Total Pageviews

Sunday, June 26, 2011

என்ன படிக்கலாம்


மாணவர்கள் எதிர் காலத்திற்கு ஓர் அற்புதமான வழி காட்டி இதோ !


பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வு முடிவுகள் வெளி வந்து தற்போது மாணவர்கள் தங்களின் அடுத்த கட்ட படிப்பிற்கு ஆயத்தமாகி வருகின்றனர் . 


இந்நிலையில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சில குழப்பங்கள் வரலாம்.அடுத்து என்ன படிப்பது அல்லது என்ன படிக்க வைப்பது ,சிறந்த எதிர் காலத்திற்கு உகந்த படிப்பு எது .என்ன படிப்பு படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பது போன்ற கேள்விகள் எழும் .



இது போன்ற குழப்பங்களுக்கு தீர்வாக ஒரு அருமையான பட்டியல் காணக் கிடைத்தது .அதை இங்கே பகிர்கின்றேன் .


இந்த பட்டியலில் பத்தாம் வகுப்பிலிருந்தே அடுத்தடுத்து என்ன படிக்கலாம் படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பது போன்ற விபரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது .



கண்டிப்பாக இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை .படத்தின் மேல் சொடுக்கி படத்தை பெரிதாக்கி பார்க்கலாம் .

நன்றி;பாலா

Monday, June 20, 2011

உணர்ந்ததைச் சொல்கிறேன்





நண்பீர்! உமக்கு ஓர் 
உண்மையைச் சொல்கின்றேன்,
உணர்ந்ததைச் சொல்கின்றேன்.

ஒருநாள் கூட உணவில்லாமல்
ஓட்டும் திறமை இல்லா திருப்பதும்
இருநாள் விழித்து உணர்வில்லாமல்
இயல்பாய் வாழ முடியாதிருப்பதும்
மரணம் என்பதை மற்றவர்க்கே என
மனம் தெளியாது கனவில் இருப்பதும்
ஒருநாள் விழித்து;உடலை வெறுத்து
உலகைக் கனவாய்க் காண்பதும் காண்பீர்!

சொத்தும் சுகமும் சேர்ப்பதற்கென்று
சுகத்தை இழந்து பித்தாய்த் திரிந்து,
மொத்தமும் ஆசைப் பற்றினில் வீழும்
மூட மனம்இதை யார் அறிவாரோ?
வித்தை,விருந்து;வேடிக்கைச் சடங்கு
வேடம் போடும் நாடக வாழ்க்கை
எத்தனை காலம் நடக்கும் என்பது
சத்குரு எழுதும் காலக் கணக்கு!

வாழும்வரையில் காண்பது யாவும்
வரவோ செலவோ யாதும் இங்கு
சூழ்வது விதிப் பயன் என்றே நூலோர்
சொன்னதை மறந்து நின்றதில் கரைந்தோம்!
ஊழ்வினை நம்மை உலகினில் பிறக்க 
உந்துதல் செய்தது’ என்பதை மறைக்கச்
சூழ்நிலை தோன்றி சூழ்ச்சி செய்தது;
சூழ்ச்சியில் நாமும் தோற்றுப் போனோம்!
  
நாமாய் விரும்பி வந்தோமில்லை;
நடுவழி வந்தபின் திரும்பிடத் தெரியோம்!
தானாய் எல்லாம் நடத்திக்கொண்டு
தனியாய் நம்மைப் படைத்தனன் போலும்!
ஊனாய் உடலைப் பெற்றது முதலே
ஊர்ந்தோம்;தவழ்ந்தோம்;எழுந்தோம்;நடந்தோம்;
ஆனாலும்நாம் உலகிற் பிறந்த
அவசியத்தை அறிந்தோம் இல்லை!
  
அங்கும் இங்கும் அலைவதும்;அலைந்து
அமைதியைத் தேடி உறங்கி எழுவதும்
எங்கும் எதிலும் ’நான்’ ‘நான்’ என்றே
நம்மை முதலாய் எண்ணிக் கொள்வதும்;
பொங்கும் அலைபோல் புதுப்புதுக் கனவில்
புகுந்து,விழித்துப் புலம்பிக் கொள்வதும்
இங்கெம் வாழ்க்கை இயல்பாய்ப் போனது;
இதைத்தான் அருணை குரு எழுதி வைத்தானோ?

