்டங்கள் அனைத்தும் ஒழிந்து அவர்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையும் கிடைத்தது.

புதிய கடவுள்களை அறிமுகப்படுத்த இதுவே சரியான சந்தர்ப்பம் என ஆள்வோர் முடிவு செய்தனர். பெரும் கூட்டம் ஒன்றை கூட்டினர்."இதோ புதிய மதம்,இதோ புதிய கடவுளர்" என சமத்துவம்,சுதந்திரம்,சகோதரத்துவம் மூவரையும் அறிமுகப்படுத்தினர்."இது தான் இவர்களை வணங்கும் முறை" என சமதர்ம ஜனநாயக சட்டப்புத்தகத்தை அறிமுகப்படுத்தினர்.

மக்கள் அனைவரும் புதிய கடவுளரை வணங்க முற்பட்டனர்."வேண்டாம்" எனச் சமத்துவ கடவுள் அலறினார். "நான் உங்களை விட உயர்ந்தவனல்ல. உங்களில் ஒருவன்." என கூறினார். மேடையிலிருந்து இறங்கி மக்களிடையேக் குதித்து அவர்களை கட்டித்தழுவினார்."நான் உங்கள் சகோதரன். உங்களில் ஒருவன். என் பெயர் சமத்துவம்" என கூறினார். மக்கள் ஆர்பரித்து அவரை தழுவினர். ஆரவாரம் செய்து அவரை ஏற்றுக்கொண்டனர்.

அடுத்ததாகச் சகோதரத்துவத்தை வணங்க முற்பட்ட போது அவரும் அதை ஏற்காமல் மக்களிடையேக் குதித்தார்."நான் உங்கள் சகோதரன்.என்னை ஏன் வணங்குகிறீர்கள்?" எனச் செல்லமாக கோபித்தார்."நான் உங்களில் ஒருவன்.என் பெயர் சகோதரத்துவம்" என கூறினார். மக்கள் ஆர்ப்பரித்து அவரை தழுவினர். ஆரவாரம் செய்து அவரை ஏற்றுக்கொண்டனர்.

சுதந்திரமும் மக்களிடையே கலந்தார்."நான் சுதந்திரம்.என்னை ஏற்றுக்கொண்டால் நீங்களும் சுதந்திரம் பெற்றவர்களாவீர்கள்" எனக் கூறினார். மக்களிடையே மக்களாக இந்த மூன்று கடவுளர்களும் ஒன்று கலந்தனர். தம் வேதநூலை மக்களுக்குப் படிக்க கொடுத்தனர். கோடிக்கணக்கில் மக்கள் இப்புதிய மதங்களால் ஈர்க்கப்பட்டனர். இதை தழுவினர்.

இந்தக் கூத்தை எல்லாம் விண்ணில் இருந்தபடி கடவுள் ரசித்து சிரித்துக்கொண்டிருந்தார். இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று தானே அவர் தற்கொலை செய்தது போல் நாடகமாடினார். மனிதன் தன் பிரச்சனைகளைத் தானே தீர்த்துக்கொள்ள வேண்டும், உலகின் புதிய கடவுளாக அவன் உருவெடுக்க வேண்டும்,சாதி,மத சண்டையை அவன் நிறுத்த வேண்டும்,எதற்கெடுத்தாலும் கடவுளிடம் ஓடி அவருக்கு ஜால்ரா தட்டுவதை அவன் நிறுத்த வேண்டும் என அவர் நினைத்தார்.

அதை செய்ய சிறந்த வழி இதுதான் என அவருக்கு பட்டது. அதனால் தான் இந்த தற்கொலை டிராமாவை அவர் அரங்கேற்றினார்.

மக்கள் சிரித்து சந்தோஷமாக இருப்பதைக் கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கும் இனி உலகின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டியத் தொல்லை விட்டுப்போனது.