உண்ணவும், உறங்கவும் உறங்கி எழுந்து
உழலவும் உணரவும் ஆண்பெண் உறவை
எண்ணவும் ஏங்கவும் இலக்கில்லாமல்
இயங்கவும் மயங்கவும் இவையல்லாமல்
பண்ணிடும் வேறு காரியம் இங்கு  
பலவிதம் இருந்தும் மனிதருக்கதனால்
புண்ணியம் ஏதும் பூப்பது  உண்டோ?
புவியில் இதைத்தான் புரியாதுள்ளோம்




அத்தனும் அம்மையும் ஆசைப் பட்டதில்
ஆரம்பம் முதலே உயிர்சிறை பெற்றது;
பத்து மாதம் கருவறைச் சிறையில்
பட்டபின் உடலுள் வாழ்நாள் முழுதும்!
இரத்தமும் சதையும் வற்றிவிடாமல்
இராப் பகலாகஉறங்கியும் விழித்தும்
நித்தமும் இரைப் பை நிரப்புவதல்லால்
நிஜமாய் இங்கு சாதிப்ப தென்ன?

                                                           



எத்தனை நேரம் மனிதர் மண்ணில்

இரவு,பகலாய் விழித்திட முடியும்?
எத்தனை காலம் இருந்து மண்ணில்
இரவை, பகலைக் கழித்திட முடியும்?
எத்தனை நாட்கள் பட்டினி இருந்து
இயல்பாய் மனிதர் வாழ்ந்திட இயலும்?
எத்தனை பணம்தான் இருந்திட்டாலும்
இறப்பு இறுதியில் தருவது என்ன?



உண்ணல்,ஓய்தல்,உறங்கல்,எழுதல்
ஒவ்வொருநாளும் இவையே தொடர்தல்;
மண்ணில் இதுதான் நிரந்தர சுழற்சி;
மற்றெவை இந்த மாந்தரின் உடைமை?
உண்ணுதற்கெனவே உலகிற்பிறந்து
உடலை வளர்த்து,மண்ணில் புதையப்
பண்ணும் இந்தப் பம்பர வாழ்க்கை
பலயுகங் கள்எனச் சுழல்வதுதானே?

கடவுள் என்பது நிஜமா?,பொய்யா?
காரணமான கற்பனைப் பொருளா?
திடப் பொருளான வடிவம் உண்டா?
திரவப் பொருள்போல் உருவம் உடைத்தா?
ஜடப் பொருள் இந்த மானுடம் மற்றும்
ஜராசரம் அனைத்தும் சேர்ந்த வடிவா?
விடை தெரியாத குழப்பம்;எனினும்
விஷய ஞானிபோல் உரைசெய்கின்றோம்!

அண்டம் என்னும் அகண்ட வெளியில்
அணுவெனத் திகழும் பூமிப் பந்தில்
அண்டிய இந்த மானுடப் புள்ளியுள்
அணுவிலும் அணுவாய் ஆகிய ஒருவன்
கண்டு வருவது கனவுகள்;அதில்தான்
காட்சிகள் இந்த மானுட வாழ்க்கை!
கண்கள் மூடினால் தான்நிஜம் தெரியும்;
இறையின் நோக்கம் யாதெனப் புரியும்!

அதுவரை எண்ணம் ஆயிரமாயிரம்;
அவற்றின் இடையே,குழப்பம்;தெளிவு
எதுவரை இந்த நாடகம் என்பது
குருவின் பிடியில் இருக்கும் முடிவு!
இதனிடை நானோர் இறைவனைப்போல
எண்ணிக்கொண்டு எழுத்துகள் படைத்து
அதனிடை வாழும் அரைகுறைப் பாமரன்
அறிவீர்;என்போல் நீங்களும் தானே!

தோற்றம்,வளர்ச்சி.தொடர்ந்து முதுமை
தோல்வியும் வெற்றியும் நிலைகொள்ளாமல்
மாற்றம் என்பது மண்ணில் தோன்றும்
மாந்தருக்கெல்லாம் மாறா விதிதான்!
ஆற்றலும் அறிவும் அறிவில்லாமையும்
அவனவன் விதியில் எழுதியபடியே
ஏற்றமும் இரக்கமும் ஏழ்மையும் செல்வமும்
குருமார்கள் வழங்கிய நன்கொடை; கண்டேன்!

எங்கோ இருந்த இவ்வுயிர் தன்னை
இப்புவி மண்ணில் இழுத்து வைத்தவன்
எங்கோ இருந்து எழுதிடும் நாடகம்;
இதில் என்பாத்திரம்;’நான்’ எனும் சூத்திரம்!
நமக்குள்ளே இருக்கும் உணர்வுகள்;
உலக மக்களின் உள்ளங்கள் எல்லாம்
தங்கி இருக்கும் தத்துவம்; எனினும்
தனித்தனி நாடக அரங்கேற்றங்கள்!