ரிமோட்டை எடுத்து செய்திகளைப் பார்க்கத் துவங்கினார். மதக்கலவரம்,போர், சண்டை என எதுவும் இல்லாத மானிடஇனத்தின் முன்னேற்றத்தை,பெண்ணின்னேற்றத்தை,சமத்துவத்தை,சுதந்திரத்தை மட்டுமே செய்திகளில் பார்த்த கடவுள், ஆனந்த கண்ணீர் விட்டார். சிட்டுக்குருவிகள் போல் தன் குழந்தைகள் சிறகடித்துப் பறப்பதைக் கண்ட கடவுள் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயின் மனநிலையை அடைந்து சாந்தி பெற்றார்.




ஓம் சாந்தி.....சாந்தி....சாந்தி 







posted by முத்தமிழ்

Sunday, August 19, 2012

கோகுலாஷ்டமி 2012



பொன் அந்திச் சாரலில் ......... 




ஒரு மாத காலமாகவே கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.மிக எளிமையாக ,மிக உற்சாகமாக .......புன்னகைப் பூக்களின் சிதறல்களாக இந்த விழா அமைய வேண்டும் என்ற நினைப்பும் மனதில் இழையோடிக் கொண்டிருந்தது .




கிருஷ்ண ஜெயந்திக்கு பத்து தினங்கள் முன்னதாகவே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் இருந்து ஆண்டாளும்,பெருமாளும் இராஜபாளையம் யோகா யுவ கேந்திராவுக்கு வந்து விட்டார்கள்.அவர்களுக்கு எப்படியெல்லாம் அலங்காரம் செய்வது என்று கலந்து பேசி,அதற்கான ஆயத்தங்களில் கேந்திராத் தோழியர் ஈடுபட்டார்கள். தஞ்சாவூர் ஓவியக் கற்கள் ,பொன் நிறத்தினால் ஆன சின்னக் குண்டுமணிகள் இவற்றினை ஆரங்களில் பதித்து அழகுக்கு அழகு சேர்த்தார்கள்.ஆண்டாள் -அழகான வெட்கத்துடன் -அருகில் இருக்க ,பெருமாள் மந்தகாசப் புன்னகையில் கண்கள் மலர
சிரித்துக் கொண்டிருந்தார்.



கன்னியாகுமரியில் இருந்து இஸ்கான் அன்பர்கள் பஜன்ஸ் பாடிக் கொண்டு வீதி உலா வந்தனர்.அவர்களை இதமான சாரல் -பன்னீர்த் தூவலாய் வரவேற்றது.அவர்கள் கேந்திராவினுள் வந்து,தாங்கள் எடுத்து வந்த விக்ரகங்களை வரிசைப் படுத்தி,ஆரத்தி எடுத்தனர்.மீண்டும் பஜன்ஸ் தொடர்ந்தது.



"ஹே முரளி ஸ்ரீதரா ராதே கிருஷ்ண ராதே ஷ்யாம் "

என்று செர்ந்திசைத்தனர் நம் அன்பு செல்வங்கள் ,இசை கேட்பதும் ,பூ முகங்களைப் பார்ப்பதும் ரம்மியமாக இருந்தது




குழந்தைகளுக்கான உலகம் எப்படி இருக்க வேண்டும்?என்பதை ஹர்ஷா அழகாக எடுத்துரைத்தார்.கண்ணன் பிறந்த நாளை -குழைந்தைகள் தின விழாவாக நாம் ஏன் கொண்டாடக் கூடாது என்ற ஆழமான கேள்வியை நம்முள் விதைத்துச் சென்றார்.யோசிக்க வேண்டிய விசயம்தான்




கண்ணணைத் துதி பாடும் ராதையாய் ஸ்ரீமதி அழகிய பாவங்களுடன் அபிநயித்தது மகிழ்வாய் இருந்தது . 



அன்பின் புன்னகையும்,மலரின் மென்மையும் ததும்ப -"கருணையினால் கசிந்து கண்ணீர் மல்கி ...."எனும் அழகான தலைப்பில் மனம் உருகக் கனிவானக் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ரஜினி.



மாறி வரும் பருவ காலங்களை -அதன் தன்மையை இதமாய் எடுத்துச் சொன்னவிதம் சிறப்பாக இருந்தது.மார்கழி மாதக் குளிர்ச்சியை இவரது பேச்சில் உணர்ந்தோம்.



திருமாலுக்கு படைக்கும் பிரசாதங்கள் என பதார்த்தங்களைப் பட்டியலிட்டுக் காட்டியது தேன்சுவையாய் இருந்தது.




கருணைக்கு அவர் கொடுத்த விளக்கம் -வியந்து பார்க்க வைத்தது. இரக்கம், பரிவு ,கனிவு என பக்குவமாய் சொன்னது ஈரம் உணர வைத்தது. இவரது கருத்துக்கள் அன்பால்ஆனது, ஆழமானது, ஆணித்தரமானது ,கருணையினால் ஆனது.பேச்சினில் கலந்தோம்.கரைந்தோம்.







இனி கவிதைகள் நேரம் ...........




காக்கைச் சிறகினிலே -கண்ணனின் கரிய நிறத்தைக் கண்டவன் பாரதி!

பார்க்கும் மரங்களெல்லாம் -கண்ணனின் பச்சை நிறம் தோன்றுவதாகச் சொன்னவன் பாரதி !

கேட்கும் ஒலியில் எல்லாம் -கண்ணனின் கீதம் இசைக்கக் கேட்டவன் பாரதி !



இத்தனைக்கும் மேலாக ................



தீக்குள் விரலை வைத்தால் -கண்ணணை தீண்டும் இன்பம் தோன்றுவதாகச் சொன்னவன் பாரதி!



இந்த உணர்வு அன்பின் ,ஆனந்தத்தின் உச்சம் என்று சொல்லலாம் .

கவிதையை வாசிக்கும் போதோ ......

இந்த பாடலை கேட்கும் போதோ .....

நாமும் பரவச நிலை அடைவோம் என்பது உண்மை. 


கண்ணணைத் தாயாகவும் ,தந்தையாகவும் 

தோழனாகவும் ,தோழியாகவும் 

எஜமானனாகவும் ,சேவகனாகவும் 

காதலனாகவும் ,காதலியாகவும் 

குலதேய்வமாகவும்,குழந்தையாகவும் 

இப்படி பலவாகவும் உருவகித்து,கவிதைகள் எழுதி,நம் மனசை வசபடுத்தி உள்ளான் பாரதி !

"அனைத்திலும் ஒன்றை .....ஒன்றை அனைத்திலுமாய்...."

காணும் அற்புதத்தை நமக்கு உணர்த்துகிறான் அவன். பாரதி -கண்ணனின் பக்தன் என்று நம் எல்லோர்க்கும் தெரியும்.பல சமயத்தில் கண்ணனின் பித்தனும் ஆகிவிடுகிறான். 




பாரதியின் கண்ணனுக்காக கண்ணனின் பாரதிக்காக,

தன் தோழமைக்காக ஒரு கவிதை வாசித்தார் ஆனந்தி .




அன்பின் ஆராதிப்பாய் 

அழகின் அற்புதமாய் 

அபூர்வ பொக்கிஷமாய் ......எனத் தொடங்கி 




ஆகாச சஞ்சாரத்தில் அதர்ஷம் நீ 

அனந்த சாகரத்தில் அமிர்தம் நீ .....என தொடர்ந்து 




என்றென்றும் நீ எனக்காக-

என் ஜீவிதத்தின் உயிர்ப்பாக ! என நிறைவு செய்தது 

அருமையாக இருந்தது.




அந்த காலத்தில் ......

கிருஷ்ணனுடன் ஆடி பாடி -நாட்களை கொண்டாடிட கோபியர்கள் கோகுலத்தில் கூட்டம் கூடினார்கள் ......என்று பல பாடல்களில் கேட்டிருக்கிறோம்.காட்சிகளாய் பார்த்திருக்கிறோம்.




இன்று .....இந்த நாளில் 

பிருந்தாவனத்தில் உள்ள யோக யுவ கேந்திராவில் 

எங்கள் கோபியர்கள் ஒன்று கூடி உள்ளார்கள் 

நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்கிறார்கள்.