உலகம் நமக்கோர் நாடக மேடை;
உறவுகள்,நண்பர்கள் போடும் வேடம்;
பலப் பல விதமாய் காட்சிகள் மாற்றம்;
பாசம் நேசம்;மோசம், வேஷம்;
நிலையில்லாத நிஜமும் பொய்யும்
நினைவில் மலர்ந்து கனவாய் உதிர
தொலைதூரம்போல் மரணம்;ஆனால்
தொடரும் நிழலாய்அது நம் அருகில்!

நடந்து முடிந்த நாடகக் கூத்தின்
நாயகர்களாக நாம் இருந்தாலும்
நடத்தி வைத்தவன் சத்குருவே;அவனே
நடிப்பின் இயக்கம் செய்தவன்;உண்மை!
நடக்கப் போகும் முடிவும் அவன்தான்
நாம்அவன் கருவி;நலமும் தீங்கும்
கடந்த காலம்;நம் செயல் களுக்குக்
காரணம் எல்லாம் அவன்தான்;கேளீர்!

Saturday, June 18, 2011

குடல்வால் - உபயோகமில்லாத உடலுறுப்பா?



மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு உறுப்பு உள்ளது. இந்த உறுப்பு நான்கு அங்குல நீளம் மற்றும் அரை அங்குல விட்டம் உடையது, ஒரு புழுவின் வடிவத்தில் பை போன்று இருக்கும்,


குடல்வால் இல்லாமல் மனிதனால் உயிர்வாழ இயலும்.   எனவே இது மனிதனின் உடலில் இருக்கும் ஒரு தேவையற்ற உறுப்பாக இதுவரை கருதப்பட்டது,  எதேச்சையாக வயிற்றில் அறுவை சிகிட்சை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் நம்மிடம் சொல்லாமலேயேக் கூட இந்தக் குடல் வாலையும் வெட்டி எடுத்து விடுவார்களாம்.  இந்தக் குடல்வாலின் நன்மைகள் என்ன தெரியுமா?


மனிதனின் உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் உண்டு . இவற்றில் நன்மை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு. தீமை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு.

நன்மைசெய்யும் பாக்டீரியாக்கள் உணவை செரிக்கவைப்பதோடு மட்டுமல்லாமல், மனித உடலுக்குத் தீமை செய்யும் பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கிறது. நன்மை செய்யும் பாக்டிரியாக்களைச் செழிக்க செய்வதும் கூட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகமாக்குவதற்கு சமமான செயலே.




இவ்வாறு செழிப்படைந்த நன்மைசெய்யும் பாக்டிரியாக்கள் உயிர் படலங்களாகக் குடல்வாலை ஆக்கிரமித்து கொண்டு வாழ்கின்றன.   குடல்வாலே, தீமைசெய்யும் பாக்டீரியாக்களைத் தடுக்கும் அரணாக செயல்படுகிறது. எனவே குடல்வால் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்கு என அழைக்கப் படுகிறது.
பெருங்குடலில் வசிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கழிசல்,பேதி போன்றநோய்களின்போது வெளியேறிவிடுகின்றன.

ஒரு-மண்டலம் ஆண்டிபயாட்டிக் மருந்து சாப்பிட்டபிறகும் இதேநிலை ஏற்படுகிறது. அதன் பிறகு குடலுக்குத் தேவையான நன்மை தரும் பாக்டிரியாக்களை சப்ளைசெய்வது அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வாலாகும்.  

ஆறு வருடங்களுக்கு முன்பே இதனை பலமுறை நமது யோகவகுப்புகளில் கூறி இருந்தாலும், டியூக் பல்கலைக்கழக பரிணாம உயிரியல் வல்லுநர்கள் குடல்வாலின் இதே பயனை-அண்மையில் வெளியிட்டிருக்கிறார்கள்.

||Although regarded as a vestigial organ but recent studies indicate that the appendix has different functions like immune function, maintaining of gut flora, etc 
Read more: http://en.wikipedia.org/wiki/Vermiform_appendix ||
||These researchers at the 'Duke University Medical School' believe they have sufficient evidence to back up their theory, in that the appendix appears to help produce and protect the good bacteria in the intestines. The appendix, they say, acts like a "good bacteria factory" that "cultivates and preserves" good bacteria nutrition to help keep your body healthy. There is much more bacteria (or germs) inside your body than cells. Most of this bacteria that resides inside your body is needed to help you digest, absorb, and eliminate your food. These friendly microbes also provide your skin with a protective barrier. 
Read more: http://www.disabled-world.com/artman/publish/appendix.shtml ||