கண்களுக்கு விருந்து படைக்கிறார்கள்.

காட்சிக்கு எழில் கூட்டுகிறார்கள் 

நம் சிந்தையை வசப் படுத்துகிறார்கள் 

அவர்கள் கோல்கள்-மட்டும் ஆடவில்லை 

கூடவே நம் மனசையும் ஆட வைக்கிறார்கள்.

ஆடவும், பாடவும்,கொண்டாடவுமே இந்தப் பண்டிகைகள் -என்பதை அழகாய் சித்தரிக்கிறார்கள்.

இவை எல்லாம் காணும் போது -கண்ணனுடன் கரைகிறோம் என்பதோடு நாம் காணாமல் போய் விடுகிறோம் என்பதே உண்மையாகிறது.




இதை எழுதும் இந்தப் பொழுதிலும் பாரதியின் கவித் துளிகள் நினைவில் மின்னுகிறது.




"உருவாய் அறிவில் ஒளிர்வாய் -கண்ணா 

உயிரின் அமுதாய் பொழிவாய் -கண்ணா 

கருவாய் என்னுள் வளர்வாய் -கண்ணா 

கமலத் திருவோ டிணைவாய் -கண்ணா 

இணைவாய் எனதாவியிலே -கண்ணா

இதயத்தினிலே அமர்வாய் -கண்ணா "




சுகமாக,சுதந்திரமாக,சுந்தரமாக வந்து அமர்ந்து கொண்டான் மாயக் கண்ணன் வேணுகானம் இசைத்த வண்ணம் !







இதன் தொடர்ச்சியாக ........





எங்கும் நிறைந்திருக்கும் பிரியத்திற்குரியப் பால கோபாலனை 

உற்சாகமாக அழைத்து களி நடனம் ஆடினார்கள்.





இசை,நடனம் -ஒரு வகை தியானம் அல்லவா ?




தியானம் 'ஒன்றும் நிலை 'என்று சொல்லலாம் 

ஒன்றும் அற்ற நிலை 'என்றும் சொல்லலாம் .

மாஸ்டர் அவர்களின் அதிவேக ஆட்டத்தில் லயித்து காணாமல் ஆனோம் .


இதனைத் தொடர்ந்து இஸ்கான் அன்பர்கள் பஜன்ஸ் பாடிக் கொண்டிருந்தனர் .

"இசை கேட்டால் புவி அசைந்தாடும் " எனும் போது நாங்கள் எம்மாத்திரம் ?

"பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் 

பாடலுடன் தேன்கனி சேர வேண்டும் 

கலைகளைத் தெய்வமாய் காண வேண்டும் "

-கண்ணதாசன் அனுபவத்தில் மலர்ந்த

இந்தப் பாடலுக்கு ஏற்ப சில காட்சிகள் ஆனந்தமாய் அமைந்தன.




"பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும் 

கேட்கும் இசைவிருந்தால் கைகள் தாளம் இடும் "





ஆடலுடன் பாடலைக் கேட்டு ,ரசித்து ,தன் வயமாகும் நிலை பேரானந்த நிலை அல்லவா ?




நிறைவின் நிறைவாக "கோகுலாஷ்டமி " பற்றி மாஸ்டர் சிவா அவர்கள் அற்புதமான உரை நிகழ்த்தினார்கள் .




அவற்றிலிருந்து சில முத்துக்கள் .............



கோகுலாஷ்டமின்னா "கிருஷ்ணன் பிறந்த நாள்ன்னு" நினைக்கிறோம்.இது ஒரு பக்கம் சரி தான்.இருந்தாலும் இதன் உண்மையான உள்ளார்ந்த அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். கிருஷ்ணன் ஒரு ஆள் இல்லை, மனதின் பரி பக்குவ நிலையே கிருஷ்ணன் ,கிருஷ்ணன் என்றால் கிருஷி செய்ய வந்தவன் எனப்பொருள்.கிருஷி என்றால் 