குடல்வால் ஆட்டுக்குத்தாடியை போல ஒரு அனாவசிய-உறுப்பு அல்ல நண்பர்களே!  நவீன காலத்தில் சுகாதாரம் அற்ற சூழலில் வாழும் நம்மவர்களுக்கும் இந்த குடல்வால் ஒரு-பாதுகாப்பு சாதனமாக இருக்கிறது என்பதே உண்மை.  நமது உடல் என்பது மூலப் பிரகிருதியால் தெளிவாகப் படைக்கப்பட்ட ஒரு ஒப்பற்ற இயந்திரம்.  இந்த உடலினுள் உபயோகமில்லாத உறுப்பு என்று எதுவுமே இல்லை நண்பர்களே!  


ஒரு உறுப்பின் உபயோகம் நமக்குத் தெரியவில்லை என்பதற்காக அதனை உபயோகமற்ற உறுப்பென அறுத்து விடுவது அறிவுடைமையாகாது.  ஒரு உறுப்பை எடுத்தாலும் உயிர்வாழ முடியும் என்பதற்காக அந்த உறுப்பை அகற்றி விடுவது எந்த வகையில் நியாயம்? குடல்வால்வைப் போலவே மண்ணீரலும்,  டான்சிலும் பரிசோதனைக்கு உட்படுத்தப் படவேண்டிய உடலுறுப்புகளே என்பது எனது கருத்து. 


இந்தக் குடல்வால் ஒரே நாளிலெல்லாம் கெட்டுப்போகாது நண்பர்களே!

குடல்வால் நோயை நமது உடல் குறைந்தது ஒரு வருடத்திற்கும் மேலாகவே அறிகுறிகளாக வெளிப்படுத்துகிறது.  உடல் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இதனை நாம் அலட்சியப் படுத்துகிறோம். விளைவு வேறு வழியில்லாமல் படைப்பின் ரகசியத்தில் அரிதாகக் கிடைத்த குடல்வாலை இழக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.


யோக மருத்துவப் பயிற்சிகளை,   ஆதுரஸ்ய ரோக நிவாரணம், ஸ்வஸ்த ஸம்ரக்ஷணம்,   என இரு வகையாகப் பிரிக்கலாம்.  அதாவது நோய் வந்த பிறகு குணமாக்குவதற்காகச் செய்யப்படும் பயிற்சிகள்,  நோய் வருவதற்கு முன்பே ஆரோக்கியத்தை நிலைப் படுத்துவதற்காகச் செய்யப்படும் பயிற்சிகள்.  இவற்றுள் குடல்வால் நோய்க்காகச் செய்யக்கூடியப் பயிற்சிகள் ,நோய் வருவதற்கு முன்பாகவே செய்யக்கூடிய ஸ்வஸ்த ஸம்ரக்சனம் வகையைச் சேர்ந்தது.
                

பெருங்குடலின் சக்திக்குறைவே குடல் வால் அலர்ஜியை ஏற்படுத்துகிறது.    "சர்வ ரோகா மலவாச்சகா" எனக்கூறுவது குடல்வால் அலர்ஜி நோய்க்கு முற்றும் பொருந்தக் கூடிய வார்த்தையாகும்,  மலச்சிக்கலே குடல்வால் அலர்ஜிக்கு முக்கியகாரனமாக அமைகிறது.

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது.  தண்ணீர் அதிகம் குடிப்பது. நார்சத்துள்ள உணவுகளை உண்பது போன்ற வாழ்க்கை முறைகளால் குடல்வால் அலர்ஜி வராமல் பர்த்துக்கொள்ளமுடியும்.    

லெட்சைகெட்டக்கீரையை வாரத்திற்கு இரு முறையேனும் உணவாகப்பயன்படுத்தலாம். சுண்டைக்காயையும்,பிரண்டையை-யும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் வால் அலர்ஜி என்ற நோய்க்கு இடம் கொடாமல் வாழமுடியும்.  

அதுவும் சனிக்கிழமைகளில் சுண்டைவற்றல் குழம்பும் பிரண்டைத்துவையலும் வயிற்றிலுள்ள ஆமத்தைக் குறைத்து குடல்வால் அலர்ஜியை விரட்டும்.