"உழுதல்"எனபொருள். இன்னும் பார்த்தோம்னா மனசை அழ உழுது ,இளக்கமாக்கி,பக்குவப்படுத்தி,பண்படுத்துறதுகுன்னு வந்த அவதாரமே கிருஷ்ணன். மனதின் உச்சக்கட்ட ஆனந்த நிலைக்கே கிருஷ்ணன் எனப்பெயர். அந்த நாள்ல கோபிகள் எல்லாரும் ஒண்னு சேர்ந்து ஆடிப் பாடி சந்தோஷமா இருக்கணும்னு சொல்லுவாங்க. அரி வேறு அயன் வேறு என எண்ணலாகாது. "அரியும்அல்ல அயனுமல்ல அப்புறத்தில் அப்புறம் கருமை செம்மை வென்மையைக் கடந்து நின்ற காரணம்".எனும் சிவ வாக்கினைக் கருத்தில் கொண்டு கிருஷ்ண நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும், இளக்கமான மனசுக்கு எல்லாமே சாத்தியப்படும் !......





இன்னைக்கு வழுக்கு மரம் ஏறும் போட்டி ஏன் வைக்கிறாங்க தெரியுமா ?




வாழ்க்கையும் கிட்டதட்ட வழுக்கு மரம் மாதிரி தான்.

சாண் ஏறினா முழம் சறுக்கும். ஆனாலும் முயற்சி பண்ணி மேலே ஏறி,வெற்றி பெறத் தான் வேணும்னு குறிப்பாகச் சொல்றதுக்குதான் வழுக்குமரம்! வழுக்குமரத்துல வழுக்கக்கூடிய பொருள்களைத் தடவி இருப்பாங்க, சுண்ணாம்பைக் கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டு ஏறினால் சீக்கிரம் ஏறிவிடலாம் இது ஒரு யுக்தி. அதுபோல வாழ்க்கை எனும் வழுக்குமரத்தில் "பாசம்" எனும் பசை இருக்கும் இதனை நீக்க "கிருஷ்ணா" எனும் கெமிக்களைப் பயன்படுத்தினால் கஷ்டப்படாமல் கரையேறி விடலாம்........இத யுக்திக்கு "பக்தியோகம்னு" பெயர். வாழ்க்கை எனும் வழுக்குமரத்தில் ஏறி கரை சேர்ந்துவிட்டால் நமக்குக் கிடைக்கும் பரிசு என்ன தெரியுமா????....."முக்தி"






இப்படியாகச் சில செய்திகளை இனிமையாகப் பகிர்ந்து கொண்டார்.




விழா நிறைவு பெற்றுத் திரும்புகையில் ....




மறுபடியும் சாரல் !- மனதை நனைத்துச் சென்றது ஆனந்தமாய் !






அன்புடன்
ஆனந்தி 






Thursday, August 16, 2012

சிவராஜயோகி பிரம்மபாந்தவன்




இன்று சுதந்திர தினம்! 


யோகயுவகேந்திராவின் சுதந்திரதின வாழ்த்துக்கள்!


நாம் இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்குத் தனது வாழ்வையே அர்ப்பணித்த அந்தத் தியாக ஆத்மாக்களை நினைத்துப் பார்த்து நன்றி செலுத்துகிறது யோகயுவகேந்திரா.


தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்! .. 

எனச் சுதந்திரம் பெறப் பெற்றப் பாடுகளைப் பற்றிச் சொல்கிறான் ,வாழையடி வாழையாக வந்த சித்தர் கூட்டத்தில் தானும் ஒருவன் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட எட்டயப்புரத்துச் சித்தன் பாரதி.


எனதுப் பால்யப் பருவத்தில்,சுதந்திரப்போராட்ட வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது வீரன் பகத்சிங், சுகதேவ்,ராஜகுரு, செங்கோட்டைச்சிங்கம் வீரன் வாஞ்சிநாதன்,போன்ற வீர இளைஞர்களின் தியாகம் எனக்குள் ஒரு துடிப்பை உருவாக்கி இருக்கிறது,


வரியாக, நெல் கட்டமாட்டேன் எனச் சூளுரைத்த நெல் கட்டான் செவல் பூலித்தேவன் ,......வீரபாண்டியக்கட்டபொம்மன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி,மருது சகோதரர்கள், வீரமங்கை வேலு நாச்சியார், போன்ற அஞ்சா நெஞ்சர்களின் வீரமான மன உறுதியாலேயே நாம் சுதந்திரம் பெற்றிருக்கிறோம். 


இதையெல்லாம் அரசியல்வாதிகள் மேடை மேடையாகப் பேசுகிறார்களே நமது வலைத்தளத்தில் இது நமக்கு எதுக்கு என நீங்கள் கேட்பது 
எனக்குப் புரிகிறது.



நண்பர்களே! 


சுதந்திரப் போராட்டத்தில் இந்த வீரப் படையுடன் ஒரு "யோகப்படையும் " களமிறங்கியிருக்கிறது, ஞானச்சித்தன் பாரதி, ஆன்மீக விஞ்ஞானி அரவிந்தர், சுப்ரமணிய சிவா, நீல கண்ட பிரமச்சாரி....போன்ற இந்த யோக கூட்டத்தில் ஒரு முக்கியமான சிவராஜயோகியைப் பற்றியதுதான் இந்தப் பதிவு...


பராசக்தி தவிர மற்ற யாருக்கும் தான் அடிமையில்லை என்று தன்னைப் பறை சாற்றிக்கொண்டவன் ஞானச்சித்தன் பாரதி.........ஆனால் அவனே மூவருக்குத் தான் அடிமையென்றும், அதிலும் ஒரு சிவராஜ யோகியின் பாதங்களுக்கு நான் அடிமையென்றும் பறைசாற்றி இருக்கிறான் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா????? அந்த சிவராஜயோகியைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?



மண்ணிய புகழ் பாரத தேவி 

தன்னிருத் தாழினைக்கடிமைக்காரன்

இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம்

திலக முனிக்கொத்த அடிமைக்காரன்,

வெய்ய சிறைக்குள்ளே புன்னகையோடுபோம்

அய்யன் பூவேந்திரனுக்கு அடிமைக்காரன்,

காலர் முன் நிற்பினும் மெய்தவறாத

பாலர்தனக் கடிமைக்காரன்

தான் தணலிட்டாலும் தருமமிடறாத 

பிரம்மபாந்தவன் தாழினைக்கடிமைக்காரன். ......என்கிறான் பாரதி




இந்தப்பாடலில் தான், பராசக்திக்கு அடிமை,திலகருக்கு அடிமை, பூவேந்திரனுக்கு அடிமை எனக்கூறிய பாரதி.......பிரம்மபாந்தவன் எனும் இருபத்து மூன்று வயதே நிரம்பிய இளைஞரின் பாதங்களுக்குத் தான் அடிமை எனக்கூறுகிறான்.




யார் இந்த பிரம்ம பாந்தவன்??




திலகர் நடத்திய பத்திரிகையில் "கருப்பு ஆடுகளை பலியிட்டது போதும் இனி என் அன்னை காளிக்கு வெள்ளை ஆடுகளை பலியிடுங்கள்" என மறைமுகமாக ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கட்டுரை எழுதுகிறார் இளம் சிவராஜ யோகியான பிரம்மபாந்தவன். இதனை உணர்ந்துகொண்ட ஆங்கில அரசு, திலகர் மீதும்,அலுவகத்தில் அச்சடிக்கும்வேலை செய்து வரும் பூவேந்திரன் எனும் இளைஞர் மீதும், யோகி பிரம்மபாந்தவன் மீதும் வழக்குத் தொடர்கிறது.....