மலமிளக்கிகளை அதிகமாகப் பயன்படுத்துவதும் குடல்வால் அலர்ஜி வருவதற்கு ஒரு காரணம் என்பதால் மலமிளக்கிகளைப் பயன்படுத்துபவர்கள்,தங்கள் உடல் பிரகிருதியைக் கருத்தில் கொண்டு செயல்படவும்.  எனிமா கேன்களைப் பயன்படுத்துவது சிறந்தது.

யோகத்தில் அக்னிசாரக் கிரியையும்,   நெளலிக்கிரியையும் குடல்வால் அலர்ஜியை வரவிடாமல் காக்கும் என்பதில் சந்தேகமில்லை.  

ஆசனங்களில் பவன முக்தாசனம், அபானாசனம் போன்றவை மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்,  நவுக்கானம்,  ஹம்சாசனம் போன்றவை வயிற்றிலுள்ள நோய்த்தொற்றுகளை வெளியேற்றுவதில் பெரும்பங்கு வகிக்கும்.   சூஜி முத்திரை, பெருங்குடல் பாதைகளை சுத்தப்படுத்தி அங்குள்ள நச்சுக்களை வெளியேற்றும்.  

சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்
துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்
கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே.  - திருமூலர்

நினைவுகள் முடிவதில்லை






இன்பத்தில் மூழ்கி இளமையைத் தொலைத்து
இனித்ததும் சில காலம் - பின்
துன்பத்தில் ஆழ்ந்து தொலைத்ததை எண்ணித்
துடித்ததும் சில காலம்……

நன்மையைத் தீமையைப் பிரித்தறியாமல்
நடந்ததும் சில காலம்-அதன்
பின்னணியில் ஓர் மடமையை உணர்ந்து
பிழைத்ததும் சில காலம்…

விரும்பியதெல்லாம் வெற்றிகள் ஆகிட
விளைந்ததும் சில காலம்-அவை
அரும்பிய கனவெனத் தெளிந்தபின் மனது
அவிந்ததும் சிலகாலம்!

அழகிய நட்புகள் பழகிய விதத்தில்
அலைந்ததும் சில காலம்-அது
அழுகிடும் பொருளாய் ஆன பின்னாலே
அழுததும் சில காலம்

கரும்பினித்ததுபோல் கவிதைகள் சுவைத்துக்
கனிந்ததும் சில காலம்-ஒரு
இரும்பும் துருவாய் ஆவதைப் பார்த்து
இளைத்ததும் சில காலம்!



செழுமனம் படைத்த சத்குரு நிழலில்
சேர்ந்ததும் சில காலம்-பயன்
முழுதென வரும்முன் ஊழ்வினை தடுத்து
முறித்ததும் சில காலம்!


இழிநிலை கொண்டோர் உறவினில் இரங்கி
இணைந்ததும் சில காலம்-வீண்
பழிகளில் சூழ்ந்து வழிதெரியாமல்
பதைத்ததும் சில காலம்!

நிரம்பிய அறத்தில் இருப்பதை இரைத்து
நிமிர்ந்ததும் சில காலம்-புகழ்
வரம்பினில் வாழ்க்கைச் சுமைகளை ஏற்று
வளைந்ததும் சில காலம்!

தாய்போல் பேயரைத் தாங்கித் திரிந்து
தாழ்ந்ததும் சில காலம்-தினம்
ஓய்வில்லாமல் உழைத்துடல் இளைத்து
ஓய்ந்ததும் சில காலம்!

கருமே கங்கள் கலைவது போல்துயர்
கலைந்ததும் சில காலம்-அட!
நிரந்தரம் என்று நம்பிய உறவும்
நிலைத்ததும் சில காலம்

நிகழ்வதும் மறைவதும் சிருஷ்டியின் நிஜமாய்
நிலைப்பதும் நிகழ்காலம்-இதை
அகழ்ந்து ணராமல் சுகங்களைத் தேடி
அலைவதும் அலங் கோலம்!

சென்றவை யாவும் செலவினம் ஆக்கி
சிந்தையைச் செதுக்கு கின்றேன் - அதில்
நின்றவை நினைவின் நிஜமென வடித்து
நிம்மதி ஒதுக்கு கின்றேன்!

இன்றதில் வென்றேன்;நேற்றதில் தோற்றேன்;
இரண்டும் எனதில்லை-நான்
நின்றதை எண்ணி எழுதுகின்றேன்;பல
நினைவுகள்....முடிவதில்லை….