இதில் யோகி பிரம்மபாந்தவனை நாடு கடத்த உத்தரவிடுகிறது ஆங்கில அரசு.......இளம் யோகியை மாட்டு வண்டியில் ஏற்றி நாட்டின் எல்லைக்கு அழைத்து செல்கின்றனர் ஆங்கிலத் தளபதிகள் . "எனதுயிர் யோகபூமியான பாரத மண்ணிற்கேச் சொந்தம், இந்தப் பூதவுடலை மட்டுமே நீங்கள் அந்நிய மண்ணிற்கு எடுத்துச் செல்ல முடியும்,எனது மெய்யுடலை நீங்கள் கொண்டு செல்ல இயலாது" எனச் சூளுரைத்தவாறு தான் கற்ற யோக வித்தையினைப் பயன்படுத்தி அந்த மாட்டுவண்டியிலேயே "ஜீவசமாதி" அடைகிறார் பிரம்மபாந்தவன். நினைத்தவுடன் தனது உயிரைப் பிரித்துவிடுகின்ற இந்த அமரத்துவ நிலை கண்டு அதிர்ச்சியடைகிறார்கள் ஆங்கில அதிகாரிகள்.




என்ன நண்பர்களே!!! 

"பாம்பின் கால் பாம்பறியும்" எனும் நிலைக்கேற்ப யோக வித்தை உணர்ந்த பாரதி, பிரம்மபாந்தவன் என்னும் இந்த சிவராஜயோகியின் பாதங்களுக்கு தான் அடிமை எனக்கூறியதில் வியப்பேதுமில்லையே!!!!!!!!!


இந்தப் புண்ணியநாளில் பிரம்மபாந்தவன் என்னும் அந்த யோகியின் பொற்பாதங்களை வணங்குவதை பெருமையாகக் கருதுகிறது யோகயுவகேந்திரா


ஜெய்ஹிந்த்!




Saturday, August 11, 2012

தத்தரிகிட..தத்தரிகிட..தித்தோம்





புகைக்கு நடுவே இருந்து ஒரு வன்மம்

மனதிற்குள் கனன்று கொண்டிருக்கிறது ..



திருப்பி அடிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

விடாது மூளைக்குள் ஒரு சிலந்தியின் குரல் …



என்றோ கற்றுக்கொண்ட

கெட்ட வார்த்தைகள்

தொண்டைகுழி தாண்டி நாவிற்குள்

சற்று முன்பு தூண்டிலில் இருந்து பிரிக்கப்பட்ட மீன் போல

வெடுக்கென்று தெறித்து விழ தருணம் பார்த்து

இறந்தது போல நடித்துக் கொண்டிருகின்றன …



யாரையும் காயப்படுத்திவிடுவேனோ

என மௌனித்திருந்த


பேசப்படாத வார்த்தைகள் மொத்தமும்

பரிசீலனைக்கு அருகதை இல்லாதவர்களுக்காய்

தன்னைத் தானே வதைத்துக் கொள்வது

படு முட்டாள்தனமான காரியமென

மீண்டுமொருமுறை காட்டிவிட்டன …



நான் காயப்படக்கூடும் என்ற

எவ்விதப் பிரக்ஞையுமின்றி

என்னைப் பற்றிய மதிப்பீடொன்று 

எய்யப்பட்டு விடும் முன்

எதிராளியை வீழ்த்த என்ன அவதூறு

பேசலாமென்ற சிந்தனையிலேயே

அர்த்தமற்ற வார்த்தைகளால்

நிரம்பிவிடுகின்றன 

எல்லா உரையாடல்களும் …



கவனிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்

எனது ஒவ்வொரு செயல்களுக்குமாய்

தரம்பிரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்

என் படுக்கை அறையின் ஜன்னல்கள்

களவாடப்பட்டிருக்கின்றன

எனது வார்த்தைகள் யார் யாராலோ தீர்மானிக்கப்படுகின்றன

எனது நாட்குறிப்புகள் எவனோ ஒருவனால்

எழுதப்படுகின்றன

குடைக்குள் வர மறுக்கின்றன

மழையும் மழை சார்ந்த எதுவும் …



கண்ணீரும் கவிதையும் இசையும்

தருவிக்கப்பட்ட புன்னகையும்

நிரந்தர ஆறுதல்கள் இல்லையென்று

தெரிந்துபோன

இச்சபிக்கப்பட்ட தருணத்தில்------மீண்டும்

ரௌத்திரம் பழகத் துவங்கியிருக்கிறேன்.......

Tuesday, August 7, 2012